யோபுவின் கதை – அதிகாரம் 30

யோபுவின் உரை தொடர்கிறது………

ஆனால் இப்போதோ என்னிலும் இளையவர்கள் என்னைப்பார்த்து எள்ளி நகையாடுகிறார்கள். இவர்களது தந்தையருக்கு நான் என் மந்தைகளைக் காக்கும் நாய்களின் மதிப்பைத் தரக்கூட தயங்கியிருப்பேன். முதுமையால் வலுவிழந்த அவர்களால் எனக்கு என்ன உதவி இருந்தது. பஞ்சத்தாலும் பசியாலும் வாடிய அவர்களுக்கு வெகுநாளாய் வெறுமையாய்க்கிடக்கும் பாழ்வெளியில் உள்ள புதர்களிலும், பூமிக்கடியிலும் கிடைக்கும் கிழங்குகள்தான் உணவு. அவர்கள் மக்கள் நடுவேயிருந்து திருடர்கள் துரத்தப்படுவதுபோல் துரத்தப்பட்டார்கள்.பள்ளத்தாக்குகளின் அபாயமான சரிவுகளிலும் மலைகளிலுள்ள குகைகளிலும் அவர்கள் புகலிடம் தேடிக்கொண்டார்கள். புதர்களிலிருந்து கதறினார்கள். அரிப்பையும் வலியையும் கொடுக்கும் காட்டுச்செடிகளிடையே ஒதுங்கினார்கள். அவர்கள் மூடர்களின் புதல்வர். நீசர்களின் பிள்ளைகள். அவர்களின் நிலைமை இவ்வாறெல்லாம் இருந்தும்கூட இப்பொழுது நான் அவர்களுக்கு கேலிக்குரியவனானேன். என்னைப் பார்த்து அருவருப்படைந்து என்னை விட்டுத்தூர விலகி ,என் முகத்தில் காறி உமிழ அவர்கள் கூச்சப்படவில்லை.

தேவன் என்னைப் பலவீனமாக்கிவிட்டார். சரிந்து விழுந்த கூடாரமாய்விட்டது என் உடம்பு. ஆதலால் என் முன்னால் அவர்கள் தாங்கள் விரும்பியதைச் செய்கிறார்கள். என் வலப்புறத்தில் என்னைத்தாக்கி இடறி விழச்செய்கிறார்கள். நாலா பக்கங்களிலிருந்தும் என்னை நோக்கி வருகிறார்கள். நான் போகும் பாதையைச் சேதப்படுத்தி என்னை அழிப்பதில் வெற்றி காண்கிறார்கள். எந்த உதவியுமின்றி அவர்கள் இதைச் செய்கிறார்கள். சுவற்றைப் பிளந்து தாக்கும் படையினரைப்போல் அவர்கள் என்னைத் தாக்குகிறார்கள். அழிக்கப்பட்ட கட்டிடங்களுக்கிடையே அவர்கள் என்னை நோக்கி வந்த வண்ணம் உள்ளார்கள்.

பயங்கரம் என்னைச் சூழ்கிறது. எனது மரியாதை காற்றில் போகிறது. எனது பாதுகாப்போ மேகம் போல் மறைந்து போயிற்று. என் வாழ்வு நசித்துப்போகிறது. துயர நாட்களின் பிடிக்குள் இருக்கிறேன் நான். இரவு நேரங்களில் என் எலும்புகள் கடுமையாக வலிக்கின்றன. துளைக்கும் வலி நிற்கவேயில்லை. தேவன் கொடுத்த நோயின் கடுமை என் அங்கியின் கழுத்துப்பட்டியைப் போல் நெரிக்கிறது. அவர் புழுதியில் என்னைத் தள்ளிவிட்டார். நான் வெறும் தூசியும் சாம்பலுமானேன். தேவனே! உம்மை நோக்கிக் கதறுகிறேன். உமக்கு முன்னால் இறைஞ்சி நிற்கிறேன். என்னிடம் குரூரமாய் நடந்து கொள்கிறீர். உமது உறுதியான கைகள் என்னைத் தாக்குகின்றன. என்னைத் தூக்கிக் காற்றிலே வீசுகின்றீர். புயலிலே புரட்டி எடுக்கின்றீர். நீங்கள் எனக்குக் கொடுக்கப்போவது வாழும் அனைவருக்கும் இறுதியில் குறிக்கப்பட்ட பொது இடமான மரணம் என்பதை நான் அறிவேன். வேதனையில் உதவிக்குக் கதறும்போது யாருமே ஒருவனை நசுக்க முற்படமாட்டார்கள். துன்பத்தில் உழன்றவரை எண்ணி நான் அழவில்லையா? ஏழைகளுக்காக நான் இரங்க வில்லையா? நல்லவற்றுக்காக நான் நம்பிக்கையோடிருந்தபோது தீயவை நிகழ்ந்தன. நான் வெளிச்சத்துக்காக ஏங்கியபோது என்னை இருள் கவ்வியது. என் வயிறு கொதிக்கிறது. என் முன்னால் துயர நாட்கள் நிரம்பிக்கிடக்கின்றன. எனது தோல் கறுத்து விட்டது. ஆனால் அது வெயிலின் வெப்பத்தால் ஏற்ப்பட்டதல்ல. நான் சபை முன் நின்று உதவி வேண்டிக் குரல் கொடுக்கப்போகிறேன். நான் கொடிய விலங்கின் உடன்பிறப்பு. கோட்டானின் கூட்டாளி. என் தோல் கறுத்து உதிர்கிறது. என் உடம்பு கொதிக்கிறது. எனது யாழ் சோக கீதம் இசைக்கிறது. எனது புல்லாங்குழல் அழுகிறது.

தொடரும்……………

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s