
அல்பெட்ராஸ் என்பது பசிபிக் மற்றும் தென் அட்லாண்டிக்கடல் பகுதிகளில் வாழும் நீண்ட இறக்கைகளுடைய மிகப் பெரிய வெண்ணிறக் கடற்பறவை.
கப்பல் பயணத்தின் பல சமயங்களில்
மாலுமிகள்
பொழுதைப்போக்க
ஆழ்கடலின் குறுக்கே
கப்பலுக்கு மேலே
அசட்டையாகப் பறக்கும்
அல்பெட்ராசைப் பிடிப்பார்கள்.
சுதந்திர வெளியான கப்பலின் மேல்தளத்தில்
கட்டுண்ட அந்தப் பறவை
கலவரப்பட்டு
பரிதாபமாக
தன் நீண்ட வெள்ளை இறக்கைகளை
கரையிறக்கப்பட்டத் துடுப்புகள் போல்
தன் இரு பக்கமும் இழுத்துக்கொள்ளும்.
சற்று முன்னால் கூட
கம்பீரமாகப் பறந்த இந்தப் பறவையின்
அலங்கோலத்தை என்னவென்பது?
ஒருவன் அதன் அலகைக்
குழாயால் குத்துகிறான்
மற்றொருவனோ
தள்ளாடும் அதனைக் கேலி செய்கிறான்.
இந்தக் கவிஞன்
உயர்ந்த வானத்தின் மன்னாதி மன்னன்
புயல் மேகங்களையெல்லாம்
அவன் கடந்து போவான்
ஆனால்
பூமியிலோ
தனிமைப்பட்டு
அவன் கேலிக்கு ஆளாவான்
நீண்ட இறக்கைகள்
அவன் நடையைத் தடுக்கும்.
பிரெஞ்சுக் கவிஞர் சார்லஸ் பியர் பாடலேரின் (1821-1867) THE ALBATROSS என்கிற சிறு கவிதையின் தமிழ் வடிவம். இந்தத் தமிழாக்கம் பிரெஞ்சிலிருந்து இந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ரிச்சர்ட் ஹோவார்டு அவர்களின் மொழிபெயர்ப்பைத் தழுவியது.