“நியூரா லிங்க்”கின் டெலிபதி

மனித மூளைகளில் பதிக்கக்கூடிய கணினி இடைத்தளங்களை (Brain Computer Interface) உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நியூராலிங்க் நிறுவனம் கடந்த 28 ஜனவரி 2024ல் ஒரு நோயாளியின் மூளையில் அதன் முதல் இடைத்தளத்தைப் பதித்துள்ளது.

Image; Wikimedia Commons

டெஸ்லா” மற்றும் “ஸ்பேஸ் எக்ஸ்” நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் நியூரா லிங்க் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “டெலிபதி” யால் வெறும் எண்ணத்தின் மூலமாகவே ஒரு மனிதன் திறன் பேசியையோ அல்லது கணினியையோ இயங்க வைக்கமுடியும் எனக் கூறியுள்ளார். கை,கால்களை இழந்தவர்கள் இதன் ஆரம்பகாலப் பயனாளிகளாக இருப்பார்கள் என அவர் மேலும் கூறுகிறார். இந்த தயாரிப்பின் ஆரம்பநிலை முடிவுகள் நரம்பணுக்கள் மின்புலத்தூண்டல் பெறுவதை சாத்தியமாக்கியுள்ளன. நரம்பணுக்கள் மின்புலத்தூண்டுதல் பெற்று தகவல்களை முறைப்படுத்தி மூளை மற்றும் உடலுக்கு அனுப்புபவை.

இந்த டெலிபதி தொழில் நுட்பம் பக்கவாதம், தண்டுவடம்,மற்றும் நரம்புகள் பாதிப்புகளுக்கு பயன்படக்கூடும். ஏனெனில் மேற்கண்ட நோய்களில் மூளை செயல்பட்டாலும் தகவல் பகுதி மட்டும் பாதிக்கப்பட்டிருக்கும். கை, கால்கள் செயல்படுதல் மற்றும் நினைவாற்றல் செயல்படுதலுக்கும் பின்னாட்களில் பயன்படக்கூடும். மூளையின் பார்வை உணர்வுப்பகுதி (Visual Cortex) சரியாக இருந்தாலும் தகவல் பகுதி பாதிக்கப்பட்டிருப்பதால் பார்வை இழப்பையும் இது சரிசெய்யக்கூடும்.

ஆனால் இந்த தொழில்நுட்பத்தால் ஆபத்துகளும் ஏற்படலாம். வலிப்பு, தொற்று, ரத்தப்போக்கு, முதலியன அவற்றுள் சில. சில வேளைகளில் மனித உடல் இந்த இடைத்தளத்தை ஏற்காமலும் போகலாம். இயற்கையில் நமது மூளைக்கும் உடல் உறுப்புகளுக்குமிடையே உள்ள தகவல் பரிமாற்றம் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த செயற்கை இடைத்தளத்தால் தவறான தகவல் பரிமாற்றம் ஏற்படவும் வாய்ப்புண்டு.

நியூராலிங்க் நிறுவனத்தால் “மூளைச் சில்லு” (இடைத்தளம்) பதிக்கப்பட்ட முதல் நோயாளி முழுமையாக குணமடைந்து ஒரு கணினி சுட்டியை எண்ணங்களின் மூலம் கட்டுப்படுத்துகிறார் என 19.2.2024 அன்று எலன் மஸ்க் கூறியுள்ளார். “அவரது முன்னேற்றம் நன்றாக உள்ளது. எவ்வித பாதிப்பு உபாதைகளுமின்றி முழுமையாக குணமடைந்துள்ளார். அவர் கணினி சுட்டியை எண்ணங்களின் மூலமே கணினித்திரையைச் சுற்றி நகர்த்துகிறார்” என அவர் மேலும் கூறுகிறார்.

இந்த ஆய்வில் உடலின் இயக்கம் தொடர்பான பணிகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதியில் ஒரு ரோபோ மூலம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஒரு கணினி இடைத்தளம் பதிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் இடைத்தளங்களை அறுவை சிகிச்சை மூலம் விரைவாகப் பதியச் செய்து உடல் பருமன், மதியிறுக்கம் (autism), மன அழுத்தம், மற்றும் மனச்சிதைவு போன்ற நோய்களைக் குணப்படுத்தலாம் எனவும் எலன் மஸ்க் கூறியுள்ளார்.

Posted in Science | Tagged , , , , | Leave a comment

 முசாப் அபூ தோஹா கவிதைகள்

Mosab Abu Toha  முசாப்  அபூ தோஹா 31 வயது நிரம்பிய   பாலஸ்தீனக் கவிஞர்.

போரால் சிதைந்திருக்கும் இன்றைய காசாவின் நிலையைப் பிரதிபலிக்கும் அவரது  இரு கவிதைகள்.

Photo: Wikimedia Commons

மீண்டும் பிறப்போம்

                   ********** 

    நாங்கள் இறந்த பிறகும் 

    எங்கள் எலும்புகள் தொடர்ந்து வளரும் 

    ஆலிவ் மரத்தின் வேர்களோடும் 

    ஆரஞ்சு மரத்தின் வேர்களோடும் 

    பின்னிப் பிணைந்துகொள்ள 

    யாபா நகரக்  கடலின்   இனிமையில் நனைய 

    ஒருநாள் 

    நாங்கள் மீண்டும் பிறப்போம் 

    நீங்கள் அங்கு இல்லாதபோது. 


    2. இல்லாமையின் இருப்பு 

                    **********

    இன்னமும் மெத்தையில் படுத்திருக்கிறாயா 

    குர் ஆன்  படித்துக்கொண்டு ?

    இன்னமும் நீ மூக்குக்கண்ணாடி கொண்டுதான் 

    படிக்கிறாயா?

    அல்லது 

    அந்தக் கண்ணாடி வெடிகுண்டுப் புகையால் 

    மங்கிவிட்டதா?

    இன்னமும் நீ அப்பாவுடன் சேர்ந்து 

    காலைக்காப்பி குடிக்கிறாயா?

    அல்லது 

    எரிபொருள் தீர்ந்து விட்டதா?

    இன்னமும் உனக்குத் தெரியுமா 

    எனக்கு மிகவும் பிடித்தமான கேக் செய்வது 

    எப்படி என்று?

    சென்ற மாதம் எனது முப்பத்தொன்றாவது பிறந்த நாள் 

    வெடிகுண்டுகளால் சிதிலமடைந்த வீட்டில் 

    எனக்கு பிறந்த நாள் கேக் செய்து கொடுப்பதாக 

    நீ வாக்களித்தாய் 

    அச்சமடைந்த எனக்கு நீ அடைக்கலம் 

    நான் இறக்கப் போகிறேன் 

    இன்னமும் நீ உயிருடனா இருக்கிறாய்?

    Posted in Translated poems | Tagged | Leave a comment

    வசந்த காலம்

    Photo: Wikimedia commons

    வசந்த காலம்

    வசந்தம் சீக்கிரமே வருகிறது

    ப்ளம் மரம் ஒரு இரவிலே பூத்துவிட்டது

    பறவைகளின் ஒலியோடு இதமான காற்று

    கிளறிய மண்ணில்

    எல்லாப்பக்கங்களிலும் ஒளி படர்வதுபோல்

    சூரியனின் ஓவியத்தை யாரோ ஒருவர் வரைந்துள்ளார்

    ஆனால்

    பின்னணி மண்ணாய் இருப்பதால்

    சூரியன் கருப்பாகத் தெரிகிறது

    அங்கே வரைந்தவரின் கையெழுத்துமில்லை

    அச்சோ! விரைவில் எல்லாமே மறைந்துவிடும்

    பறவைகளின் ஒலி,மென்மையான மலர்கள்

    முடிவில்

    மண் கூட வரைந்தவரின் பெயரை மறைத்துவிடும்.

    போகட்டும்

    சித்திரம் வரைந்தவரின் சிந்தையிலே

    கொண்டாட்டத்தின் குதூகலம்

    எத்தனை அழகு இந்த மலர்கள்

    மலர்கள்………

    வாழ்வை மீட்டெடுப்பதன் அடையாளச்சின்னங்கள்

    ஆசையோடு வருகின்றன பறவைகள்.


    நோபல் பரிசு பெற்ற Louise Elisabeth Glück (1943-2023) ன் Primavera என்கிற கவிதையின் தமிழ் வடிவம்

    Posted in Translated poems | Tagged | Leave a comment

    நான்கு வயதாகப்போகும் குழந்தையின் நாட்குறிப்பிலிருந்து…

    Photo: Wikimedia Commons

    நாளை புண்களைக் கட்டியிருந்த துணிகள்
    அகற்றப்பட்டுவிடும்
    வியப்பாக இருக்கிறது எனக்கு
    எஞ்சியிருக்கும் என் ஒரு கண்ணால்
    என்னால் பாதி ஆரஞ்சைப் பார்க்கமுடியுமா?
    பாதி ஆப்பிளை?
    என் அம்மாவின் பாதி முகத்தை?

    நான் துப்பாக்கி ரவையைப் பார்க்கவில்லை
    ஆனால்
    என் தலையில் அது வெடித்தபோது
    அதன் வலியை உணர்ந்தேன்
    பெரிய துப்பாக்கியுடன் இருந்த
    அந்த சிப்பாயின் உருவம் மறையவில்லை
    அந்த தடுமாறும் கைகள்
    அவனின் அந்தப் பார்வை
    என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை

    மூடிய என் கண்களால்
    அவனை நன்றாக என்னால் பார்க்கமுடியும்
    எங்கள் தலைகளுக்குள் அது இருக்கும்
    நாங்கள் ஒவ்வொருவரும்
    ஒரு ஜோடி கண்கள் வைத்திருக்கிறோம்
    நாங்கள் இழந்துவிட்ட கண்களை ஈடு செய்ய

    அடுத்த மாதம்
    எனது பிறந்த நாளின்போது
    எனக்கு புத்தம்புதிய கண்ணாடிக்கண்கள் இருக்கும்
    பொருட்கள் உருண்டையாகவும்
    நடுவில் தடிமனாகவும் தெரியலாம்
    எனது பளிங்கு எல்லாவற்றாலும் பார்க்கிறேன்
    அவை இந்த உலகை விநோதமாகக் காட்டுகின்றன

    ஒரு ஒன்பது மாதக் குழந்தையும்
    ஒரு கண்ணை இழந்துவிட்டதாக அறிகிறேன்
    அந்த சிப்பாய்
    அவனையும் சுட்டுவிட்டாரோ என வியக்கிறேன்
    தன் கண்களைப் பார்க்கும் சின்னஞ்சிறுமிகளை
    அந்த சிப்பாய் தேடுகிறான்
    நான் பெரியவன்,
    நான்குவயதை நெருங்குகிறேன்
    வேண்டிய அளவு வாழ்க்கையைத் தெரிந்து கொண்டேன்
    ஆனால்
    அவளோ ஏதுமறியா சின்னஞ்சிறு குழந்தை.

    Hanan Daoud Mikhael Ashrawi

    பாலஸ்தீன அரசியல், பண்பாடு,இலக்கியம் பற்றிய இவரது எழுத்துக்கள் பல பரிசுகளை வென்றுள்ளன. From the diary of an almost four year old என்கிற கவிதையின் தமிழ் வடிவம். 

    Posted in Translated poems | Tagged | Leave a comment

    வௌவால்கள் 

    என் ஜன்னல்களில் வௌவால்கள்
    என் வார்த்தைகளை உறிஞ்சுகின்றன
    என் வீட்டு முகப்பில் வௌவால்கள்
    செய்தித்தாள்களுக்குப் பின்னால்
    மூலைகளில் என் பாதச்சுவடுகளைத்
    தொடர்கின்றன
    என் தலையசைப்புக்கள் ஒவ்வொன்றையும்
    உற்றுநோக்குகின்றன


    நாற்காலிக்குப் பின்னாலிருந்து
    என்னைக் கண்காணிக்கின்றன
    தெருக்களில் அவை என்னைத் தொடர்கின்றன
    என் கண்களின் அசைவுகளை
    புத்தகங்களை
    இளம்பெண்களின் கால்களை
    கண்காணிக்கின்றன,

    என் அண்டைவீட்டுக்காரரின்
    பலகணியில் வௌவால்கள்
    மின்னணுக் கருவிகள் சுவற்றில் மறைந்துள்ளன
    இப்போது
    வௌவால்கள் தற்கொலையின் விளிம்பில்
    பகல் வெளிச்சத்திற்காக நான்
    பாதை தோண்டுகிறேன்

    Samih al Quasim (1939-2014)

    பாலஸ்தீனக் கவிஞர். பாலஸ்தீனர்களின் உரிமைக்காகக்  குரல் கொடுத்து பல முறை சிறை சென்றவர். அவரது Bats என்கிற கவிதையின் தமிழ் வடிவம்.  

    Posted in Translated poems | Tagged | Leave a comment

    இது போதும் எனக்கு 

    Photo: Wikimedia Commons

    இது போதும் எனக்கு 

    இந்த பூமியில் நான் இறந்தால் போதும் 

    அவளுள் அந்த மண்ணில் புதைந்து,

    உருகி, மறைந்து 

    பின் 

    மலராக முகிழ்க்கும்போது  

    என் நாட்டின் குழந்தை அந்த மலரோடு விளையாடும் 

    எனது நாட்டின் அணைப்பில் 

    நான் இருந்தால் போதும் 

    கையளவு மண்ணாய் 

    புல்லின் இதழாய் 

    ஒரு மலராய் இருந்தால்  போதும்.

    Fadwa Tuqan (1917-2003)

    பாலஸ்தீனக் கவிதாயினி அரபுக் கவிதைகளில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை வெளிப்படுத்தியவர். அவரது Enough for me  என்கிற கவிதையின்  தமிழ் வடிவம்.

    Posted in Translated poems | Tagged , | Leave a comment

    பாலஸ்தீனம் (இந்த பூமியில் எது வாழ்க்கையைப் பயனுள்ளதாக்கும்)

    Photo: Wikimedia commons

    இந்த பூமி
    பயனுள்ள வாழ்க்கை வாழ
    எல்லாம் தருகிறது
    ஏப்ரல் மாதத்தின் தயங்கிய வருகை
    விடியலில் ரொட்டியின் வாசனை
    ஆண்களைப் பற்றி
    ஒரு பெண்ணின் வசைமாரி
    எஸ்கிலஸின் கவிதைகள்
    காதலின் நடுங்கிய ஆரம்பம்
    பாறையின் பாசி
    குழல் கயிற்றில் அம்மாக்களின் நடனம்
    ஆக்கிரமிப்பாளரது நினைவுகளின் அச்சம்

    இந்த பூமி
    பயனுள்ள வாழ்க்கை வாழ
    எல்லாம் தருகிறது
    செப்டம்பர் மாதத்தின் விரைவான முடிவு
    நாற்பதைக் கடந்த பெண்
    தன் ஆப்ரிகாட் பழங்களுடன்
    சிறையில் ஒரு மணி நேர சூரிய ஒளி
    பூச்சிகளின் கூட்டமாய்த் தோன்றும் மேகங்கள்
    தடம் அழிவதுபற்றி சிரிப்பவர்களைப்பார்த்து
    மக்களின் கைதட்டல்
    பாடல்களைப் பற்றிய கொடுங்கோலனின் பயம்

    இந்த பூமி
    பயனுள்ள வாழ்க்கை வாழ
    எல்லாம் தருகிறது
    பூமிப்பெண்
    எல்லா ஆரம்பங்களின்
    எல்லா முடிவுகளின் தாய்
    அவள் பெயர் பாலஸ்தீனம்
    இன்னமும் அவளுக்கு
    பாலஸ்தீனம் என்றுதான் பெயர்
    என் சீமாட்டி
    நீங்கள்தான் என் சீமாட்டி
    நான் வாழத் தகுதியானவன்.

    மஹ்மூத் தர்வீஷ் (1941-2008) பாலஸ்தீனத்தின் தேசிய கவிஞர்.

    “பாலஸ்தீனம் (இந்த பூமியில் எது வாழ்க்கையைப் பயனுள்ளதாக்கும்)” என்ற அவரது கவிதையின் தமிழாக்கம்.

    பாலஸ்தீனத்தின் இன்றைய  நிலை

    Photo: Wikimedia commons
    Posted in Translated short story | Tagged , , | Leave a comment

    எல்லாம் இனிய சுகமே!

    அமெரிக்கப் பாடல் ஆசிரியர், பாடகி டேலர் ஸ்விஃப்ட்டின் (Taylor Swift) வாழ்க்கையும் , அவரது பாடல்களும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் உளவியல் மற்றும் இலக்கியப் பாடத்திட்டங்களில் இடம் பெற்றுள்ளன. அரிசோனா ஸ்டேட், ஸ்டான்போர்ட், டெக்ஸாஸ், நியூ யார்க், பெல்ஜியத்தில் உள்ள Ghent பல்கலைக்கழகம் முதலியன இவரது பாடல்களை பாடத்திட்டங்களில் சேர்த்துள்ளன. இவர் 14 வயது முதல் பாடல் எழுதிவருகிறார். இந்த ஆண்டு Eras Tour என்கிற இசைப்பயணத்தைத் தொடங்கி கோடிக்கணக்கான ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுவருவதுடன் அமெரிக்கப் பொருளாதாரத்தில் சற்றே தாக்கம் கொடுக்குமளவுக்கு இந்தப் பயணத்தின் டிக்கெட் விற்பனை இருந்துள்ளது. இவரது All Too Well என்கிற பாடலின் மொழியாக்கம் இது. இதே பெயரில் இவர் ஒரு குறும்படமும் (காண்க) இயக்கியுள்ளார்.

    Taylor Swift. Photo: Wikimedia Commons

    எல்லாம் இனிய சுகமே!

    நான் உன்னோடு கதவு வழியே நடந்தேன்
    காற்று குளிர்ச்சியாக இருந்தது
    ஆனால்
    எதனாலோ எப்படியோ
    வீடு போலவே உணர்ந்தேன்
    உன் சகோதரி வீட்டில் நான் விட்டு வந்த scarf ஐ
    நீ இப்போதும் உன் இழுப்பறையில் வைத்திருக்கிறாய்

    ஓ! உன் இனிய குணமும்
    என் விழி அகன்ற பார்வையும்
    நாங்கள் காரில் பாடிக்கொண்டே
    நகரத்துக்குள் மறைகிறோம்
    இலையுதிர்கால இலைகள் துண்டு துண்டாய்
    கீழே விழுகின்றன
    நீண்ட நாட்களுக்குப் பின்னர் கூட
    என்னால்
    அக்காட்சியை மனதால் படம் பிடிக்க முடியும்,

    எனக்குத்தெரியும்
    அந்தக்காட்சிகள் மறைந்து வெகுகாலமாகிவிட்டது
    அந்த மாயக் காட்சி இப்போது இங்கு இல்லை
    ஏதோ நான் நன்றாயிருப்பதாகத் தோன்றும்
    ஆனால் நான் நன்றாகவேயில்லை.

    ஏனெனில்
    நாங்கள் மீண்டும்
    அந்த சிறு நகரத் தெருவில் இருக்கிறோம்
    என்னை நீ பார்த்துவிட்டதால்
    கிட்டத்தட்ட சாலையின் சிவப்பு விளக்கை
    மறந்துவிட்டாய்
    நான் அங்கே இருக்கிறேன்
    காற்றில் அலையும் கூந்தலோடு
    எல்லாமே எனக்கு நன்றாக நினைவிலுள்ளது

    அலமாரித் தட்டில் புகைப்படத்தொகுப்பு
    சிவந்த உன் கன்னங்கள்
    கண்ணாடி அணிந்த சிறு குழந்தையாய்
    நீ இரட்டைப் படுக்கையில்
    நீ மட்டைப்பந்து அணியில் இருந்ததுபற்றி
    உன் அம்மா கூறிய கதைகள்
    உன் எதிர்காலம் நான்தான் என்று எண்ணி
    உன் கடந்த காலத்தை என்னிடம் சொன்னாய்.

    நீண்டகாலமாகிவிட்டது அது நடந்து
    என்னால் செய்யக்கூடியது வேறு ஏதுமில்லை.
    நீண்ட நாட்களாக உன்னை நான் மறந்துவிட்டேன்
    நான் ஏன் உன்னை மறக்கவேண்டும்

    ஏனெனில்
    நாம் மீண்டும் நடுநிசியில் உள்ளோம்
    குளிர்சாதனப்பெட்டியின் வெளிச்சத்தில்
    சமையலறையைச் சுற்றி நடனமாடுகிறோம்
    படிக்கட்டுகளின் கீழே நான்
    ஆம்
    எல்லாமே எனக்கு நன்றாக நினைவிருக்கிறது

    நாம் தவறாகப் புரிந்துகொண்டோமோ?
    நான் அதிகம் எதிர்பார்த்திருக்கலாம்
    ஆனால்
    இது ஒரு தலைசிறந்த படைப்பாக இருக்கும்
    அது கிழிக்கப்படும்வரை
    பயந்து ஓடினேன் நான் அங்கே
    எனக்கு எல்லாம் நன்றாக நினைவிருக்கிறது

    நீ மீண்டும் என்னை அழைத்தாய்
    வாக்குறுதியை மீறுவதுபோல்
    என் உள்ளம் உடைந்துபோக
    நேர்மையாக இருப்பதாய்க் காட்டிக்கொண்டு
    மிகவும் இயல்பாகக் கொடுமைப்படுத்துகிறாய்
    நான் இங்கே ஒரு கசங்கிய காகிதமாய்க் கிடக்கிறேன்
    ஏனெனில்
    எனக்கு எல்லாமே எல்லாமே
    எல்லாமே நன்றாக நினைவிருக்கிறது.

    காலம் ஓடாது
    அது என்னை
    இயக்கமறச் செய்துவிட்டதுபோல் உணர்கிறேன்
    நான் மீண்டும் பழைய ‘நானாக’ விரும்புகிறேன்
    ஆனால் இன்னும் அதைத் தேட முயல்கிறேன்
    கட்டம் போட்ட சட்டையணிந்த
    பகல் இரவுகளுக்குப்பின்
    என்னை உனதாக்கிக்கொண்டாய்
    இப்போது
    என் உடைமைகளைத் திருப்ப அனுப்பிவிடு
    வீட்டுக்குத் தனியே நான் போகிறேன்
    ஆனால் என் பழைய scarf ஐ வைத்துக்கொள்
    ஏனெனில்
    அது உனக்கு வெகுளித்தனத்தை நினைவூட்டும்
    அது என்னைப்போல் மணம் வீசும்
    அதிலிருந்து நீ விடுபடமுடியாது
    ஏனெனில்
    உனக்கு எல்லாம் நன்றாக நினைவில் இருக்கிறது
    நான் உன்னைக் காதலித்த நிலைக்கு
    மீண்டும் நாம் வந்துவிட்டோம்
    நீ அறிந்த ஒரு விஷயத்தை
    இழப்பதற்கு முன் இருந்த நிலைக்கு வந்துவிட்டோம்
    இது அரிதான விஷயம்
    நான் அங்கு இருந்தேன்
    எனக்கு அது நன்றாக நினைவிருக்கிறது

    காற்றில் அலையும் என் கூந்தல்
    நீ அங்கு இருந்தாய்
    உனக்கு எல்லாம் நினைவிருக்கிறது
    படிகளின் கீழ் நீ இருந்தாய்
    உனக்கு எல்லாம் நினைவில் உள்ளது
    இது அரிதான விஷயம்
    நான் அங்கு இருந்தேன்
    எனக்கு அது நன்றாக நினைவிருக்கிறது
    எல்லாம் இனிய சுகமே!

                                                     **********
    
    Posted in Translated poems | Tagged , | Leave a comment

    நான் உங்கள் தரவுப்பெட்டகம் இல்லை

    Photo:Abhay Xaxa. Photo: Facebook/Abhay Flavian Xaxa

    நான் உங்கள் தரவுப்பெட்டகம் இல்லை 

    உங்களது ஓட்டு  வங்கியும் இல்லை 

    நான் உங்கள் செயல் திட்டமில்லை 

    கவர்ச்சியான அருங்காட்சியகப் பொருளுமில்லை    

    அறுவடைக்காக காத்திருக்கும் ஆன்மாவுமில்லை 

    உங்கள் கோட்பாடுகளைச் சோதிக்கும் 

    சோதனைச் சாலையுமில்லை   

    உங்களது பீரங்கிக்கான தீனியில்லை நான் 

    கண்ணுக்குப்புலப்படாத வேலையாளுமில்லை 

    இந்தியக்குடியிருப்பு மையத்தில்

    நான் உங்களுக்கு ஒரு  பொழுதுபோக்கில்லை    

    நான் உங்களது 

        களமில்லை 

        கூட்டமில்லை 

        வரலாறுமில்லை 

        உதவியாளில்லை 

       குற்ற உணர்வில்லை 

       உங்கள் வெற்றிக்கான  பதக்கங்களுமில்லை 

    நீங்கள் குறிக்கும் அடையாளங்களை

    உங்களது தீர்ப்புகளை

    ஆவணங்களை 

    விளக்கங்களை 

    மாதிரிகளை 

    தலைவர்களை 

    புரவலர்களை 

    ஏற்றுக்கொள்ளமாட்டேன் 

    எல்லாவற்றையும் நிராகரிப்பதோடு 

    எதிர்த்தும் நிற்பேன்

    ஏனெனில் 

    அவை என் இருப்பை 

    என் காட்சித் திறத்தை  

    எனது இடத்தை மறுக்கின்றன 

    உங்களது வார்த்தைகள் 

    வரைபடங்கள் 

    உருவங்கள் 

    குறிகாட்டிகள் 

    இவையெல்லாமே 

    ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி 

    உங்களை சிம்மாசனத்திலேற்றியிருக்கின்றன 

    அங்கிருந்து நீங்கள் 

    என்னை அற்பமாய்ப் பார்க்கிறீர்கள்  

    எனவே 

    எனது படத்தை நானே வரைகிறேன் 

    எனது இலக்கணத்தை நானே கண்டுபிடிக்கிறேன் 

    எனது போரை எதிர்கொள்ள 

    நானே எனது ஆயுதங்களை உருவாக்குகிறேன் 

    எனக்காக 

    என் மக்களுக்காக 

    என் உலகத்துக்காக 

    என் பழங்குடியின சுயத்துக்காக.


    37 வயதில் இறந்துபோன Abhay Flavian Xaxa   சட்டிஸ்கர் மாநிலத்தைச்   சேர்ந்த   ஆதிவாசிகளின் உரிமைப்போராளி மற்றும் சமூகவியலாளர்.

    அவரது I am not your data  என்ற கவிதையின் தமிழ் வடிவம்.

    Posted in Translated poems | Tagged , , | Leave a comment

    சொர்க்கத்தில் வரவேற்பு

    மரணத்துக்குப்பின் மனிதர் நிலை பற்றி நமது வேத, புராணங்கள் விளக்குகின்றன. இது தொடர்பான அறிவியல் ஆராய்ச்சிகள் இன்றளவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் வேத புராண விளக்கங்களும் அறிவியல் ஆராய்ச்சிகளின் முடிவுகளும் பல இடங்களில் ஒத்துப்போகின்றன. இப்பதிவில் மரணத்துக்குப்பின் ஜீவாத்மாவுக்கு வைகுந்தத்தில் கிடைக்கும் வரவேற்பைப்பற்றிப் பார்க்கலாம்.


    வைகுந்தத்தில் ஜீவாத்மாக்களுக்கு கிடைக்கும் வரவேற்பை நம்மாழ்வார் தமது ‘திருவாய்மொழி’ பத்தாம்பத்து ஒன்பதாம் திருவாய்மொழியில் அழகாக வர்ணித்துள்ளார்.அந்தப் பாசுரங்கள் எளிய தமிழில்…….

    10.9.1

    என்றும் புகழோடு நிலைபெற்றிருக்கும் 

    என் அப்பன் நாராயணன் 

    அப்பெருமானின் அடியார்கள் வருவதுகண்டு 

    எங்கும் பரந்த வானில் 

    அழகுமிகு மேகங்கள் முழங்கின 

    ஆழ்கடலின் அலைக்கைகள் கூத்தாடின 

    ஏழு உலகங்களும் அழகு செய்தன.  


    10.9.2

    நாராயணனின்  அடியார்களைக்கண்டு மகிழ்ந்த 

    நன்னீர் மேகங்களின் தோற்றம் 

    உயர்ந்த வானிலெல்லாம் 

    பூரண பொற்குடம்  நிறைத்தாற்போலிருந்தன 

    நீர்நிறைந்த கடல்கள் 

    நிலைத்த ஒலியை எழுப்பின 

    எல்லா உலகத்தோரும் 

    உயர்ந்த தோரணங்களைக்கட்டி 

    எங்கும் தொழுதார்கள்.


    10.9.3

    எல்லா உலகத்தோரும் 

    அன்றொரு நாள்  

    இவ்வுலகளந்த பெருமானின் முன் வந்து

    தூபமேந்தி 

    நல்ல மலர்மழை பொழிந்து தொழுதார்கள் 

    முனிவர்களெல்லாம் எதிரே தோன்றி 

    இருபுறமும் நின்றுகொண்டு 

    ‘வைகுந்தம் செல்வோர்க்கு வழி இதுவே”

    ‘எழுந்தருளவேண்டும்’ என்றார்கள்.. 


    10.9.4

    தேன் துளிர்க்கும் துளசிமாலையணிந்த மாதவன் 

    அப்பெருமானின் அடியார்களுக்கு 

    தேவர்கள் இருப்பிடங்கள் வகுத்தார்கள் 

    பன்னிரு சூரியர்கள் 

    ‘வருக’ வருக’ என வரவேற்றனர் 

    அலைகடல்  முழக்கம்போல் 

    முரசுகள் ஒலித்தன.   


    10.9.5

    தேவர்கள் 

    அவரவர் இருப்பிட வாசல் வந்து

    மாதவனின் அடியார்களே!

    ‘இங்கே எழுந்தருளுங்கள்’ என்று கூறி 

    தம் யாகங்களின் பலன்களை 

    அவர்கள் திருவடிகளில் சமர்ப்பித்தனர்.

    அப்போது…

    கின்னரரும்,கருடர்களும் 

    கீதங்களிசைத்தனர். 


    10.9.6

    யாக பலன்களைச் சமர்ப்பித்தவுடன் 

    மணம் மிகுந்த இனிய புகை 

    எங்கும் வீசிக்கொண்டிருக்க 

    தெய்வீக இசைக்கருவிகளையும் 

    வலம்புரிச்சங்குகளையும் சிலர் இசைத்தனர் 

    வாள்  போன்று ஒளிமிக்க 

    கண்களையுடைய பெண்கள் 

    ‘சக்ரபாணியின் அடியார்களே 

    பரமபத ஆட்சியை ஏற்க வாருங்கள்” என 

    மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர்.


    10.9.7

     திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமான், 

    ஒளிமிக்க மணி மகுடம் அணிந்து 

    குடந்தையிலே கண்வளரும் கோபாலன்.

    அப்பெருமானின் அடியார்களை 

    பெண்கள் மகிழ்ந்து வாழ்த்தியவுடன் 

    மருத்துக்களும், எட்டு வசுக்களும் 

    எங்கும் தொடர்ந்து 

    செல்லுமிடமெல்லாம் பல்லாண்டு பாடினர்.


    10.9.8

    பகவான் கோவிந்தனை 

    எல்லாப் பிறப்பிலும் தொழுது வருபவர்

    அந்த வானவர் 

    அப்பெருமானுக்குச் சிறப்பு  செய்யவே 

    முடிசூட்டிக்கொண்ட அவர்கள் 

    நல்வரவு கூற 

    அடியார்கள் வைகுண்டவாசல் வந்தடைந்தனர்  

    அழகுமிகு மாதவனின் வைகுண்டத்தில் 

    அலங்காரக்கொடிகள் பறக்கும் 

    நெடிய மதில் உண்டு 

    வைகுண்டம் புகுவதற்கு 

    நெடுமதில் சூழ்ந்த கோபுரத்துத்  தலைவாசலை

    அடியார்கள் அடைந்தார்கள்.  


    10.9.9

    வைகுண்ட நாதனின் இனிய பக்தர்கள் 

    சொர்க்க வாசலில் நுழைகையிலே 

    வாயிற்காவலர்கள் 

    ‘எங்கள் தலைவர்களே’ எனக்கூறி 

    வரவேற்றார்கள்.

    அதன்பின்……

    தேவர்களும் முனிவர்களும் 

    பெருமகிழ்ச்சியோடு வரவேற்றனர் 

    ‘பூவுலகில் பிறந்தவர்கள்’

    வைகுண்டமெனும் பரமபதம் அடைவது 

    பெரும் பாக்கியம்  என வியந்து மகிழ்ந்தனர்.

    (மண்ணவர் விண்ணவர் ஆயினர்)


    10.9.10

    வேதங்கள் கூறும் வானவர் 

    வைகுண்டம் வந்தடையும் அடியார்கள்

    தங்கள் பாக்கியம் எனக்கருதி 

    அவர்களின் திருவடிகளைப் புனித நீரால்  

    தூய்மை செய்தனர். 

    முழுநிலா முகம் படைத்த பெண்கள் 

    சுண்ணப்பொடிகளையும் 

    திருவடிநிலைகளையும் 

    நிறை கும்பங்களையும் 

    மங்கலதீபங்களையும் ஏந்திக்கொண்டு   

    எதிரே வந்தனர். 


    10.9.11

    வரவேற்கப்பட்ட வைகுண்டநாதனின் அடியார்கள் 

    திருமாமணிமண்டபத்திலே 

    முடிவில்லாப் பேரின்பமுடைய வானவரோடு 

    ஒருங்கிணைந்தனர்.

    (ஜீவன் பரமனுடன் ஒன்றுபடும் இக்காட்சியை பூஞ்சோலைகள் 

      நிறைந்த குருகூர் சடகோபரின் பத்துப் பாசுரங்கள் விளக்குகின்றன.

     .இவற்றைக் கற்க வல்லோர் முனிவர்களாவார்கள் )   

                                       “ஓம் நமோ நாராயணாய” 

    Posted in Thiruvaimozhi | Tagged , | Leave a comment