திருச்சதகம் – வாரம் ஒரு வாசகம் – 5

திருச்சதகம் 1.மெய்யுணர்தல்
(திருப்பெருந்துறையில் அருளியது)

உழிதரு காலும், கனலும், புனலொடு, மண்ணும், விண்ணும்,
இழிதரு காலம், எக் காலம் வருவது? வந்ததன் பின்,
உழிதரு கால், அத்த! உன் அடியேன் செய்த வல் வினையைக்
கழிதரு காலமும் ஆய், அவை காத்து, எம்மைக் காப்பவனே!

சஞ்சரிக்கின்ற காற்றும்
தீயும், நீரும், மண்ணும், விண்ணும்
ஊழியில் அழிந்தொழியும்.
தோற்றமும் அழிவும்
காலத்தின் வேலை
அக்காலத்தையே ஆள்பவனே!
என் கொடிய வினைகளை அழிக்கும்
காலனாய் நீ இருந்து
வினையும் காலமும்
என்னைப் பற்றாதவாறு காப்பவனே!
நீயே எனக்குப் புகலிடம்.

(திருச்சதகம், மெய்யுணர்தல், பாடல் 8

————————————————————————————–

திருச்சதகம் 2.அறிவுறுத்தல்

நாடகத்தால் உன் அடியார்போல் நடித்து, நான் நடுவே
வீடு அகத்தே புகுந்திடுவான், மிகப் பெரிதும் விரைகின்றேன்;
ஆடகச் சீர் மணிக் குன்றே! இடை அறா அன்பு உனக்கும் என்
ஊடு அகத்தே நின்று, உருகத் தந்தருள்; எம் உடையானே!

இயல்பில் ஒன்றாத எனது பக்தி
நாடக நடிப்பு போன்றது
ஆனாலும்
வீடு பேறு அடைய விருப்பம் மேலிட்டு
அவசரப்படுகின்றேன் நான்
பொன் மலையே! மாணிக்கக் குன்றே!
எப்போதும் உன்னை எண்ணி உருக
உதவி அருளவாய் சிவனே!

(திருச்சதகம் பாடல் 11)

————————————————————————————–

திருச்சதகம் 3.சுட்டறுத்தல்.

தனியனேன், பெரும் பிறவிப் பௌவத்து, எவ்வம்
தடம் திரையால் எற்றுண்டு, பற்றுஒன்று இன்றி,
கனியின் நேர் துவர் வாயார் என்னும் காலால்
கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு,
`இனி, என்னே உய்யும் ஆறு?’ என்று என்று எண்ணி,
அஞ்சு எழுத்தின் புணை பிடித்துக்கிடக்கின்றேனை,
முனைவனே! முதல், அந்தம், இல்லா மல்லல்
கரை காட்டி, ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே.

தனி ஒருவனாய்த் தத்தளிக்கின்றேன்
பிறவிப் பெருங்கடலில்
துன்பப் பேரலைகள்
வந்து வந்து மோதுகின்றன
செங்கனிவாய்ப் பெண்கள் பால்
மயக்கமெனும் பெருங்காற்றால் கலங்குகின்றேன்
ஆசையென்னும் சுறாவோ
என்னை விழுங்க விரைகிறது
இந்நிலையில்
தப்பிப்பிழைத்துக் கரைசேர வழி தேடி
எண்ணங்கள் பல உதிக்கின்றன
இறைவா!
நெருக்கடியான இந்த வேளையிலே
‘நமசிவாய’ எனும் திருமந்திரம்
மரக்கலமாய் வருகிறது உன்னருளால்.
தலைவனே!
அற்பனான என்னை
நிலையான வளம் கொண்ட
முக்தி எனும் பெருநிலத்தில் சேர்ப்பித்து
ஆட்கொண்டாய்.

(திருச்சதகம் பாடல் 27)

————————————————————————————–

திருச்சதகம் 8.ஆனந்தத்து அழுந்தல்

சிந்தை, செய்கை, கேள்வி, வாக்கு, சீர் இல் ஐம் புலன்களால்,
முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன்,
வெந்து, ஐயா, விழுந்திலேன்; என் உள்ளம் வெள்கி விண்டிலேன்;
எந்தை ஆய நின்னை, இன்னம் எய்தல் உற்று, இருப்பனே.

மனம்,செயல்,கேள்வி,மொழியாலும்
சீரற்ற என் ஐம்புலன்களாலும்
உன்னை வழிபட்டிருக்கலாம்
சீரிய இந்தச்செயல்
எப்போதோ நிகழ்ந்திருக்கவேண்டும்
ஆனால் நிகழவில்லை
குற்றம் எனதேதான்
உன்னை அடையத் தவறிய பாவியான நான்
தீயில் வீழ்ந்து வெந்துபோகவில்லை
வெட்கத்தினால் என் உள்ளம்
உடைந்தும் போகவில்லை
என் தந்தை நீ
உன்னை அடைய விருப்பம் மிகுந்தவன் என
வீண் வார்த்தை பேசி
இன்னமும் காலம் கழிக்கின்றேன்.

(திருச்சதகம் பாடல் 79)

Advertisements
This entry was posted in Thiruvasagam and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s