15.திருத்தோள் நோக்கம்
(தில்லையில் அருளியது)
{திருத்தோள் நோக்கம் என்பது பண்டைய மகளிர் விளையாட்டு}
பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்க,
செருப்பு உற்ற சீர் அடி, வாய்க் கலசம், ஊன் அமுதம்,
விருப்பு உற்று, வேடனார் சேடு எறிய மெய் குளிர்ந்து, அங்கு,
அருள் பெற்று, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ!
பாடல் 3.
—
வேடன் கண்ணப்பன்
தன் செருப்பணிந்த கால்கள்,
நீர் வார்க்கும் கலசமாகத் தன் வாய்,
அமுதமான இறைச்சி
இவற்றையெல்லாம் கொண்டு
ஏதோ
மங்கலப் பொருள்களால் வழிபாடு செய்வதுபோல்
சிவனுக்குப் பூசை செய்தான்
சிவனும் அப்பூசையை விரும்பி ஏற்று
உடல் குளிர்ந்து
அவனுக்கு அருள் செய்தான்
கண்ணப்பனின் பெருமையை உலகம் அறிந்தது
இந்த வரலாற்றைப் பாடி நாம் ஆடுவோம்
———————————————————————————————————
உரை மாண்ட உள் ஒளி உத்தமன் வந்து, உளம் புகலும்,
கரை மாண்ட காமப் பெரும் கடலைக் கடத்தலுமே,
இரை மாண்ட இந்திரியப் பறவை இரிந்து ஓட,
துரை மாண்டவா பாடி தோள் நோக்கம் ஆடாமோ!
பாடல் 14
—
சொல்லிலடங்கா உள்ளொளியாய்
உத்தமன் சிவன்
என் உள்ளம் புகுந்தான்
அதனால்
கரை காணா ஆசைப் பெருங்கடலை நான் கடந்தேன்
இரை இழந்த ஐம்புலப்பறவைகளும்
பறந்தோடின என்னைவிட்டு
இப்படி
தன் முனைப்பு அழிந்த விதம் பாடி நாம் ஆடுவோம்.