யோபுவின் கதை – அதிகாரம் 36

எலிஹூ தொடர்கிறார்…….

இன்னும் சற்று நேரம் பொறுமையாக இருக்கவும். நான் தேவனின் பக்கம் இருந்து அவரது நியாயங்களை உங்களுக்கு விளக்குகிறேன். அறிவார்த்தமான எனது புரிதல்களை நான் மிகவும் முயற்சி செய்துதான் பெற்றுள்ளேன். என்னைப் படைத்த தேவன் நியாயத்தின் மொத்த வடிவம். எனது வார்த்தைகள் உண்மையானவை. இதில் உமக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். உம்முடன் பேசிக்கொண்டிருக்கும் நான் ஞானத்தில் முதிர்ந்தவன்.

தேவன் சர்வ வல்லமை கொண்டவர். அவர் யாரையும் வெறுப்பதில்லை. கருணையே உருவானவர். தீயவர்களை அவர் வாழ வைப்பதில்லை. ஆனால் அவர் துயரமுற்றோருக்கு அவர்களது உரிமைகளை நிலைநாட்டுகிறார். அவர் தமது பார்வையை நீதிமான்களை விட்டு விலக்குவதில்லை. அரசர்களைப் போல் அவர்களை சிம்மாசனத்தில் அமரச்செய்து என்றென்றும் அவர்களைப் பெருமைப்படுத்துகிறார்.

ஆனால் சிலரோ விலங்குகள் போடப்பட்டு, துன்பத்தின் கயிறுகளால் கட்டுண்டு கிடக்கிறார்கள். தேவன் அவர்களிடம் அவர்களது செயல்களை விளக்கி அகந்தையினால் தனக்கெதிராக அவர்கள் செய்த பாவங்களையும் கூறுகிறார். அவர்களுக்கு ஒழுக்கத்தைப் போதித்து, தவறுகளிலிருந்தும் தீச்செயல்களிலிருந்தும் விலகியிருக்கச் செய்கிறார். அவர்கள் அவரை வணங்கிப் பணிசெய்து கிடப்பாரேல் நீண்ட மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அனுபவிக்கலாம். எல்லாமே நல்லபடியாய் நடக்கும். இல்லையேல் அவர்கள் வாளுக்கு இரையாவார்கள். ஞானம் பெறாமலே மடிந்து போவார்கள்.

எவருடைய இதயங்கள் இறை நம்பிக்கை இல்லாதிருக்கிறதோ அவர்கள் எப்போதும் கோபமுற்றிருப்பார்கள். தேவன் அவர்களை விலங்குகளால் பிணைத்தாலும் உதவி கேட்டுக் கதறமாட்டார்கள். தீயொழுக்கம் நிரம்பியவரைப்போல இளவயதிலேயே இறந்துபோவார்கள். ஆனாலும் துயரப்படுபவர்களை தேவன் காப்பாற்றி அவர்களது துயரங்களைப் போக்குகிறார்.

யோபுவே! தேவன் துன்பத்தின் கோரப் பிடியிலிருந்து உம்மை விடுவிக்க விரும்புகிறார். உம்மை விசாலமான, பாதுகாப்பு நிறைந்த இடத்துக்குக் கொண்டுசெல்ல விரும்புகிறார். சத்தான உணவுகள் நிரம்பிய மேசைக்கு முன்னாள் உம்மை உட்காரவைக்க ஆசைப்படுகிறார். ஆனால் இப்பொழுது நீர் பாவிகள் பெறும் தண்டனைகளால் நிரம்பியுள்ளீர்.. உம்மை தேவன் சரியாகவே எடை போட்டுள்ளார். செல்வத்தைக்காட்டி யாரும் உம்மை மயங்கவைக்காமல் எச்சரிக்கையாய் இரும். நன்மைகளை எதிர்பார்த்து யார் எவ்வளவு செல்வம் கொடுத்தாலும் நீர் பெற வேண்டாம். நீர் படும் துன்பத்திலிருந்து செல்வம் உம்மைக் காப்பாற்றுமா? உம்முடைய ஒட்டுமொத்த முயற்சிகளும் உம்மை வாழவைக்குமா? மக்கள் மறைந்து போகும் இரவு வர வேண்டுமென விரும்பாதீர்.

யோபுவே! நீர் மிகவும் துன்பமுற்றிருக்கிறீர். எனவே தீச்செயல்களில் ஈடுபடாமல் எச்சரிக்கையாயிரும். தேவனின் வல்லமைதான் அவருக்குப் பெருமை சேர்க்கிறது. ஒரு ஆசானாக அவருக்கு இணை யாரிருக்கிறார்? அவரது பாதையின் நியாயத்தைக் கேள்விகேட்கத் துணிந்தவன் யார்? அவர் நீதிக்குப் புறம்பானதைச் செய்தார் என சொல்வதற்குத் தகுதியானவன் யார்? அவரது செயல்களுக்காக அவருக்கு நன்றி கூற மறக்காதீர். மக்கள் அவரைத் தம் பாடல்களால் புகழ்கிறார்கள்.ஒவ்வொரு மனிதனும் அவரது செய்கைகளை அறிவான். அவர்கள் அவற்றை வெகு தூரத்திலிருந்துகூட உணரமுடியும்.

இதோ! தேவன் மகத்துவம் மிக்கவர். நம்மால் அவரை ஒருபோதும் முழுதும் புரிந்து கொள்ளமுடியாது. எத்தனை காலம் அவர் வாழ்ந்திருக்கிறார் என்பதை நம்மால் கணக்கிட முடியுமா? அவர் நீரை ஆவியாக்கி மீண்டும் அதை மழையாய்ப் பெய்விக்கிறார். மேகங்கள் திரண்டு மக்கள் மேல் மழையாய்க் கொட்டித்தீர்க்கிறது. தேவன் எவ்வாறு மேகங்களைப் பரவச்செய்கிறார் என்பதை யாரறிவார்? வானத்திலிருந்து கேட்கும் இடியின் முழக்கங்களை யாரால் விளக்க முடியும்?

இதோ! தன்னைச் சுற்றிலும் எப்படி மின்னலின் ஒளியைப்பாய்ச்சுகிறார் என்று பாருங்கள். கடலின் ஆழங்களிலெல்லாம் அந்த ஒளி ஊடுருவுகிறது. மழையால் பசுமை பெருகி மக்களுக்கு வேண்டிய அளவு அவர் உணவு கிடைக்கும்படி செய்கிறார். அவர் மின்னலைத் தன் கைக்குள் ஒளித்து அது ஒளி வீச வேண்டிய இடங்களைத் தீர்மானிக்கிறார். புயல் வரப்போவதை இடி முழங்கி எச்சரிக்கிறது. புயலின் வரவை கால்நடைகளும்கூட அறிகின்றன.

தொடரும்…………..

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s