பண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48

48.பண்டு ஆய நான்மறை

(திருப்பெருந்துறையில் அருளியது)

பாடல்:1.

பண்டு ஆய நான் மறையும் பால் அணுகா மால் அயனும்
கண்டாரும் இல்லைக் கடையேனைத் தொண்டு ஆகக்
கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மாறு உரை.

*****

ஏ நெஞ்சே!
பழம்பெரும் வேதங்கள் நான்கும்
நெருங்க இயலாதவன்
திருமாலும் பிரமனும்
கண்டுணர முடியாதவன்
திருப்பெருந்துறையில் உறையும்
என் சிவன்
அந்தச் சிவன்
கடையனான என்னைத்
தொண்டனாகக் கொண்டான்
இந்தக் கருணைக்குக் கைம்மாறு உண்டோ?

Advertisements
Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

திருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47

47.திருவெண்பா

(திருப்பெருந்துறையில் அருளியது)

பாடல் :3

செய்த பிழை அறியேன் சேவடியே கை தொழுதே
உய்யும் வகையின் உயிர்ப்பு அறியேன் வையத்து
இருந்து உறையுள் வேல் மடுத்து என் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான்.

******

நான் செய்த தவறு அறியேன்
சிவனின் சிவந்த திருவடிகள் தொழுது
நற்பேறு பெறும் வழியறியேன்
ஆனாலும்
திருப்பெருந்துறையுறை சிவன்
உறைக்குள் இருந்த ஞானவேல் உருவி
என் சிந்தையில் அழுந்தப்பாய்ச்சி
என் மயக்கம் போக்கி
சிந்தை தெளிவித்தான்.

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

திருப்படை எழுச்சி – வாரம் ஒரு வாசகம் – 46

46. திருப்படை எழுச்சி

(தில்லையில் அருளியது)

பாடல்:1

ஞானம் வாள் ஏந்தும் ஐயர்
நாதம் பறை அறைமின்
மானம் மா ஏறும் ஐயர்
மதி வெண் குடை க்விமின்
ஆன நீற்றுக் கவசம்
அடையப் புகுமின்கள்
வானம் ஊர் கொள்வோம் நாம்
மாயம் படை வாராமே.

*****

அடியார்களே!
ஞான வாள் ஏந்துகின்றவன்
நம் தலைவன் சிவன்
ஓங்காரமெனும் நாதப் பறை முழக்கி
பெருமை மிகு காளைமேல் ஊர்ந்திடும்
நம் தலைவன் சிவனின்
விவேக வெண்குடை பிடித்து
திருநீற்றுக் கவசம் அணிந்து
எதிர்த்து நிற்கும் மாயப்படையை
வெல்வோம்
வென்ற நமக்கு
சிவலோகம் சித்திக்கும்.

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

யாத்திரைப்பத்து – வாரம் ஒரு வாசகம் – 45

45.யாத்திரைப்பத்து

(தில்லையில் அருளியது)

பாடல்:9.

சேரக் கருதிச் சிந்தனையைத்
திருந்த வைத்துச் சிந்திமின்
போரில் பொலியும் வேல் கண்ணாள்
பங்கன் புயங்கன் அருள் அமுதம்
ஆரப் பருகி ஆராத
ஆர்வம் கூர அழிந்துவீ ர்
போரப் புரிமின் சிவன் கழற்கே
பொய்யில் கிடந்து புரளாதே.

*****

சிவன் திருவடிகள் சேர விரும்புவோரே
அந்தச சிவனை
தூய சிந்தனையுடன்
இடைவிடாது நினைத்திருங்கள்
போரில் வெற்றி தரும் வேல் போன்றவை
உமையம்மையின் கண்கள்
அந்தத் தேவியின் பாதியைத் தன்னில் கொண்டவன்
பாம்புகளை அணிந்தவன்
அந்தச் சிவன்
அவன் அருளமுதம் பருகித்
தணியாத ஆசையுடன்
அந்த அமுத ஊற்றில் ஆழ்ந்திடுவீர்
பொய்யான வாழ்வில் புரண்டு கிடக்காமல்
அவன் திருப்பாதங்கள் சேர
பெருவிருப்பம் கொண்டிடுவீர்.

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

எண்ணப் பதிகம் – வாரம் ஒரு வாசகம் – 44

44.எண்ணப் பதிகம்

(தில்லையில் அருளியது)

பாடல்:5.

காணும் அது ஒழிந்தேன் நின் திருப்பாதம்
கண்டு கண் களி கூரப்
பேணும் அது ஒழிந்தேன் பிதற்றும் அது ஒழிந்தேன்
பின்னை எம்பெருமானே
தாணுவே அழிந்தேன் நின் நினைந்து உருகும்
தன்மை என் புன்மைகளால்
காணும் அது ஒழிந்தேன் நீ இனி வரினும்
காணவும் நாணுவனே.

*****

எம்பெருமானே
நிலைத்த பெரும் பொருளே
நான்
உன் அழகிய திருப்பாதங்கள்
காண்பதைக் கைவிட்டேன்
உன் திருவடிகளைக் கண் குளிரக் கண்டு போற்றி
பேரின்பம் அடைந்தேனில்லை
வாயால் துதிப்பதையும் விட்டு விட்டேன்
என் அற்பத்தனத்தாலே
உன்னை எண்ணியுருகும் இயல்பையுமிழந்தேன்
இவற்றால்
முற்றிலும் கெட்டுப்போனேன்
அதனால்
இனி நீ என் முன் தோன்றினாலும்
கண்ணால் உன்னைக் காண்பதற்கு
நான்
நாணித் தலைகுனிவேன்.

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

திருவார்த்தை – வாரம் ஒரு வாசகம் – 43

43.திருவார்த்தை

(திருப்பெருந்துறையில் அருளியது)

பாடல்:6.

வேவத் திரிபுரம் செற்ற வில்லி
வேடுவன் ஆய்க் கடி நாய்கள் சூழ
ஏவல் செயல் செய்யும் தேவர் முன்னே
எம்பெருமான் தான் இயங்கு காட்டில்
ஏ உண்ட பன்றிக்கு இரங்கி ஈசன்
எந்தை பெருந்துறை ஆதி அன்று
கேவலம் கேழல் ஆய்ப் பால் கொடுத்த
கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே. .

*****

முப்புரங்களும்
தீயில் வேகும்படி அழித்த
வில்லையுடையவன் எம்பெருமான்
வேடன் வடிவம் கொண்டு
வேட்டை நாய்கள் புடைசூழ
காட்டில் சஞ்சரித்தான்
அக்காட்டிலே
அம்பு தைத்து இறந்து கிடந்தது
தாய்ப்பன்றி ஒன்று
இறைவனுக்கு அதன்மேல் இரக்கம் சுரந்தது
தனக்குக் குற்றேவல் புரிந்த
தேவர்கள் முன்னிலையில்
தானே தாய்ப்பன்றியாகி
குட்டிகளுக்குப் பாலூட்டினான்
அந்தச்சிவன்
எம் தந்தை
திருப்பெருந்துறையுறை ஈசன்
இறைவனின் இந்த மேன்மையை உணர்வோர்
எமக்குத் தலைவர்.

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment

சென்னிப்பத்து – வாரம் ஒரு வாசகம் – 42

42.சென்னிப்பத்து

(திருப்பெருந்துறையில் அருளியது)

பாடல் 6:

சித்தமே புகுந்து எம்மை ஆட்கொண்டு
தீவினை கெடுத்து உய்யல் ஆம்
பத்தி தந்து தன் பொன் கழல் கணே
பன் மலர் கொய்து சேர்த்தலும்
முத்தி தந்து இந்த மூவுலகுக்கும்
அப்புறத்து எமை வைத்திடும்
அத்தன் மா மலர்ச் சேவடிக்கண் நம்
சென்னி மன்னி மலருமே.

*****

வண்ண மலர்கள் பல பறித்து
ஈசன் திருவடிகளில் சேர்த்துப்
பக்தி செய்தால்
அந்தச் சிவன்
நம் சித்தத்தில் புகுந்து
நம்மை ஆட்கொண்டு
நம் தீவினைகள் அழித்திடுவான்
அதனால் நாம்
பெறுவோம் பிறவாப் பெருநிலை
நமக்கு முக்தி தந்து
மூவுலகுக்கும் அப்பால்
பேரின்பப் பெருவெளியில் வைப்பான்
ஊமத்தம் பூ அணியும்
அந்தப்பித்தன்
இவை அனைத்துக்கும் மேலாக
அவன் தாமரைப்பாதங்களில்
நம் சென்னி நிலை பெற்று பொலிவு பெறும்.

Posted in Thiruvasagam | Tagged | Leave a comment