யோபுவின் கதை – அதிகாரம் 39

தேவனின் பேச்சு தொடர்கிறது…….

யோபுவே!

வரையாடுகள் எப்பொழுது குட்டிகளை ஈன்றெடுக்கும் என்று உனக்குத் தெரியுமா? பெண் மான் குட்டி போடுவதைக் கவனித்திருக்கிறாயா? மிருகங்கள் தங்கள் குட்டிகளை ஈனுவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவை நீ அறிவாயா? அவை தமது பின்னங்கால்களை மடக்கி குட்டிகளை ஈனும். அப்பொழுது அவற்றின் பிரசவ வேதனை முடிந்துவிடும். ஈன்ற அவற்றின் குட்டிகளோ காட்டுவெளிகளில் பலமிக்கதாக வளரும். வளர்ந்த பின்னே அவை தம் இருப்பிடத்துக்குத் திரும்பாது.

காட்டுக்கழுதைகளைச் சுதந்திரமாகத் திரியவிட்டது யார்? அவை கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டவர் யார்? வறண்ட வெட்ட வெளியைத்தான் நான் அவைகளின் இருப்பிடமாக்கினேன். நகரத்தின் சந்தடிகளைக் கேட்டு அவை அலட்சியம் செய்யும். கழுதை வண்டிக்காரர்களின் கத்தலை அவை கேட்காது. மலைப்பகுதிகளெல்லாம் அவற்றின் மேய்ச்சல் நிலம். உண்பதற்கு அங்கே அவை பசும்புற்களைத் தேடி அலையும்.

யோபுவே!

காட்டு எருதுகள் உனக்கு அடங்கி வேலை செய்யுமா? இரவிலே அவை உன் தொழுவத்தில் தங்குமா? உனது நிலங்களை உழுவதற்கு அவைகளை உன்னால் ஏரில் பூட்ட முடியுமா? அவற்றின் வலிமையை நம்பி உன் வேலைகளை அவற்றிடம் ஒப்படைக்க முடியுமா? தானியங்களைக் கொண்டுவந்து உன் களத்தில் அவை சேர்க்குமா?

தீக்கோழி என்னதான் தன் சிறகுகளை விரித்து மகிழ்ச்சியுடன் ஓடினாலும் அது மயிலின் சிறகுக்கும் இறகுக்கும் ஒப்பாகுமா? தீக்கோழிகள் தரையில் முட்டையிட்டுக் கதகதப்புக்காக மணலில் வைத்திருக்கும். அந்த முட்டைகள் மேல் காட்டுவிலங்குகள் கால் பதித்துவிடும் ஆபத்து உள்ளதென்று அவற்றுக்குத் தெரியாது. அவை தம் குஞ்சுகள் தம்முடையதென்ற எண்ணமின்றி அவற்றிடம் பரிவின்றி நடந்துகொள்ளும். தம் குஞ்சுகள் இறந்தால் அவை வருந்துவதில்லை. அவற்றின் உழைப்பெல்லாம் வீண். நான் தீக்கோழிகளுக்கு அறிவைக் கொடுக்கவில்லை. நல்ல புத்தியையும் தர வில்லை. ஆனால் அவை தம் சிறகை விரித்து ஓடும்போது குதிரையையும் அதன் மேல் சவாரி செய்கிறவனையும் அலட்சியப்படுத்தும்.

யோபுவே!

குதிரைகளுக்கு நீ வலிமையைத் தந்தாயோ? அதன் கழுத்திலே அழகாக அசைந்தாடும் பிடரி மயிரை வளரச்செய்தாயோ? அவைகளைத் தத்துக்கிளிகளைப்போல் குதிக்க வைத்தாயோ? அவை தம் கம்பீரக்கனைப்பினால் மற்றவரை அச்சுறுத்தும். அவை தம் வலிமையை எண்ணி மகிழ்ந்து பாதங்களைத் தரையில் முரட்டுத்தனத்துடன் பதித்து எதிரிகளைத் தாக்கும். அவை எதற்கும் அஞ்சாது. வாள் வீச்சுக்கு அஞ்சிப் பின்வாங்காது. அவற்றின் பக்கவாட்டிலே அம்புகள் சடசடக்கும். மின்னுகின்ற ஈட்டிகளும் கேடயங்களும் அங்கு உண்டு. கர்வமும் மூர்க்கமும் கொண்டு தரையை விழுங்குவதுபோல் துடித்து எக்காளத்தின் ஒலிக்கு அஞ்சாமல் பாயும். எக்காளத்தின் ஒலியைக் கேட்டதும் அது கனைக்கும். போரையும், படைத்தலைவனின் கொக்கரிப்பையும், சேனைகளின் ஆரவாரத்தையும் தூரத்திலிருந்தே அறிந்துகொள்ளும்.

யோபுவே!

உனது அறிவின் துணை கொண்டு பருந்து பறக்கவேண்டிய திசையை நீ தீர்மானிக்க முடியுமா? அவை தமது சிறகை விரித்து தெற்கு நோக்கிப் பறக்கும். கழுகுகளை மிக உயரத்தில் பறக்கும்படி உன்னால் கட்டளை பிறப்பிக்க முடியுமா? அவை தமது கூடுகளை எவ்வளவு உயரத்தில் முடியுமோ அவ்வளவு உயரத்தில் கட்டும். உயரமான செங்குத்துப்பாறைகளில் அவை இருந்து,இரவில் அங்கேயே தங்கும். மலையுச்சியிலே அவை பாதுகாப்புடன் இருப்பதாக உணர்கின்றன. அங்கிருந்து அவை இரை தேடும். வெகுதூரத்திலிருந்து இரையை அவற்றால் பார்க்க முடியும். அவற்றின் குஞ்சுகள் ரத்தத்தை உறிஞ்சும். பிணங்கள் எங்குள்ளதோ அங்கே கழுகுகள் கூடும்.

தொடரும்…………

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s