தொண்டரடிப்பொடியாழ்வார்

தொண்டரடிப்பொடியாழ்வார் சுவாமிமலைக்கு அருகிலுள்ள திருமண்டங்குடி என்னும் ஊரில் அவதரித்தவர். இவருடைய தந்தையார் இவருக்கு வைத்த பெயர் விப்ரநாராயணர். இவரது காலம் ஏழாம் நூற்றாண்டு எனக்கருதப்படுகின்றது.
இவர் திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து அரங்கனுக்கு மாலை தொடுத்து பக்தி செய்து வநதார்.
இவர் நாலாயிரத்திவ்யப்பிரபந்தத்தில் முதலாயிரத்தில் திருமாலை 45 பாசுரங்களும் திருப்பள்ளி எழுச்சி 10 பாசுரங்களும் பாடியுள்ளார்.இவரது திருப்பள்ளி எழுச்சிதான் தமிழில் முதல் சுப்ரபாதம். இவரது பாசுரங்கள் மிகவும் எளிமையானவை. இந்தத்திருப்பள்ளி எழுச்சிதான் அனைத்துக் கோவில்களிலும் பாடப்படுகின்றது. திருவரங்கத்தின் இயற்கை அழகையும், காலைக் காட்சிகளையும் ஆழ்வார் அழகு தமிழில் பாடியுள்ளார்.
ஏழாம் நூற்றாண்டுத்தமிழ் என்பதால் இந்தத் தலைமுறையினர் புரிந்துகொள்ளும் வகையில் அந்தப் பத்துப்பாசுரங்களும் எளிய தமிழில் இங்கே:
திருப்பள்ளி எழுச்சி
917.
திருவரங்கத்தில் துயில்கின்ற பெருமாளே
கதிரவன் கிழக்கின் உச்சியில் உதித்துவிட்டான்
அடர்ந்த இருள் அகன்றது
காலை நேரம்
தேன் சிந்தும் மலர்கள்
தென்திசையில்
தேவர்களும் மன்னர்களும் திரண்டு
தங்களை வணங்க வந்துள்ளனர்
இவர்களுடன்
ஆண் யானைக்கூட்டமும்
பெண் யானைக்கூட்டமும் வந்து
ஒலி எழுப்புகின்றன
இது எல்லாத்திசைகளிலும்
அலை எறிகிற கடலின் ஓசைபோல் கேட்கிறது
அரங்கனே எழுந்தருள்வாய்.
918.
செழுமையான முல்லைக்கொடியில் மலர்ந்த
அழகிய மலர்களைத்தழுவி
கீழைக்காற்று வீசுகின்றது
இரவில் மலர்கள்மீது உறங்கிய அன்னப்பறவைகள்
பனியில் நனைந்த தம் சிறகுகளை உதறி
விழித்துக்கொண்டன
பெரிய பள்ளம் போன்ற வாயும்
வெளுத்த கோரைப்பற்களும்
நஞ்சும் நிறைந்த
முதலையின் வாயில் அகப்பட்டுத்துடித்த
யானை கஜேந்திரனைக் காத்தவனே
அரங்கா எழுந்தருள்வாய்
919.
சூரியனின் சுடரொளி எங்கும் பரவிற்று
விண்மீன்களின் மின்னொளி மங்கியது
ஒளி மிகுந்த சந்திரனும் மங்கிவிட்டான்
எங்கும் நிறைந்த இருள் நீங்கியது
பசுமையான சோலைகளில்
பாக்கு மரப்பாளைகளைக்கீறியதால்
பால் மணம் வீசுகின்றது
இந்த விடியலின் தென்றலில்
மிடுக்கும் ஒளியும் நிறைந்த சக்கரத்தைக்
கைகளில் ஏந்திய
அரங்கனே எழுந்தருள்வாய்.
920.
இடையர்கள்
எருமைகளை மேய்ச்சலுக்குக்
கட்டவிழ்த்து விட்டனர்
அவர்களின் குழலோசையும்
எருதுகளின் மணியோசையும்
திசைஎங்கும் நிறைந்தன
வயல்களில்
வண்டுக் கூட்டம் ஆரவாரம் செய்யத் தொடங்கிவிட்டது
அன்று
இலங்கை மன்னனை குலநாசம் செய்த
வில்லாளனே!
தேவதேவனே!
மகாமுனிவர்
விசுவாமித்திரர் யாகம் காத்து
அவர் ‘அவப்பிரத’* நீராட அருளியவனே!
பகைவர்களை அழிக்க வல்லவனே!
அயோத்தியின் அரசனே
அரங்கனே எழுந்தருள்வாய்!
*(யாகம் இனிது நிறைவேறியபின் குளிக்கும் முதல் குளியலுக்கு ‘அவப்பிரதம்’ என்று பெயர்)
921
பூஞ்சோலைப்பறவைகளின் ஆரவாரம்
இருள் நீங்கி விடியல் வந்தது
கீழ்த்திசைக்கடலொலி கேட்கின்றது
வண்டுகள் ஒலிக்கும்
மலர் மாலைகள் கொண்டு
தேவர்கள்
உன்னைத்துதிக்க வந்து நின்றனர்
ஆதலால்
பெருமானே
இலங்கையர் கோன் வீடணன் வழிபடும் கோவிலில்
நித்திரை கொள்ளும் எம்பெருமானே
எழுந்தருள்வாய்!
922
பன்னிரு சூரியர் அழகிய பெருந்தேர்களில்
பதினொரு உருத்திரர் எருதுகளில்
முருகப்பெருமானோ தன் மயில் வாகனத்தில்
தேவகணங்கள் ஒன்பது பேரும்
எட்டு உபதேவதைகளும்
தேரிலும் குதிரைகளிலும் வந்திறங்கி
ஆடல் பாடலுடன்
ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு
நெருங்கி நின்று
பெரிய மலை போன்ற உன் கோயிலின் முன்னே
உன் தரிசனம் பெறக்காத்திருக்கிறார்கள்
அரங்கனே! எழுந்தருள்வாய்.
923.
பெருமானே!
உன் திருக்கோவில் வாசலிலே
தன் ஐராவதத்தில் இந்திரன்
கூட்டமாக வானத்துத்தேவர்கள்
அருந்தவம் புரிந்த சனகாதி முனிவர்கள்
இந்திரனின் உப தேவதைகள்
யட்சர்கள்
அழகிய கந்தர்வர்
வித்யாதரர்கள்
இவர்களெல்லாம் உன் திருவடிகளைத்தொழ
மயங்கி நிற்கின்றனர்
வானத்திலும் பூமியிலும் நிற்க இடமில்லை
அரங்கனே! எழுந்தருள்வாய்.
924.
பெருமானே!
வாசனை மிகுந்த அருகம்புல்
பெருஞ்செல்வம்
காமதேனு
ஒளி பொருந்திய கண்ணாடி என
தாங்கள் காணத்தகுதியானதெல்லாம்
வானவர் கொண்டுவந்துள்ளார்
நற்கீதமிசைக்க
இங்கே
தும்புருவும் நாரதரும்
இக்காட்சியைக்காணக்கதிரவனும் தோன்றிவிட்டான்
வானத்தில் இருள் முற்றிலும் நீங்கிவிட்டது
அரங்கனே! எழுந்தருள்வாய்.
925.
நாதம் நன்றாக எழும் நல்ல சிறு பறை
ஒற்றைத்தந்தியுடைய தாள இசைக்கருவி
சிறு மத்தளம்
வீணை புல்லாங்குழல்,முழவம்
இவற்றிலிருந்து எழும் நாதம்
திசையெங்கும் பரவுகிறது
கின்னரர், கருடர், கந்தர்வர்
கீதமிசைக்கின்றனர்
இரவெல்லாம் தவம் செய்த முனிவர்கள்
தேவர்கள்,சாரணர்,இயக்கர்,சித்தர்
உன் திருவடி தொழக்காத்திருக்கின்றனர்
அரங்கனே!எழுந்தருள்வாய்.
926.
காவிரி சூழ் திருவரங்கத்தில்
பள்ளிகொண்ட பெருமாளே!
மணமுடைய தாமரைகள் மலர்ந்து விட்டன
கதிரவனும்
ஒசைமிகு கடலின் மேற்பரப்பில் தோன்றிவிட்டான்
சிறிய இடையுள்ள பெண்கள்
காவிரியில் நீராடி
சுருண்ட கூந்தலைப்பிழிந்து உதறி
கரையேறிவிட்டார்கள்
தொண்டரடிப்பொடி எனப்பெயர்கொண்ட அடியேன்
நன்குதொடுக்கப்பட துளசிமாலையும்
பூக்கூடையும்
என் தோளில் சுமந்து
தங்களுக்கு அணிவிக்க வருகின்றேன்
உன் அடியார்க்கு என்னை ஆட்படுத்தி
அருள் செய்ய பள்ளி எழுந்தருள்வாய் !

********

Advertisements
This entry was posted in Nalayira Divya Prabandham and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s