நம்மாழ்வார்

நம்மாழ்வார் ஆழ்வார்களில் முதன்மையானவர். இவர் பிறந்தது திருக்குருகூர் என்னும் ஊரில். தற்போது இது ஆழ்வார் திருநகரி என்று அழைக்கப்படுகிறது. இவரது காலம் 9ம் நூற்றாண்டின் முற்பகுதி என்பர். நாலாயிரத் திவ்யப்ரபந்தத்தில் இவர் இயற்றியவை திருவிருத்தம் (ரிக் வேதம்), திருவாசிரியம் (யஜூர் வேதம்), பெரிய திருவந்தாதி (அதர்வணவேதம்), திருவாய் மொழி (சாமவேதம்) ஆகியவை. இவர் வேதம் செய்த தமிழ் மாறன் என்று போற்றப்பட்டவர். நம்மாழ்வாரை உயிராகவும் ஏனைய ஆழ்வார்களை உடலாகவும் கொள்வது வைணவ மரபு. பிற ஆழ்வார்களின் பாசுரங்களை விட நம்மாழ்வாரின் பாசுரங்களில்தான் வைணவக் கருத்துக்கள் மிக அதிக அளவில் உள்ளன.
யஜூர் வேத சாரமான ‘திருவாசிரியம்’ இறைவனின் அருட்குணங்களை பரமானந்தத்துடன் அனுபவித்து பாடப்பட்டது. இதில் உள்ள ஏழு பாசுரங்களையும் எளிய தமிழில் பார்ப்போம்.
திருவாசிரியம்
2578.
தாமரை மலரை நாபியில் கொண்டு காட்சி தரும்
தனிப்பெரும் நாயகனே!
மூவுலகும் அளந்த திருவடிகள் கொண்டவனே!
பச்சைமலை ஒன்று
கடலரசன் கை மீது துயில்வது போலுள்ளது
நீ நித்திரை செய்யும் திருக்கோலம்
பவளம் போல் சிவந்த இடங்கள் கொண்ட பச்சைமலை
செக்கச்சிவந்த மேகத்தை இடையில் உடுத்ததுபோல்
நீ செவ்வாடை அணிந்துள்ளாய்
உன் திருமுடி
அந்த மலைமேல் தகிக்கும் சூரியன்
நீ கழுத்தில் அணிந்துள்ள ஆபரணம்
அம்மலைமேல் குளிரொளி வீசும் சந்திர ன்
நீ அணிந்துள்ள அணிகலன்களெல்லாம்
அம்மலைமேல் ஒளிரும் விண்மீன்கள்
உன் வாயும் கண்களும் சிவந்திருந்தாலும்
உன் மேனியின் பச்சை நிறம்தான்
மேலோங்கி ஒளிர்கிறது
பாம்புதான் உன் இனிய படுக்கை
அலையெறிகிற கடலில்
கிளைத்திருக்கும் தலைகளுடன்
நஞ்சைக்கக்கும் நாகத்தின்மீது
அறிதுயில் கொள்கிறாய்
சிவன்
பிரமன்
இந்திரன்
தேவர்களெல்லாம்
பள்ளிகொண்ட உன் திருக்கோலத்தைத்
தொழுகின்றார்.
2579.
என் தந்தை
எம்பெருமான்
உலகங்களைப்படைத்தான்
பிரளயம் வந்தது
அப்போது ……..
உலகங்களை விழுங்கி
அவனே அவற்றைக்காப்பாற்றினான்
அவன் திருவடிகள்
ஒலிக்கின்ற கழலோடு தாமரையாய்த்தோன்றும்
ஞானிகளுக்கு
அவன் திருவடித்தாமரையை
தம் தலையில் சூட ஆசை
இவர்கள்
தம் ஆன்மா உருகிக்கரைந்தொழுக
அவனைப்பக்தி செய்கிறார்கள்
பக்திப்பெருக்கினால்
தேனினுமினிய இன்பம் அடைகின்றார்
அவர்களைப்பொருத்தவரை
பக்தி வெள்ளத்தில் மூழ்குவது ஒன்றே பெருமை
அழிகின்ற அற்பப்பொருளைத்தேடி
அலைவோர் அலையட்டும்
செல்வம்
அழியாத வலிமை
பெருந்தலைமைப்பதவி
வீடுபேறு
ஞானியர்க்கு இவையெல்லாம் ஒரு பொருட்டேயில்லை
தெளிந்த ஞாநியரின் குறிக்கோளெல்லாம்
பரமனின் பக்தியில் தோய்ந்து பெறும் இன்பம் மட்டுமே!
2580.
எம்பெருமான்
மூன்று உலகங்களும் நல்வழி நடக்க
தன் உள்ளத்தில் நினைப்பவன்
அவ்வாறே
உலகங்கள் மூன்றும் நல்வழி நடந்து
அவனைத்தொழுகின்றன
உலகங்கள் மூன்றும் வணங்குகின்ற
பெரும் புகழ் அவனுக்கு
அதனாலே
தன் ஆணைகளைத் தடையின்றிச்செலுத்துகின்றான்
அரி அயன் அரன்
இம்மூவருக்கும் முதல்வன்
அணிகலன்களின் ஒளி வீசும் திருமார்பன்
மலைபோன்ற அலைகள் மோத
பெரிய மலைகளே நடுங்கும்
இடியோசைகேட்கும் குளிர்ந்த கடல்
அப்பாற்கடலிலே
படம்கொண்டபாம்பரசன் வாசுகியைக்கயிறாக்கி
மந்தர மலையில் சுழற்றிக்கடைந்தவன்
ஒப்பற்ற தனிப்பெரும் தெய்வம் அவன்
தேவாதிதேவன்
எம்பெருமானின் அடியார்க்கு
இனி வரும் காலங்களிலெல்லாம்
நாங்கள்
இடைவிடாது தொண்டு செய்யும்
பெரும்பேறு கிடைக்குமோ!
2581.
எல்லா உலகங்களும்
எல்லா உயிர்களும்
பெரும் பிரளயததில் அழிந்துவிட்டன
அப்பெரும் பிரளயகாலத்திலே
எண்ணற்ற உயிர்களெல்லாம் அடைவதற்கரிய ஒப்பற்றவனாய்
தானே நின்று
தன் நாபிக்கமலத்தில் நான்முகனைப்படைத்தான்
அவன் மூலம்
முக்கண்ணன் சிவனைப்படைத்தான்
பின்னர்
சிறுதெய்வங்கள் பலவும் படைத்தான்
மூவுலகும் படைத்த
நாபிக்கமலத்தையுடைய
மாயங்கள் புரியும்
ஆதிகாரணன்
அந்த நாராயணனின் திருவடிகளை
காலகாலமெல்லாம்
இடைவிடாது
“வாழிய” “வாழிய” என்று நாம் தொழவாய்க்குமோ?
2582.
எம்பெருமானே!
உன் திருவடிகள் உலகுக்கெல்லாம் முதற்காரணம்
அத்திருவடித்தாமரைகளில் ஒன்றைக்கவிழ்த்துப்பரப்பி
பூமிப்பரப்பை அடக்கிக்கொண்டாய்
ஒளிரும் மலர் போன்ற மற்றொரு திருவடி
அதை வானத்தில் நிறுத்தினாய்
பிரம்மலோகம் வியந்து மகிழ்ந்தது
வானில்பட்ட உன் திருவடியால்
தேவர்களோ
முறைப்படி உன்னைத்துதித்தார்கள்
உனது கண்கள்
மலர்ந்த தாமரைக்காடு
உன் அதரங்கள்
கொவ்வைக்கனிபோல் சிவப்பு
உனது கிரீடம்
ஆயிரம் சூரியர்களின் அற்புதப்பேரொளி
உனது ஆயிரம் தோள்கள்
ஓங்கி வளர்ந்த கற்பகச்சோலைகள்
அனைவருக்கும் மேலான எம்பெருமானே!
உன்னையன்றி வேறு எவர்க்கேனும்
இவ்வுலகம்
அடிமைப்படக்கூடியதோ?
2583.
எம்பெருமான்
அவன்
இந்த உலகத்தைப்படைத்து
தன் வராக அவதாரத்திலே பூமியை நிலைநிறுத்தி
பிரளய காலத்திலே காத்து
பின்னர்
தக்க தருணத்திலே வெளிக்கொணர்ந்து
உயிர்களை வாழச்செய்யும் முதற்பெரும்கடவுள்
இந்த முதல்வனை சிலர் வணங்குவதில்லை
சாத்திரங்களின் மூலையில் தேடி
சிறு தெய்வங்களை வணங்குகின்றார்
என்னே பேதைமை!
இவர்களது இந்தச்செயல்
பெற்ற தாய் இருக்க
மணைப்பலகையை நீராட்டிக்கொண்டாடுவதுபோல் உள்ளது
இது மட்டுமா?
வழிபாடு என்கிற பெயரிலே
உயிர்ப்பலி புரிகிறார்கள்
சிறு தெய்வங்கள் தரும் தற்காலிக இன்பம்
உண்மையிலேயே துன்பந்தான்
இந்த வழிபாடு
மாயப்பிறவி எனும் நீங்கா மோகத்தில்
அவர்களை ஆழ்த்துகிறது
ஓ ! ஓ !
இதுதான் உலக நியதியோ ?
2584.
குளிர் நிலவைத்தலையில் சூடியுள்ள சிவன்
பிரம்மதேவன்
ஒளி மிகு தேவேந்திரன்
இம்மூவருமே திருமாலுக்கு உட்பட்டவர்
எல்லா உலகங்களும்
எல்லா உயிர் க்கூட்டங்களும்
அவனுக்குள் அடக்கம்
பிரளயம் வந்தது
நிலம்,நீர்,தீ,காற்று,வானம்
அனைத்தையும்
ஆண்டவன் தன் வயிற்றில் சுமந்து
கலக்கி மயங்கவைத்தா ன்
ஓருயிரும் வெளிப்படாமல்
சிறு வடிவு கொண்டு
ஆலிலைமேல் துயில் கொண்டான்
பெரிய கடவுள் அவன்
அளவிடற்கரியவன்
ஆச்சரியமானவன்
அவனையன்றி
வேறோர் தெய்வத்தைத் தொழுவேனோ?
Advertisements
This entry was posted in Nalayira Divya Prabandham and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s