யோபுவின் கதை – அதிகாரம் 38

தேவனின் முதல் பேச்சு ………

சூறாவளியின் பின்னணியில் தேவனின் குரல் ஒலிக்கிறது.

நான் வகுத்த நியதிகளை மறுக்கும் நீ யார்? நீ என்ன பேசுகிறாய் என்று உணரவில்லை. நான் உன்னிடம் சில கேள்விகள் கேட்கிறேன். அவற்றுக்குப் பதில் சொல்லத் தயாராக இரு. நான் இந்தப் பூமியைப் படைத்தபோது நீ எங்கிருந்தாய்? நீ அறிவாளியானால் இந்த என் கேள்விக்குப் பதில் சொல். யார் அதனை அளந்தார்கள் என்று கூறு பார்ப்போம். அளவுக்கோடுகளை அதன்மேல் வரைந்தவர் யார்? தெரிந்தால் கூறு. அது நிலைத்திருப்பதற்கான ஆதாரம் என்ன? அதிலுள்ள முதல் கல்லைப் பதித்தது யார்? படைத்தல் நிகழ்ந்தபோது காலை விண்மீன்கள் ஒன்றுகூடி கீதமிசைத்தன. தேவதைகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன. கடல் கரை புரண்டு வந்தபோது அதன் வாயில்களை அடைத்தவர் யார்? மேகங்களை மேல்துணியாக்கி அதன்மேல் போர்த்தி அதனை இருளால் மூடினேன். கதவுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு நான் அதற்கு எல்லைகள் வகுத்தபின் ‘நீ இதுவரை வரலாம். இந்த எல்லையைத்தாண்டி உன் பெருமை மிகு அலைகள் வரக்கூடாது’ என்று நான் சொன்னபோது நீ எங்கிருந்தாய்?

யோபுவே! நீ எப்போதாவது பொழுதைப் புலரவைக்கக் கட்டளை பிறப்பித்திருக்கிறாயா? சூரியன் எங்கே உதிக்கவேண்டுமென காண்பித்திருக்கிறாயா? பகலின் ஒளிக்கிரணங்களை பூமியின் ஒவ்வொரு மூலையிலும் ஒளிரச்செய்து தீயவர்களை விரட்டியடிக்கும்படி செய்ய உன்னால் முடியுமா? முத்திரையிடப்பட்ட களிமண்போல் பூமி உருவங்கொள்கிறது. பூமியிலுள்ள மலைகளும் பள்ளத்தாக்குகளும் உனது அங்கியின் மடிப்புக்களைப்போல் காணப்படுகின்றன. தீயவர்களைச் சுற்றிலும் இருளிருக்கும். ஒளி பிறந்தவுடன் அவர்கள் பலமெல்லாம் மாயமாகும்.

யோபுவே! நீ கடலின் ஆழங்களுக்குச்சென்று அங்கே உலவினதுண்டா? மரணத்தின் வாயில்களை நீ கண்டதுண்டா? அங்கு படிந்திருக்கும் இருளை நீ அறிவாயா? பூமி எவ்வளவு பெரிதென்று நீ அறிவாயா? இவையெல்லாம் தெரிந்தால் நீ எனக்குக் கூறு. ஒளி எங்கிருந்து பிறக்கிறது? எங்கு இருள் குடிகொண்டுள்ளது? அவற்றின் எல்லையை நீ அறிவாயா? அவை இருக்கும் பாதை உனக்குத்தெரியுமா? உனக்குத்தெரியும் என நான் அறிவேன். நீ முன்பே பிறந்து பல வருடங்கள் வாழ்ந்திருக்கிறாய்.

யோபுவே! பனியும் கல் மழையும் உள்ள கிடங்கைப் பார்த்திருக்கிறாயா? பனியையும், கல் மழையையும் ஆபத்தும், கலகமும், போரும் வரும் காலத்தில் பயன்படுத்துவதற்காக வைத்துள்ளேன். ஒளி பரவுவதற்கும், பூமியினிடையே கீழைக்காற்று வீசுவதற்கும் பாதைகள் எங்கே? பாழ் வெளிகளிலும், வெற்றிடங்களிலும்,பூமியில் மனிதர் குடியில்லாத இடங்களிலும்,வனாந்தரங்களிலும் தாவரங்கள் முளைக்கக் காரணமாயிருக்கும் இடியுடன்கூடிய மழைக்குப் பாதை வகுத்தவர் யார்? மழைக்குத் தகப்பன் உண்டா? பனித்துளிகளைப் பிறப்பித்தவர் யார்? பனிக்கட்டி யார் வயிற்றில் தோன்றியது? வானத்தின் உறைபனியை உருவாக்கியவர் யார்? நீர் கல்லைப்போல் இறுகிவிட்டது. கடலின் மேற்பரப்பு உறைந்துவிட்டது.

யோபுவே! விண்மீன்களின் இனிமையான தொடர்பை உன்னால் உண்டாக்க முடியுமா? துருவச்சக்கர விண்மீனை இணைத்திருக்கும் கட்டுகளை உன்னால் அவிழ்க்கமுடியுமா? விண்மீன்கள் யாவற்றையும் அந்தந்தப் பருவங்களில் உன்னால் தோன்றவைக்க முடியுமா? துருவ நட்சத்திரத்தையும் அதனைச் சேர்ந்த மற்ற நட்சத்திரங்களையும் உன்னால் வழி நடத்த முடியுமா? வானத்தை ஆளுகின்ற விதிகளை நீ அறிவாயா? பூமியை நான் ஆள்வதுபோல் உன்னால் ஆள முடியுமா? மேகங்களுக்குக் கட்டளையிட்டு மழை பெய்விக்க உன்னால் முடியுமா? மின்னல்களை நீ அழைத்து அவை உன் முன்னால் வந்து இதோ இருக்கிறோம் என்று சொல்ல வைக்க உன்னால் முடியுமா? அவை நீ விரும்பும் இடத்திலெல்லாம் மின்னுமா?

யோபுவே! மக்களுக்கு ஞானத்தைப் புகட்டுபவர் யார்? அவர்களிடம் அறிவை விதைத்தவர் யார்? மேகங்களைக் கணக்கிடும் வல்லமை யாருக்கு உண்டு? ஜாடியிலிருந்து ஒருவர் நீரை ஊற்றுவதுபோல் வானத்திலிருந்து நீரைக் கொட்ட உன்னால் இயலுமா? பூமி வறண்டு கெட்டியாயிருக்கையில் நான் மழையை வருவிக்கிறேன். குகைகளிலும் புதர்களிலும் காத்துக் கிடக்கின்ற சிங்கங்களுக்காக நீ இரை தேட முடியுமா? அவற்றின் பசித்த குட்டிகளுக்கு இரை தர உன்னால் இயலுமா? காக்கைக் குஞ்சுகள் மாமிசத்துண்டுகளுக்காக பறந்தலைந்து என்னை அழைக்கையிலே அவைகளுக்கு இரையைக் கொடுப்பது யார்?

தொடரும்……

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s