திருவெம்பாவை – வாரம் ஒரு வாசகம் – 7

7.திருவெம்பாவை

(திருவண்ணாமலையில் அருளியது)

`பாதாளம் ஏழினும் கீழ் சொல் கழிவு பாத மலர்;
போது ஆர் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே!
பேதை ஒருபால்; திருமேனி ஒன்று அல்லன்;
வேத முதல்; விண்ணோரும், மண்ணும், துதித்தாலும்,
ஓத உலவா ஒரு தோழம் தொண்டர் உளன்;
கோது இல் குலத்து, அரன் தன் கோயில் பிணாப் பிள்ளைகாள்!
ஏது அவன் ஊர்? ஏது அவன் பேர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்?
ஏது அவனைப் பாடும் பரிசு?’ ஏல் ஓர் எம்பாவாய்!

கீழுலகம் ஏழினுக்கும் கீழாய்
சொல்லிலடங்கா அவன் திருவடிகள்
அனைத்துக்கும் மேலே
பூக்கள் அணிந்த அவன் திருமுடி
அவன் உமையொருபாகன்
எனவே
அவன் மேனி ஒன்றன்று
வேதமும்
விண்ணவரும்
மண்ணுலகும் புகழ்ந்தாலும்
சொல்லிலடங்கா உயிர்த்துணைவன்
தொண்டருள் இலங்குகிறான்
குற்றமற்ற சிவன் அவன்
சிவாலயப் பெண்பிள்ளைகளே
அவனுக்கு
ஊர் இல்லை
பேர் இல்லை
உறவினருமில்லை
அயலாருமில்லை
இவனை, இந்தச்சிவனை
பாடும் வகை என்ன பாவாய்!

(திருவெம்பாவை பாடல் 10)

————————————————————————————–

`காது ஆர் குழை ஆட, பைம் பூண் கலன் ஆட,
கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆட,
சீதப் புனல் ஆடி, சிற்றம்பலம் பாடி,
வேதப் பொருள் பாடி, அப் பொருள் ஆமா பாடி,
சோதி திறம் பாடி, சூழ் கொன்றைத் தார் பாடி,
ஆதி திறம் பாடி, அந்தம் ஆமா பாடி,
பேதித்து நம்மை, வளர்த்து எடுத்த பெய்வளை தன்
பாதத் திறம் பாடி, ஆடு’ ஏல் ஓர் எம்பாவாய்!

காதில் தோடுகள் ஆட
பசும்பொன் அணிகலன்கள் ஆட
தலையில் சூடிய மாலை ஆட
அம்மாலையை மொய்க்கும்
வண்டுகள் ஆட
நாம்
குளிர்ந்த நீரில் மூழ்கியெழுவோம்
பின்
சிற்றம்பலப் புகழ் பாடி
வேதப் பொருள் பாடி
வேதப் பொருளாய் நிற்கும்
இறைவனைப்பாடி
சடையினிலே கொன்றை மலரணிந்த
ஞானப் பேரொளி பாடி
அவன்
தோற்றமும் முடிவுமாய் இருப்பதையும் பாடி
நம்மைத் தேர்ந்தெடுத்து
வளர்த்தெடுத்த
பராசக்தியின்
பாத கமலங்களைப் பாடி
ஆடுவோம்.

(திருவெம்பாவை பாடல் 14)

This entry was posted in Thiruvasagam and tagged . Bookmark the permalink.

Leave a comment