அருட்பத்து – வாரம் ஒரு வாசகம் – 29

9.அருட்பத்து

(திருப்பெருந்துறையில் அருளியது)

பாடல்:9.

மருளனேன் மனத்தை மயக்கு அற நோக்கி, மறுமையோடு இம்மையும் கெடுத்த
பொருளனே! புனிதா! பொங்கு வாள் அரவம், கங்கை நீர், தங்கு செம் சடையாய்!
தெருளும் நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
அருளனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், `அதெந்துவே?’ என்று, அருளாயே!

மயங்கும் என் மனதை
மயக்கம் தீர நோக்கி
மறு பிறவியையும்
இப்பிறவியையும்
ஒருங்கே ஒழித்த மெய்ப்பொருளே !
புனிதனே!
சீறுகின்ற
ஒளியுடைய பாம்பும்
கங்கை நதியும் தங்கும்
சிவந்த சடையோனே!
தெளிவு தரும் வேதங்கள் நான்கும் ஒலிக்கும்
திருப்பெருந்துறையிலே
வளமிகு மலர்கள் பூத்துக்குலுங்கும்
குருந்த மர நிழலில் அமர்ந்துள்ள சீராளா!
உன்னை அன்போடு நான் அழைத்தால்
‘அஞ்சாதே’ என்று நீ அருள்வாயாக.

This entry was posted in Thiruvasagam and tagged . Bookmark the permalink.

Leave a comment