யோபுவின் கதை – அதிகாரம் 31

யோபுவின் நீதி உரை தொடர்கிறது…….

தவறான எண்ணத்துடன் மற்றப் பெண்களைப் பார்ப்பதில்லை என என் கண்களுடன் நான் ஒப்பந்தம் செய்து கொண்டேன். தேவனிடமிருந்து மனிதர்கள் பெறுவது என்ன? சர்வ வல்லவரிடமிருந்து அவர்களுக்கு வழிவழியாய்க் கிடைப்பதுதான் என்ன? பாவம் செய்தவர்கள் அழிந்துபோகிறார்கள். கெடுதல் செய்வோரைத் துன்பம் வந்து சூழ்கிறது. நான் வாழ்ந்த முறையை அவர் அறியவில்லையா என்ன? நான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அவருக்குத் தெரியாதா என்ன? நான் எந்தப் பொய்யையும் கூறியதில்லை. நான் எவரையும் ஏமாற்ற முனைந்ததில்லை. ஆதலால் தேவன் என்னை நேர்மையாகச் சீர்தூக்கிப் பார்க்கட்டும். அப்பொழுது அவர் தெரிந்து கொள்வார் நான் தவறேதும் செய்யவில்லை என்று. நான் சரியான பாதையிலிருந்து விலகிச் சென்றிருந்தாலோ, எனது கண்கள் பார்த்தவற்றுக்கெல்லாம் நான் ஆசைப்பட்டிருந்தாலோ அல்லது என் கரங்கள் கறை பட்டிருந்தாலோ எனது விளைச்சலை மற்றவர் அனுபவிக்கட்டும். என் பயிர்கள் வேரற்றுப்போகட்டும். என் மனம் எந்தப் பெண்ணின் மீதாவது மயக்கம் கொண்டிருந்தாலோ அல்லது அயலான் ஒருவனின் வீட்டை நான் எட்டிப்பார்த்தேன் என்று சொன்னாலோ அப்பொழுது மாற்றான் ஒருவன் வீட்டில் என் மனைவி பணிபுரியட்டும்.மற்றவர்கள் அவளோடு மகிழ்ந்திருக்கட்டும். நான் மாற்றான் ஒருவனது மனைவியை விரும்பியிருந்தால் அது மிகப் பெரிய குற்றம். அப்படியிருந்தால் கடவுள் என்னைத் தண்டிக்கட்டும். அக்குற்றம் தீயாய் மாறி என்னை அழித்தொழிக்கட்டும்.

எனது வேலைக்காரர் மற்றும் வேலைக்காரிகளின் பிரச்சனைகளை நான் காது கொடுத்துக் கேளாமல் அலட்சியப்படுத்தியிருந்தால் தேவன் என்னை அதுபற்றிக் கேள்வி கேட்கும்போது என்னால் பதில் சொல்ல முடியுமா? தாயின் கர்ப்பத்தில் என்னைப் படைத்த தேவன் அவர்களையும் அதே விதமாகத்தானே படைத்தார். வறியவர் விருப்பப்பட்டதை நான் நிறைவேற்றினேன். விதவைகளின் வாழ்க்கையில் விளக்கேற்றினேன். எனக்கென்று உணவை நானே வைத்துக்கொள்ளாமல் அனாதைகளுக்கு அளித்தேன். எனது இளைய பருவத்திலேயே அவர்களை அவர்களது தந்தையரைப்போலவே அரவணைத்திருந்தேன். நான் பிறந்தது முதலே அவர்களை ஆதரித்தேன். ஆடையின்றி வாடையினால் நலிந்தோரைக்கண்டபோது எனது ஆட்டு மயிர்க் கம்பளியைக் கொடுத்து கதகதப்பூட்டினேன். அதற்காக அவர்கள் எனக்கு நன்றி கூறினார்கள். எனக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதனால் தகப்பனில்லாப் பிள்ளைகளுக்கெதிராக என் கைகள் நீண்டிருக்குமானால் அக்கைகள் என் தோள்களிலிருந்து கழன்று எலும்புகள் முறிந்து போகட்டும். தேவன் என்னை அழித்துவிடுவார் என்று அஞ்சினேன். அவரது வல்லமை என்னை அச்சுறுத்தியது. அதனால் நான் ஒருபோதும் அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை.

ஒருவேளை என்னிடமுள்ள தங்கத்தின் மேல் நம்பிக்கை வைத்து “நான் பாதுகாப்பாய் இருப்பதாக எண்ணியிருந்தாலோ, நான் செல்வந்தனாய் இருப்பதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருந்தாலோ, சூரியன் ஒளிரும்போதும், சந்திரனின் வெளிச்சம் மென்மையாகப் பரவும்போதும் என் மனம் மயங்கி என் கைகளை நானே முத்தமிட்டுக்கொண்டேன் என்றாலோ அவையெல்லாம் தண்டிக்க வேண்டிய பாவங்களாகும். அப்படியெல்லாம் நான் நடந்திருந்தால் தேவனுக்கு நான் விசுவாசமானவ்னாக இல்லை என்றுதான் பொருள். என் எதிரிகளுக்குக் கெட்டகாலம் வந்து அவர்கள் துன்பம் அடைந்தபோது நான் மகிழ்ந்தவனில்லை. அவர்கள் மீது வசைமாரி பொழிந்து எனது வாயால் நான் பாவம் புரிந்ததில்லை. என்னிடம் பணி புரிந்தோர் அனைவருக்குமே தெரியும் ‘நான் முன்பின் பழக்கமில்லாதவர்க்கெல்லாம் கூட உதவுவேன் என்று’. எனது வீட்டின் கதவுகள் எப்பொழுதும் திறந்திருந்ததால் வறியவரும் வழிப்போக்கரும் தெருவில் இரவைக் கழிக்கவேண்டியிருந்ததில்லை. நான் ஆதாமைப்போல் என் பாவங்களை என் மனதில் மூடி மறைத்தேனா? நான் என்றுமே கூட்டத்தைக்கண்டு அஞ்சியதில்லை. எனது சுற்றத்தார் என்னை இகழ்வார்கள் என கவலைப்பட்டதில்லை. நான் அமைதி காத்து வீட்டுக்குள் முடங்கவேண்டிய அவசியமுமில்லை.

‘ஆ’ நான் சொல்வதை யாராவது கவனித்துக்கேட்டால் நலமாயிருக்கும். இதோ! நான் சொல்வதையெல்லாம் எழுதிக் கையொப்பமிடத் தயாராயிருக்கிறேன். சர்வ வல்லமை பொருந்திய தேவன் அவரது முடிவைக்கூறுவார் என நம்புகிறேன். என் மேல் குற்றம் சுமத்துபவர் அவற்றைப் பட்டியலிடலாம். அந்தப் பட்டியலை நான் என் தோள்களில் சுமப்பேன். என் தலையில் அதைக் கிரீடமாக வைத்துக்கொள்வேன். எனது நடவடிக்கைகள் எல்லாவற்றைப்பற்றிய விவரங்களையும் அவனிடம் கொடுத்து ஒரு இளவரசனைப்போல் அவனை எதிர்கொள்வேன். எனது பூமி எனக்கெதிராகக் கத்தினாலோ, அதிலுள்ள மண்ணெல்லாம் அதன் கண்ணீரால் நனைந்தாலோ அல்லது கூலி கொடாமல் அதில் விளைந்த தானியங்களை நான் அனுபவித்திருந்தாலோ அல்லது பயிர் விளைத்தவர்களின் வயிற்றில் அடித்திருந்தாலோ அந்த நிலத்தில் கோதுமைக்குப் பதில் முட்களும் பார்லிக்குப் பதில் களைகளும் முளைக்கக் கடவது.,

யோபுவின் உரை முடிகிறது.

தொடரும்………….

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s