9.திருப்பொற்சுண்ணம்
(தில்லையில் அருளியது)
[வாசனை திரவியங்களை உரலில் இட்டு இடிக்கப்படுவது பொற்சுண்ணம். இதில் சிறிது பொன்னும் சேர்க்கப்படும். பொன் போன்ற நிறமுடைய இப்பொடி இறைவனின் திருமஞ்சனத்தின்போது உபயோகிக்கப்படுவது.]
வாள் தடம் கண் மட மங்கை நல்லீர்! வரி வளை ஆர்ப்ப, வண் கொங்கை பொங்க,
தோள் திருமுண்டம் துதைந்து இலங்க, `சோத்தம், பிரான்!’ என்று சொல்லிச் சொல்லி,
நாள் கொண்ட நாள் மலர்ப் பாதம் காட்டி, நாயின் கடைப்பட்ட நம்மை, இம்மை
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப் பாடி, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
பாடல் 8
—
ஒளிவீசும் பெரிய கண்கள் கொண்ட பெண்களே!
உங்கள் வளையல்கள் ஒலிக்கவும்
பருத்த மார்பகங்கள் பொங்கியெழவும்
தோளிலும் நெற்றியிலும் திருநீறு பளிச்சிடவும்
மீண்டும் மீண்டும் அஞ்சலி சொல்வோம்
புத்தம் புது தாமரையின் எழில்
அதைத் தோற்கடிக்கும் அவன் திருவடிகள்
அத்திருவடிகளைக் காட்டி
நாயினும் கீழான நம்மை ஆட்கொண்டான்
இப்பிறவியிலே..
அவன் ஆட்கொண்ட விதம் பாடிப்பாடி
அவன் நீராடப் பொற்சுண்ணம் இடிப்போம் நாமே.
———————————————————————————————————-
மாடு, நகை வாள் நிலா எறிப்ப, வாய் திறந்து அம் பவளம் துடிப்ப,
பாடுமின், நம் தம்மை ஆண்ட ஆறும், பணி கொண்ட வண்ணமும்; பாடிப் பாடித்
தேடுமின், எம்பெருமானை; தேடி, சித்தம் களிப்ப, திகைத்து, தேறி,
ஆடுமின்; அம்பலத்து ஆடினானுக்கு, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
பாடல் 11.
—
பெண்களே!
நீங்கள் சிரிக்கையில் உங்கள் பற்கள்
அருகே நிலவொளி வீசுவதுபோல் ஒளிர்கின்றன.
பாடும்போது
செம்பவள உதடுகள் துடிக்கின்றன
சிவன் நம்மை ஆண்டருளிய பாங்கையும்
இறைப்பணியில் நம்மை நிற்க வைத்த பாங்கையும்
திரும்பத் திரும்பப்பாடி
அவனைத் தேடுங்கள்
அந்தத் தேடலிலே மனம் பித்தாகி
அவனைக் காணாது திகைத்து
கண்டவுடன் மனம் தெளிந்து ஆடுங்கள்
தில்லையம்பலத்தே ஆடினவன் நீராடப்
பொற்சுண்ணம் இடிப்போம் நாமே.