போற்றித் திருவகவல் – வாரம் ஒரு வாசகம் – 4

‘போற்றித் திருவகவல்’
(தில்லையில் அருளியது)

தெய்வம் என்பது ஓர் சித்தம் உண்டாகி,
முனிவு இலாதது ஓர் பொருள்அது கருதலும்
ஆறு கோடி மாயா சத்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின;
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி,
நாத்திகம் பேசி, நாத் தழும்பு ஏறினர்;
சுற்றம் என்னும் தொல் பசுக் குழாங்கள்
பற்றி அழைத்துப் பதறினர்; பெருகவும்
விரதமே பரம் ஆக, வேதியரும்,
சரதம் ஆகவே, சாத்திரம் காட்டினர்;
சமய வாதிகள் தம் தம் மதங்களே
அமைவது ஆக, அரற்றி, மலைந்தனர்;
மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம், சுழித்து, அடித்து, ஆஅர்த்து,
உலோகாயதன் எனும் ஒள் திறல் பாம்பின்
கலா பேதத்த கடு விடம் எய்தி,
அதில் பெரு மாயை எனைப் பல சூழவும்,

தப்பாமே, தாம் பிடித்தது சலியா,
தழல் அது கண்ட மெழுகு அது போல,
தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து,
ஆடியும், அலறியும், பாடியும், பரவியும்,
`கொடிறும், பேதையும், கொண்டது விடாது’ எனும்
படியே ஆகி, நல் இடை அறா அன்பின்,
பசு மரத்து ஆணி அறைந்தால் போல,
கசிவது பெருகி, கடல் என மறுகி,
அகம் குழைந்து, அனுகுலம் ஆய், மெய் விதிர்த்து,
சகம் `பேய்’ என்று தம்மைச் சிரிப்ப,
நாண் அது ஒழிந்து, நாடவர் பழித்துரை
பூண் அதுவாக, கோணுதல் இன்றி,
சதிர் இழந்து, அறி மால் கொண்டு, சாரும்
கதியது பரம அதிசயம் ஆக,
கற்றா மனம் எனக் கதறியும், பதறியும்,
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது,
அரு பரத்து ஒருவன் அவனியில் வந்து,
குருபரன் ஆகி, அருளிய பெருமையை,
சிறுமை என்று இகழாதே, திருவடி இணையை,
பிறிவினை அறியா நிழல் அது போல,
முன் பின் ஆகி, முனியாது, அத் திசை
என்பு நைந்து உருகி, நெக்கு நெக்கு ஏங்கி,
அன்பு எனும் ஆறு கரை அது புரள,
நன் புலன் ஒன்றி, `நாத’ என்று அரற்றி,
உரை தடுமாறி, உரோமம் சிலிர்ப்ப,
கர மலர் மொட்டித்து, இருதயம் மலர,
கண் களி கூர, நுண் துளி அரும்ப,
சாயா அன்பினை, நாள்தொறும் தழைப்பவர்
தாயே ஆகி, வளர்த்தனை போற்றி!

“வெறுப்பற்ற பேரன்பு வடிவினன் இந்தப் பரம்பொருள்”
என்கிற நல்லறிவை
பிறவிகள் பலப்பல எடுத்தபின்தான் பெறுகின்றோம்
ஆனால்
அந் நல்லறிவைச்
சுடர்விடாமல் தடுப்பதற்குக்
கோடி கோடி சக்திகள் இடை மறிக்கும்
நம் அன்புக்குரியோரும்,அயலாரும்
நாக்குத் தழும்பேறும்வரை
நாத்திகம் பேசுகின்றார்.
உறவினரெல்லாம் சூழ்ந்துவந்து
போகாதே ஞானவழி தேடி என்று
வருந்தி வேண்டுகின்றார்.
பரம்பொருளை உணர்ந்தரிய
விரதங்களே வழியென வேதியர் கூறுகின்றார்
உய்வதற்கு வழி
தன் மதம்தான் என
வெவ்வேறு மதத்தினரும்
வீண்பெருமை பேசுகின்றார்
மாயாவாதிகளோ
உலகமே பொய் என
அலைக்கழிக்கும் பெருங்காற்றாய்க் குழப்பிடுவார்
மறுமையை மறுக்கும் உலோகாயதன்
ஒளியும் வலிவும் கொண்ட பாம்பைப்போன்றவன்
அவன் தத்துவங்கள் யாவும் நச்சுக்கு ஒப்பாகும்
எது சரி எது தவறு என உண்ரமுடியாமல்
மயங்க வைத்திடும் அத் தத்துவங்கள்.
மயக்கத்தின் பிடியில் மயங்காத சாதகன்
அனலிடை மெழுகாய் உருகி உருகி
இறைவனைத் தொழுகிறான்
தொழுகையில் அவன் உடல் நடுங்குகின்றது
அந்த பக்தன்
ஆடியும் பாடியும்
அரற்றியும் வாழ்த்தியும்
குறடும் மூடனும் கொண்டது விடாதுபோல்
பிடித்த நன்னெறியின் பிடி வழுவாமல்
தூய அன்பில் திளைக்கின்றான்
பச்சை மரத்தில் ஆணி அடித்ததுபோல்
பேருணர்ச்சியை உள்ளத்துள் ஊட்டி
உள்ளம் உருகி
உடல் நடுங்கி
பக்தி செய்பவனைப்
பேயென எண்ணி
இவ்வுலகம் சிரிக்கிறது.
சிறந்த பக்தன்
இவற்றுக்கெல்லாம் நாணுவதில்லை
உலகோர் பழிப்புரையை
(மனம் கோணாமல்)
அணிகலனாய் அவன் ஏற்கின்றான்
தான் வல்லவன் எனும் கர்வம்
ஞானத்துக்குத்தடை
மெய்யறிவு ஓங்க நாளும் தேவை முயற்சி
முக்திக்கு ஈடு இல்லை எதுவும்
அதன் மகிமையை எண்ணி வியப்பது சிறப்பு.
கன்றுக்காக பசு ஏங்குவதுபோல்
இறைவனின் அருளுக்கு ஏங்குகிறது
பக்தர்கள் மனம்
அவர்கள் கதறுகிறார்கள், பதறுகிறார்கள்
சிவனன்றி வேறோர் சிந்தனை
அவர்கள் கனவிலும் இல்லை
யாருமே அறிந்துணர இயலாப் பரமன்
இந்தப்பூமியில்
பரமகுருவாய் வந்து
எனக்குத் திருவருள் தந்தது
அவனின் ஒப்பற்றத் தன்மைக்கு
ஓர் எடுத்துக்காட்டு
இறைவனின் இச்செயல்
எளிதென எண்ணாதே!
உடலை விட்டு நிழல் நீங்காததுபோல்
அவன் திருவடிகளை
எப்போதும் சிந்தித்திருப்பாய்
இறைவழிபாட்டில்
ஏற்றத்தாழ்வுக்கு இடமேயில்லை
வெறுப்புக்கும் அங்கே வேலையில்லை
திருவருள் தந்த திசையினை நோக்கி
எலும்பும் உருக அன்பு செய்ய
பக்தி வெள்ளம் பெருகிப் பெருகிப்
புலன்கள் ஐந்தும் ஒன்றாகின்றன
நாதா!நாதா!
என நாவு அரற்றும்
பக்திப்பெருக்கால் சொல் தடுமாறும்
உடம்பு சிலிர்க்கும்,கைகள் குவியும்
உள்ளம் பரவசமாகிடும்
ஆனந்தக்கண்ணீர் அரும்பிடும் கண்களில்
பக்திநெறி அழியாமல்
செழித்தோங்கச் செய்கின்றார் மெய்யடியார்
அவர்க்கெல்லாம் தாயாகி
மென்மேலும் அன்பு வளர்க்கும்
பேரருளாளனே! சிவனே!
உனக்கு வணக்கம்.

(போற்றித்திருவகவல் 42-87)

Advertisements
This entry was posted in Thiruvasagam and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s