“நியூரா லிங்க்”கின் டெலிபதி

மனித மூளைகளில் பதிக்கக்கூடிய கணினி இடைத்தளங்களை (Brain Computer Interface) உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நியூராலிங்க் நிறுவனம் கடந்த 28 ஜனவரி 2024ல் ஒரு நோயாளியின் மூளையில் அதன் முதல் இடைத்தளத்தைப் பதித்துள்ளது.

Image; Wikimedia Commons

டெஸ்லா” மற்றும் “ஸ்பேஸ் எக்ஸ்” நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் நியூரா லிங்க் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “டெலிபதி” யால் வெறும் எண்ணத்தின் மூலமாகவே ஒரு மனிதன் திறன் பேசியையோ அல்லது கணினியையோ இயங்க வைக்கமுடியும் எனக் கூறியுள்ளார். கை,கால்களை இழந்தவர்கள் இதன் ஆரம்பகாலப் பயனாளிகளாக இருப்பார்கள் என அவர் மேலும் கூறுகிறார். இந்த தயாரிப்பின் ஆரம்பநிலை முடிவுகள் நரம்பணுக்கள் மின்புலத்தூண்டல் பெறுவதை சாத்தியமாக்கியுள்ளன. நரம்பணுக்கள் மின்புலத்தூண்டுதல் பெற்று தகவல்களை முறைப்படுத்தி மூளை மற்றும் உடலுக்கு அனுப்புபவை.

இந்த டெலிபதி தொழில் நுட்பம் பக்கவாதம், தண்டுவடம்,மற்றும் நரம்புகள் பாதிப்புகளுக்கு பயன்படக்கூடும். ஏனெனில் மேற்கண்ட நோய்களில் மூளை செயல்பட்டாலும் தகவல் பகுதி மட்டும் பாதிக்கப்பட்டிருக்கும். கை, கால்கள் செயல்படுதல் மற்றும் நினைவாற்றல் செயல்படுதலுக்கும் பின்னாட்களில் பயன்படக்கூடும். மூளையின் பார்வை உணர்வுப்பகுதி (Visual Cortex) சரியாக இருந்தாலும் தகவல் பகுதி பாதிக்கப்பட்டிருப்பதால் பார்வை இழப்பையும் இது சரிசெய்யக்கூடும்.

ஆனால் இந்த தொழில்நுட்பத்தால் ஆபத்துகளும் ஏற்படலாம். வலிப்பு, தொற்று, ரத்தப்போக்கு, முதலியன அவற்றுள் சில. சில வேளைகளில் மனித உடல் இந்த இடைத்தளத்தை ஏற்காமலும் போகலாம். இயற்கையில் நமது மூளைக்கும் உடல் உறுப்புகளுக்குமிடையே உள்ள தகவல் பரிமாற்றம் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த செயற்கை இடைத்தளத்தால் தவறான தகவல் பரிமாற்றம் ஏற்படவும் வாய்ப்புண்டு.

நியூராலிங்க் நிறுவனத்தால் “மூளைச் சில்லு” (இடைத்தளம்) பதிக்கப்பட்ட முதல் நோயாளி முழுமையாக குணமடைந்து ஒரு கணினி சுட்டியை எண்ணங்களின் மூலம் கட்டுப்படுத்துகிறார் என 19.2.2024 அன்று எலன் மஸ்க் கூறியுள்ளார். “அவரது முன்னேற்றம் நன்றாக உள்ளது. எவ்வித பாதிப்பு உபாதைகளுமின்றி முழுமையாக குணமடைந்துள்ளார். அவர் கணினி சுட்டியை எண்ணங்களின் மூலமே கணினித்திரையைச் சுற்றி நகர்த்துகிறார்” என அவர் மேலும் கூறுகிறார்.

இந்த ஆய்வில் உடலின் இயக்கம் தொடர்பான பணிகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதியில் ஒரு ரோபோ மூலம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஒரு கணினி இடைத்தளம் பதிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் இடைத்தளங்களை அறுவை சிகிச்சை மூலம் விரைவாகப் பதியச் செய்து உடல் பருமன், மதியிறுக்கம் (autism), மன அழுத்தம், மற்றும் மனச்சிதைவு போன்ற நோய்களைக் குணப்படுத்தலாம் எனவும் எலன் மஸ்க் கூறியுள்ளார்.

This entry was posted in Science and tagged , , , , . Bookmark the permalink.

Leave a comment