அம்மாவுக்கு ஒரு கடிதம் – ஹொரேஸ் அய்ல்ஸ் (Horace Iles)

முதல் உலகப்போர் (1914-18) முடிந்து நூறாண்டுகளாகிவிட்டன. இந்தப்போரில் 1,00,000 டன் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. 90 லட்சம் வீரர்கள் கொல்லப்பட்டனர். காயமடைந்தவர்கள் 2 கோடிக்குமேல். 50 லட்சம் குடிமக்கள் நோயினாலும், பட்டினியாலும், இறந்தனர். உலகம் இதிலிருந்து பாடம் கற்காமல் இரண்டாவது உலகப்போரிலும் ஈடுபட்டு பெருத்த அழிவைச்சந்தித்தது. இன்றுவரை உலகப்போர் என்று ஒன்று நடக்கவில்லையே தவிர உலகமெங்கும் பல நாடுகளில் ஆங்காங்கே போர் நடந்த வண்ணம்தான் உள்ளது.

ஹொரேஸ் அய்ல்ஸ் என்கிற 14 வயது சிறுவன் இங்கிலாந்தின் மேற்கு யார்க்க்ஷயர் தரைப்படையின் 15 வது படையணியில் சேர்ந்து இப்போரில் ஈடுபட்டவன். Battle of Somme (France) ல் போரிட்டுக்கொண்டிருக்கும்போது 1916 ஜுலை 1 ந்தேதி கொல்லப்படுகிறான். இவன் இறந்த விவரம் இவனது குடும்பத்தாருக்கு 11 நாட்களுக்குப் பிறகுதான் தெரியவருகிறது. முதல் உலகப்போரில் சண்டையிட்ட மிக இளமையான சிப்பாய்களில் இவனும் ஒருவன். இங்கிலாந்தின் மேற்கு யார்க்க்ஷயரில் உள்ள லீட்ஸ் நகரத்தில் வசித்த தன் அம்மாவுக்கு போர்முனையிலிருந்து 1916 ஏப்ரல் 30 ம் நாள் அவன் எழுதிய கடிதத்தின் தமிழாக்கம்…………

இரவு 7.45
ஏப்ரல் 30, 1916
ஸேர், சோம், பிரான்ஸ்.

என் பிரிய அம்மா,

நான் எங்கிருந்து எழுதுகிறேன் என யூகிக்க முடிகிறதா உன்னால்? ம். கண்டுபிடி. நான் பிரான்ஸில் இருக்கிறேன் அம்மா. பிரான்ஸ். ஒரு நாளேனும் பிரிட்டனை விட்டு வெளியே செல்வதைப்பற்றி நான் நினைத்ததேயில்லை. அதுவும் பிரான்ஸுக்கு. கற்பனை செய்துபார் அம்மா. மிகச்சிறிய ஊரான உட்ஹவுசிலிருந்து ஒரு சிறுவன். அவன் இப்போது பிரான்ஸில்.

ஓராண்டுக்கு முன்னால் உன்னிடம் கூடச்சொல்லாமல் நான் மஹா யுத்தத்தில் சண்டையிட சேர்ந்தது குறித்து இன்னமும் நீ என்மீது கடுங்கோபத்தில் இருப்பாய் என்று எனக்குத்தெரியும். ஆனால் அம்மா நான் ஏற்கனவே பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு ஓராண்டுக்காலமாக கொல்லனின் உதவியாளாய் இருந்தேன். ‘லீட்ஸ் பால்ஸ்’ டிராம் வண்டி வந்து பட்டாளத்திற்கு ஆள் சேர்க்க அழைப்பு விடுத்தபோது என்னை என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. நான் அதைச் செய்யவேண்டி இருந்தது. மேலும் அப்பா ஒரு சிப்பாய். நான் அவரைப்போல் இருப்பதாய் எண்ணுகிறேன். அம்மா நான் எனது அரசருக்காகவும் எனது நாட்டுக்காகவும் சண்டையிட விரும்புகிறேன்.

அம்மா. இந்தப் போர் நீயும் நானும் கற்பனை செய்ய முடியாத அளவுக்குப் பெரிய போர். அப்பா சண்டையிட்ட போரை விட பெரியது என நினைக்கிறேன். இந்தப் போர் 1914 கிறிஸ்துமஸுக்குள் முடிந்துவிடும் என்று அதிகாரிகள் சொன்னார்கள். (பிரிட்டனும் ஜெர்மனியும் கிறிஸ்துமஸுக்கு முதல்நாளில் இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டு ஒரு கால் பந்து போட்டி நடத்தியதாகக்கூட கேள்விப்பட்டேன். அதில் ஜெர்மனி ஜெயித்தது) ஆனால் முடியவில்லை. முடியவேயில்லை. எவ்வளவு காலம் இது நீடிக்கும் என தெரியாது என்கிறார்கள் அதிகாரிகள். மாதங்கள் ஆகலாம். ஆண்டுகளும் ஆகலாம்.

ஒரு செர்பிய ஆள், ஆர்ச் டியூக் பிரான்சிஸ் பெர்டினாண்டை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதில் ஆரம்பித்தது இந்தப்போர். நான் இங்குள்ள மற்ற சிப்பாய்களுடன் பேசி பல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறேன். காவ்ரிலோ ப்ரின்சிப் என்கிற இந்த ஆள் ஆஸ்திரிய ஹங்கேரியின் ஆர்ச் ட்யூக்கை சாரயோவா என்னுமிடத்தில் 1914 ஜூன் 28 அன்று சுட்டுக்கொன்றுவிட்டான். சாரயோவா போஸ்னியாவில் உள்ளது. அந்த இடம் எங்கிருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஐரோப்பாவில் எங்கோ இருக்கிறது என்று நினைக்கிறேன்.

எனவே ஆஸ்திரியா-ஹங்கேரி செர்பியா மீது போர் அறிவித்து. ஜெர்மனியை நண்பனாக்கிக் கொண்டது. (இங்கு நான் சிலவற்றை எழுதாமல் விடுகிறேன். எனக்குத்தெரியும் அது ஒன்றும் அத்தனை சிறிய விஷயமில்லை) பிறகு நமது நாடு பிரான்ஸுடன் சேர்ந்துகொண்டது. அதன்பின் வெகுவிரைவில் மொத்த உலகமும் போரில் குதித்து ஏதாவது ஒரு பக்கத்தில் சேர்ந்து சண்டையிட்டது. நேச நாடுகள் ஒன்று சேர்ந்தன. கிரேட் பிரிட்டன் பிரான்ஸ் மற்றும் ரஷ்யப்பேரரசு ஒரு பக்கம் (இத்துடன் ஜப்பான், பெல்ஜியம், செர்பியா மற்றும் ரொமேனியா ஆகிய நாடுகள் சேர்ந்து கொண்டன) ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா ஹங்கேரி மறுபக்கம். (இத்துடன் ஆட்டோமான் பேரரசு மற்றும் பல்கேரியா சேர்ந்து கொண்டன).

நான் சொல்கிறேன். இது பைத்தியக்காரத்தனம். ஆனால் பயங்கரமானதும் கூட. நாங்கள் நெடுங்குழிகளிலிருந்து போரிடவேண்டும். இந்த நெடுங்குழிகளில் இரண்டடி தண்ணீர் இருக்கும். இந்தத் தண்ணீர் கலங்கலாகவும் நாற்றமெடுத்தும் இருக்கும். இந்த நெடுங்குழிகளில் ஒன்று பெல்ஜியக் கடற்கரையிலிருந்து சுவிஸ் எல்லை வரை சுமார் 400 மைல் நீளம் கொண்டது என்கிறார்கள். எதிரிகளைக் குழப்புவதற்காக இந்த நெடுங்குழிகள் இடது கோணத்தில் கோணல் மாணலாக வெட்டப்பட்டு அதன் வழியாக உணவும் மருந்துகளும் கொண்டு செல்லப்படும். இந்த நெடுங்குழிகளில் ஒவ்வொரு நான்கு அங்குலத்திற்கும் ஒரு சிப்பாய் இருப்பார். போர்க்களத்தில் காயமடைந்த சிப்பாய்களை இழுத்துவர நாங்கள் நாய்கள்கூட வைத்திருக்கிறோம். நாய்கள் அவைகளின் வாயால் கயிறு மூலம் கவ்வி அவர்களை இழுத்து வரும். எங்கு பார்த்தாலும் ரத்தக்களரிதான்.

நாங்கள் யந்திரத்துப்பாக்கிகள், பீரங்கி வண்டி, ரசாயன ஆயுதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். ஒரு நிமிடத்தில் 15 முறை சுடக்கூடிய துப்பாக்கிகளை நான் பார்த்ததேயில்லை. இவைகள் ‘மான்ஸ்’ போர்க்களத்தில் உபயோகிக்கப்பட்டவை. இருப்பினும் எங்கள் எல்லோராலும் அதை உபயோகிக்க முடியாது. என்னிடம் ஒரு ‘லீ என்பீல்டு’ துப்பாக்கி உள்ளது. அதில் பத்து தோட்டாக்கள் வைக்கும் உறை உண்டு. அதைக் கொண்டு என்னால் ஒரு நிமிடத்தில் நன்றாகக்குறி பார்த்து பன்னிரண்டு முறை சுடமுடியும்.

மற்ற நாடுகளிலிருந்து வந்துள்ள சிப்பாய்களோடு சேர்ந்து போரிடுகிறோம். உதாரணத்துக்கு இந்தியா. நான் தலைப்பாகை அணிந்த சீக்கிய சிப்பாய் ஒருவரைச் சந்தித்தேன். பாரிஸ் நகரம் ஒரு சொர்க்கம். ஆனால் ரொட்டிதான் வெளியே தீய்ந்து உள்ளே வேகாமல் மிக மட்டமாக உள்ளது. என்றார் அவர். அவர்கள் துணிவு மிக்க வீரர்கள். எல்லோருமே சண்டையிடுவதால் அவர்கள் அறிவார்கள் இது பயங்கர போர் என்று. கால் ஊனமுற்றோர் தவிர ஒருவர் கூட முழுசாய் பஞ்சாப் போய் சேர முடியாது என்கிறார் எனது சீக்கிய நண்பர்.

அவர் தன் நாட்டுக்கு நலமாகப் போய்ச்சேர்வார் என நான் நம்புகிறேன்.

கடற்போரிலும் எதுவும் சுலபமில்லை. அம்மா, உனக்கு நினைவிருக்கிறதா ஆர் எம் எஸ் லூசிடானியா ஜெர்மனியின் யு -படகால் வீழ்த்தப்பட்டது? அதனால் 1198 குடிமக்கள் இறந்துபோனார்கள்.

எனது சகோதரி ஃப்லாரீ பட்டாளத்தில் என்னைச் சேரவேண்டாமென்று சொல்லிக்கொண்டே இருந்தாள் ஆனால் இந்த யுத்தம் நம்மைச் சிக்க வைத்துவிட்டது. சான்டேஸ் என்று அழைக்கப்படுபவர் 1915ல் பட்டாளத்தில் சேர்ந்தது உங்களுக்குத்தெரியுமா அம்மா? அவர் ஒரு பெண். எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங்கை நினைவிருக்கிறதா உங்களுக்கு? சரி. அவர் மகன் (Battle of Loos) ‘லூஸ்’ போரில் பங்கேற்று இறந்துவிட்டான் என்று கேள்விப்பட்டேன்.

இந்தப் போரில் நான் எனது சிறிய பங்கை ஆற்றத்தான் வேண்டும். இல்லையேல் பெண்கள் என்னிடம் வெள்ளைச் இறகினைக் கொடுத்துக் கோழையெனக் கூறுவார்கள். அரசாங்கம் விரைவிலேயே ஒவ்வொருவரையும் போரில் பங்காற்ற வைக்கப்போகிறது. நல்லது. நான் ஏற்கனவே போரில் ஈடுபட்டுவிட்டேன். உலகெங்கிலும் உள்ள சிப்பாய்கள் இதே நிலையில்தான் இருக்கிறார்கள். நமது வீரதீரத்தைக்காட்ட இது ஒரு வாய்ப்பு.

ஒருவேளை நான் வீட்டுக்கு வரலாம் அல்லது வராமலும் போகலாம். ஆனால் நான் எனது கடமையைச் செய்யப்போகிறேன். என்னையெண்ணி நீ பெருமிதங்கொள்வாய் என எண்ணுகிறேன்.

என்றும் உன் மகன்,

ஹொரேஸ் அய்ல்ஸ்.

பி.கு;-யாராவது ஒருவர் என்னைப்பற்றி வரலாற்றுப்புத்தகங்களில் எழுதுவதை நான் விரும்புகிறேன். அப்படிச்செய்தால் நன்றாகயிருக்குமில்லையா?.


English version of this letter – here

Blog post on Horace Iles – here

 

Advertisements
This entry was posted in Other Translations and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s