யோபு! நான் எனது வாதங்களைக் கூறுகிறேன். கவனமாகக் கேட்கவும். இதோ! என் வாயைத்திறந்து நாவினால் கூறப்போகும் வார்த்தைகள் என் இதயத்திற்கு நேர்மை உள்ளதாக இருக்கும். என் உதடுகளிலிருந்து உண்மை வெளிப்படும். தேவனின் ஆவி என்னைப் படைத்தது. அவரது மூச்சு எனக்கு உயிர் கொடுத்தது. எனது வாதங்களுக்கு நீங்கள் பதில் கொடுக்க முடிந்தால் என் முன்னால் அதை சொல்லவும். இதோ! உம்மைப்போலவே நானும் தேவனால் படைக்கப்பட்டவன். மண்ணினால்தான் நானும் உருவாக்கப்பட்டேன். நீங்கள் என்னைக் கண்டு அஞ்சி கவலை கொள்ள வேண்டாம் எனது கைகள் உங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காது. “நான் மிகுந்த நேர்மையானவன். குற்றமற்றவன். நான் தவறுகள் எதுவும் செய்தவனில்லை. இதோ! என்மீது தேவன் குற்றம் சுமத்தப் பார்க்கிறார். அவர் என்னைத் தன் எதிரியாக எண்ணிக்கொள்கிறார். அவர் என் கால்களில் விலங்கு மாட்டி என் பாதையைக் கண்காணிக்கிறார்” என்றெல்லாம் உங்கள் பக்கத்து நியாயங்களைக் கூற நான் காதாரக் கேட்டேன்.
ஆனால் நான் உமக்குச் சொல்லுகிறேன். தேவன் மனிதனைக் காட்டிலும் உயர்ந்தவனானதால் உமது வாதம் முற்றிலும் தவறு. அவரது செயல்களுக்கெல்லாம் அவர் காரணம் கூறவில்லை என்று ஏன் அங்கலாய்க்கிறீர்? தேவன் ஒருமுறைக்கு இருமுறை எச்சரிக்கிறார். ஆனாலும் மனிதன் கேட்பதில்லை . படுக்கையில் படுத்திருக்கும் மனிதனின் ஆழ்ந்த தூக்கத்தில் அவனது கனவில் அவர் தோன்றி அவன் காதுகளில் அவனது செயல்களை விளக்கி அதனால் அவன் பெறப்போகும் தண்டனை குறித்து எச்சரிக்கை செய்து,அவன் தவறிழைக்கா வண்ணம் தடுக்கிறார். அவனது கர்வத்தையும் அடக்குகிறார். அவனது ஆன்மா படுகுழியில் விழாமலும் வாளால் அவன் உயிர் பிரியாமலும் தடுக்கிறார். படுக்கையில் விழுந்து துயரப்படும்படி ஒருவன் தண்டிக்கப்படலாம். அவனது எலும்புகளில் ஏற்பட்ட வலி ஒருபோதும் தீராது. அவனுக்கு எதையுமே உண்ணமுடியாத மன நிலை ஏற்படும். சுவையான உணவை உண்பதற்குக்கூட வெறுப்பு மேலிடும். அவனது உடலில் தசைகள் வற்றிப்போய் எலும்புகள் துருத்தி நிற்கும். அவன் கல்லறையின் விளிம்புக்கு தள்ளப்பட்டு மரணத்தின் தூதுவர்கள் அவனை நெருக்குவார்கள். ஒரு வேளை அங்கே அவனுக்காகப் பரிந்து பேசுகிற தேவதை ஒன்று இருக்குமாயின் அது ஆயிரத்தில் ஒரு தேவதை ஆகும். அது அவனுக்கு எது சரியான செயல் என்பதை விளக்கும். அவனிடம் அது இரக்கம் மிகக் கொண்டு அவன் கல்லறை என்னும் படுகுழியில் விழாவண்ணம் காக்கும்படி தேவனிடம் இறைஞ்சும். அவன் விடுதலை பெறுவதற்கான வழியையும் அது அறியும். அப்பொழுது அவன் உடல் புத்தம் புதிதாகி அவன் வாலிபத்தில் இருந்ததைக்காட்டிலும் வலிமையோடு மிளிரும். அவன் தேவனை வணங்கி அவரது அருளைப்பெறுவான். தேவனின் முகத்தைப் பார்த்து மகிழ்ச்சியில் திளைப்பான். தேவன் அவன் மேல் பிரியம் காட்டி அவனுடைய நல்லொழுக்கத்துக்கான பலனைக்கொடுப்பார். அவன் மற்ற மனிதரை நோக்கி ‘ நான் பாவங்கள் புரிந்து நன்னெறியிலிருந்து விலகினேன். அது எனக்கு எவ்வித நன்மையையும் செய்யவில்லை. நான் படுகுழியில் விழாதபடி தேவன் என்னைக் காத்தருளினார். அதனால் என் வாழ்க்கை பிரகாசமானது.’ என்று கூறுவான். இதோ! தேவன் இதுபோல் மீண்டும் மீண்டும் மனிதருக்குத் தன் அருளை வழங்குகிறார்.
யோபுவே! அமைதியாக இருந்து கவனமாக நான் சொல்லப்போவதை நீங்கள் கேட்கவும். நீங்கள் என்னிடம் ஏதாவது சொல்லவேண்டுமானால் சொல்லுங்கள். உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அறவே போக்க நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன். ஒருவேளை உங்களுக்குச்சொல்ல வேண்டியது எதுவும் இல்லையென்றாலும் நான் கூறப்போவதை அமைதியாகக் கேளுங்கள். நான் உங்களுக்கு ஞானத்திற்கான வழியைக் காட்டுகிறேன்.
தொடரும்…….