அற்புதப் பத்து – வாரம் ஒரு வாசகம் – 41

41.அற்புதப் பத்து

(திருப்பெருந்துறையில் அருளியது)

பாடல்.3:

நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பல செய்து
நான் எனது எனும் மாயம்
கடித்த வாயிலே நின்று முன்வினை மிகக்
கழறியே திரிவேனைப்
பிடித்து முன் நின்று அப்பெருமறை தேடிய
அரும் பொருள் அடியேனை
அடித்து அடித்து அக்காரம் முன் தீற்றிய
அற்புதம் அறியேனே.

******

இம்மண்ணுலகில்
நல்லவன் போல் நடித்தேன்
பொய்யான செயல்கள் பல செய்தேன்
அதனாலே
நான், எனது என்கிற
மாயப்பாம்புகள் கடித்து
அப் பாம்புகள் கக்கிய
முன் வினையாகிய விஷத்தால்
புலம்பித் திரிந்தேன்
திரிந்த என்னை
வேதங்கள் தேடியலையும்
அரும்பொருளான இறைவன்
அந்தச் சிவன்
அடித்துப் பிடித்து
என்னை ஆட்கொண்டு
ஆனந்தக் கற்கண்டை ஊட்டினான்
இது ஓர் அற்புதம் அல்லவோ.

Advertisements
Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

குலாப்பத்து – வாரம் ஒரு வாசகம் – 40

40.குலாப்பத்து

(தில்லையில் அருளியது)

பாடல்: 7

மதிக்கும் திறல் உடைய வல் அரக்கன் தோள் நெரிய
மிதிக்கும் திருவடி என் தலைமேல் வீற்றிருப்பக்
கதிக்கும் பசு பாசம் ஒன்றும் இலோம் எனக் களித்து இங்கு
அதிர்க்கும் குலாத் தில்லை ஆண்டானைக் கொண்டு அன்றே.

*******

உலகில் நிகரில்லா அரக்கன் இராவணன்
மக்களால் மதிக்கப்பட்டவன்
உன் திருவடிகள்
அவன் தோள்களை நெரித்தன
அதே திருவடிகளை
என் தலைமேல் வைத்து
எனக்கு அருள் செய்தாய்.
அதனாலே
அரக்கத்தனமாய் என்னுள் எழுந்த உலகப்பற்றுக்கள்
அகன்றன என்னைவிட்டு
ஆதலால்
பெருமகிழ்ச்சி அடைந்து
ஆரவாரம் செய்கின்றேன்
இறைவா!
இந்நிலை நான் பெற்றது
தில்லையிலே உன் திருநடனம்
கண்டபின்னால் அல்லவோ.

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

திருப்புலம்பல் – வாரம் ஒரு வாசகம் – 39

39.திருப்புலம்பல்

(திருவாரூரில் அருளியது)

பாடல் 3:

உற்றாரை யான் வேண்டேன்
ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன்
கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா
உன் குறை கழற்கே
கற்றாவின் மனம் போலக்
கசிந்து உருக வேண்டுவனே.

*****

குற்றாலத்தில் குடி அமர்ந்த
ஆடலரசே!
எனக்கு
உறவினர் யாரும் வேண்டாம்
எந்த ஊரும் வேண்டாம்
புகழ் வேண்டாம்
கற்றவர் பெற்ற வெற்றறிவு வேண்டாம்
கற்றது போதும்
இனி கற்கவும் வேண்டாம்
ஒலிக்கின்ற சிலம்பணிந்த
உன் திருவடிகள் வேண்டி
கன்றை ஈன்ற பசுவாய்
மனம் கசிந்துருக
உனை வேண்டுகின்றேன்.

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

திரு ஏசறவு – வாரம் ஒரு வாசகம் – 38

38.திரு ஏசறவு

(திருப்பெருந்துறையில் அருளியது)

பாடல்.5:
கற்று அறியேன் கலை ஞானம்
கசிந்து உருகேன் ஆயிடினும்
மற்று அறியேன் பிற தெய்வம்
வாக்கு இயலால் வார் கழல் வந்து
உற்று இறுமாந்து இருந்தேன்
எம்பெருமானே அடியேற்குப்
பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு
அன்றே நின் பொன் அருளே.

*****

எம்பெருமானே!
நான்
ஞானம் தரும் கலைகளைக் கற்கவில்லை
உனை நினைந்து
மனம் கனிந்து உருகவில்லை
ஆனாலும்
என் வாக்குத் திறத்தாலே
பிற தெய்வங்களைப் போற்றவுமில்லை
உன்அழகிய திருவடிகளை அடைந்து
தற்பெருமை கொண்டிருந்தேன் நான்
உன் அடியவனான என்னை
நீ ஆட்கொண்டு
பொன்னான அருள் கொடுத்தாய்
இது
பொன் பீடம் ஒன்றை
நாய்க்குக் கொடுத்ததற்கு நிகர்.

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

பிடித்த பத்து – வாரம் ஒரு வாசகம் – 37

37.பிடித்த பத்து

(திருத்தோணிபுரத்தில் அருளியது)

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியேன் உடைய
ஊனினை உருக்கி உள் ஒளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கு எழுந்தருளுவது இனியே..

*****

குழந்தை அழும்முன்னே
காலமறிந்து
பசியாற்றும் தாயைவிட
மேலான அன்புடன்
இந்தப் பாவியின்
உடம்பினை உருக்கி
உள்ளத்தில் ஞான ஒளி பெருக்கி
அழியாத
ஆனந்தத் தேனைப் பொழிந்தாய்
என்னைக் காக்கவேண்டி
திரிந்தாய் என்னுடன் நாற்புறமும்
என் அருட்செல்வமே!
சிவனே!
நானும் தொடர்ந்து
உன்னை
இறுகப்பற்றிக்கொண்டேன்
இனி நீ
என்னை விட்டு
எங்கே செல்வாய்?

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

திருப்பாண்டிப்பதிகம் – வாரம் ஒரு வாசகம் – 36

திருப்பாண்டிப்பதிகம்

(திருப்பெருந்துறையில் அருளியது)

பாடல்:4.

செறியும் பிறவிக்கு நல்லவர்
செல்லல்மின் தென்னன் நல் நாட்டு
இறைவன் கிளர்கின்ற காலம்
இக்காலம் எக் காலத்துள்ளும்
அறிவு ஒண் கதிர் வாள் உறை கழித்து
ஆனந்தம் மாக் கடவி
எறியும் பிறப்பை எதிர்ந்தார்
புரள இரு நிலத்தே .

*****

நல்லவர்களே!
தொடர்ந்து துரத்தும் பிறவியைத்
தொடராதீர்.
எக்காலத்துள்ளும்
பாண்டியனின் நல்ல நாட்டுக்கு
இறைவன் சிவன் விளங்கும் காலம்
இந்தக்காலம்
உறையிலிருந்து நீக்கிய
ஒளி மிகு ஞானவாள் ஏந்தி
பேரானந்தக் குதிரை மீது வந்து
பரந்த இவ்வுலகிலே
எதிர்ப்பட்டோரின் பிறவி மரத்தை
அந்தச்சிவன்
வெட்டிவீழ்த்துவான் .

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

அச்சப்பத்து – வாரம் ஒரு வாசகம் – 35

அச்சப்பத்து

(தில்லையில் அருளியது)

பாடல்:10.

கோள் நிலா வாளி அஞ்சேன்
கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்
நீள் நிலா அணியினானை
நினைந்து நைந்து உருகி நெக்கு
வாள் நிலாம் கண்கள் சோர
வாழ்த்தி நின்று ஏத்த மாட்டா
ஆண் அலாதவரைக் கண்டால்
அம்ம நாம் அஞ்சுமாறே.

*****

கொடிய அம்புக்கு அஞ்சேன்
யமனின் கோபத்துக்கும் அஞ்சேன்
பிறை நிலா அணிந்த சிவனை எண்ணி,
மனம் கசிந்துருகி,
ஒளி மிக்க கண்களில்
நீர் பெருக வாழ்த்தி,
உறுதி கொண்ட நெஞ்சுடன் வழிபடா
ஆண்மையற்றவரைக் கண்டால்
ஐயோ
நான் அஞ்சுவேன்.

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment