சொர்க்கத்தில் வரவேற்பு

மரணத்துக்குப்பின் மனிதர் நிலை பற்றி நமது வேத, புராணங்கள் விளக்குகின்றன. இது தொடர்பான அறிவியல் ஆராய்ச்சிகள் இன்றளவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் வேத புராண விளக்கங்களும் அறிவியல் ஆராய்ச்சிகளின் முடிவுகளும் பல இடங்களில் ஒத்துப்போகின்றன. இப்பதிவில் மரணத்துக்குப்பின் ஜீவாத்மாவுக்கு வைகுந்தத்தில் கிடைக்கும் வரவேற்பைப்பற்றிப் பார்க்கலாம்.


வைகுந்தத்தில் ஜீவாத்மாக்களுக்கு கிடைக்கும் வரவேற்பை நம்மாழ்வார் தமது ‘திருவாய்மொழி’ பத்தாம்பத்து ஒன்பதாம் திருவாய்மொழியில் அழகாக வர்ணித்துள்ளார்.அந்தப் பாசுரங்கள் எளிய தமிழில்…….

10.9.1

என்றும் புகழோடு நிலைபெற்றிருக்கும் 

என் அப்பன் நாராயணன் 

அப்பெருமானின் அடியார்கள் வருவதுகண்டு 

எங்கும் பரந்த வானில் 

அழகுமிகு மேகங்கள் முழங்கின 

ஆழ்கடலின் அலைக்கைகள் கூத்தாடின 

ஏழு உலகங்களும் அழகு செய்தன.  


10.9.2

நாராயணனின்  அடியார்களைக்கண்டு மகிழ்ந்த 

நன்னீர் மேகங்களின் தோற்றம் 

உயர்ந்த வானிலெல்லாம் 

பூரண பொற்குடம்  நிறைத்தாற்போலிருந்தன 

நீர்நிறைந்த கடல்கள் 

நிலைத்த ஒலியை எழுப்பின 

எல்லா உலகத்தோரும் 

உயர்ந்த தோரணங்களைக்கட்டி 

எங்கும் தொழுதார்கள்.


10.9.3

எல்லா உலகத்தோரும் 

அன்றொரு நாள்  

இவ்வுலகளந்த பெருமானின் முன் வந்து

தூபமேந்தி 

நல்ல மலர்மழை பொழிந்து தொழுதார்கள் 

முனிவர்களெல்லாம் எதிரே தோன்றி 

இருபுறமும் நின்றுகொண்டு 

‘வைகுந்தம் செல்வோர்க்கு வழி இதுவே”

‘எழுந்தருளவேண்டும்’ என்றார்கள்.. 


10.9.4

தேன் துளிர்க்கும் துளசிமாலையணிந்த மாதவன் 

அப்பெருமானின் அடியார்களுக்கு 

தேவர்கள் இருப்பிடங்கள் வகுத்தார்கள் 

பன்னிரு சூரியர்கள் 

‘வருக’ வருக’ என வரவேற்றனர் 

அலைகடல்  முழக்கம்போல் 

முரசுகள் ஒலித்தன.   


10.9.5

தேவர்கள் 

அவரவர் இருப்பிட வாசல் வந்து

மாதவனின் அடியார்களே!

‘இங்கே எழுந்தருளுங்கள்’ என்று கூறி 

தம் யாகங்களின் பலன்களை 

அவர்கள் திருவடிகளில் சமர்ப்பித்தனர்.

அப்போது…

கின்னரரும்,கருடர்களும் 

கீதங்களிசைத்தனர். 


10.9.6

யாக பலன்களைச் சமர்ப்பித்தவுடன் 

மணம் மிகுந்த இனிய புகை 

எங்கும் வீசிக்கொண்டிருக்க 

தெய்வீக இசைக்கருவிகளையும் 

வலம்புரிச்சங்குகளையும் சிலர் இசைத்தனர் 

வாள்  போன்று ஒளிமிக்க 

கண்களையுடைய பெண்கள் 

‘சக்ரபாணியின் அடியார்களே 

பரமபத ஆட்சியை ஏற்க வாருங்கள்” என 

மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர்.


10.9.7

 திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமான், 

ஒளிமிக்க மணி மகுடம் அணிந்து 

குடந்தையிலே கண்வளரும் கோபாலன்.

அப்பெருமானின் அடியார்களை 

பெண்கள் மகிழ்ந்து வாழ்த்தியவுடன் 

மருத்துக்களும், எட்டு வசுக்களும் 

எங்கும் தொடர்ந்து 

செல்லுமிடமெல்லாம் பல்லாண்டு பாடினர்.


10.9.8

பகவான் கோவிந்தனை 

எல்லாப் பிறப்பிலும் தொழுது வருபவர்

அந்த வானவர் 

அப்பெருமானுக்குச் சிறப்பு  செய்யவே 

முடிசூட்டிக்கொண்ட அவர்கள் 

நல்வரவு கூற 

அடியார்கள் வைகுண்டவாசல் வந்தடைந்தனர்  

அழகுமிகு மாதவனின் வைகுண்டத்தில் 

அலங்காரக்கொடிகள் பறக்கும் 

நெடிய மதில் உண்டு 

வைகுண்டம் புகுவதற்கு 

நெடுமதில் சூழ்ந்த கோபுரத்துத்  தலைவாசலை

அடியார்கள் அடைந்தார்கள்.  


10.9.9

வைகுண்ட நாதனின் இனிய பக்தர்கள் 

சொர்க்க வாசலில் நுழைகையிலே 

வாயிற்காவலர்கள் 

‘எங்கள் தலைவர்களே’ எனக்கூறி 

வரவேற்றார்கள்.

அதன்பின்……

தேவர்களும் முனிவர்களும் 

பெருமகிழ்ச்சியோடு வரவேற்றனர் 

‘பூவுலகில் பிறந்தவர்கள்’

வைகுண்டமெனும் பரமபதம் அடைவது 

பெரும் பாக்கியம்  என வியந்து மகிழ்ந்தனர்.

(மண்ணவர் விண்ணவர் ஆயினர்)


10.9.10

வேதங்கள் கூறும் வானவர் 

வைகுண்டம் வந்தடையும் அடியார்கள்

தங்கள் பாக்கியம் எனக்கருதி 

அவர்களின் திருவடிகளைப் புனித நீரால்  

தூய்மை செய்தனர். 

முழுநிலா முகம் படைத்த பெண்கள் 

சுண்ணப்பொடிகளையும் 

திருவடிநிலைகளையும் 

நிறை கும்பங்களையும் 

மங்கலதீபங்களையும் ஏந்திக்கொண்டு   

எதிரே வந்தனர். 


10.9.11

வரவேற்கப்பட்ட வைகுண்டநாதனின் அடியார்கள் 

திருமாமணிமண்டபத்திலே 

முடிவில்லாப் பேரின்பமுடைய வானவரோடு 

ஒருங்கிணைந்தனர்.

(ஜீவன் பரமனுடன் ஒன்றுபடும் இக்காட்சியை பூஞ்சோலைகள் 

  நிறைந்த குருகூர் சடகோபரின் பத்துப் பாசுரங்கள் விளக்குகின்றன.

 .இவற்றைக் கற்க வல்லோர் முனிவர்களாவார்கள் )   

                                   “ஓம் நமோ நாராயணாய” 

This entry was posted in Thiruvaimozhi and tagged , . Bookmark the permalink.

Leave a comment