யோபுவின் கதை – அதிகாரம் 28

யோபுவின் பதில் தொடர்கிறது………….

வெள்ளியை வெட்டி எடுப்பதற்குச் சுரங்கங்கள் உண்டு.   பொன்னை உருக்கி அதிலிருக்கும் தூசுகளை அகற்றிப் புடம் போடும் இடங்கள் உண்டு. இரும்பைப் பூமியிலிருந்து எடுக்கவும் எந்தக் கற்களிலிருந்து  செம்பைப் பிரித்தெடுக்க  வேண்டுமெனவும் மனிதன் அறிவான்.   இந்த உலோகங்கள் கிடைக்கும் சுரங்கங்களில்  அவர்கள் விளக்குகளின் துணை கொண்டு தேடுவார்கள்.  நகரத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கும் சுரங்கங்களில் தனியாகத்தோண்டுவார்கள்.  சுரங்கங்களின் ஆழத்திற்குச் செல்ல உறுதியான கயிறுகளைப்  பயன்படுத்துவார்கள்.  வயல்களில் உணவுக்காகத் தானியங்களைப் பயிரிட அவன் அறிவான். நெருப்பால் மாற்றப்பட்டதுபோல் தோன்றும் பூமியின் ஆழத்திலுள்ள பாறைகளில் நீலமணிக்கற்கள் கிடைக்கும்.  அக்கற்களின்  மேல் பொன் துகளும் படிந்திருக்கும்.

எந்தப் பறவையும் மறைந்து கிடக்கும் சுரங்கப் பாதையை அறியாது. வல்லூறுகளின் பார்வையும் அங்கு பட்டதில்லை. காட்டு விலங்குகளின் கால்கள் அங்கு பதியவில்லை. மூர்க்கமான சிங்கத்தின் காலடிகளும் அங்கு பதிந்ததில்லை. அவன் பாறைகளைப் பிளக்கிறான். மலைகளை வேரோடுப் புரட்டுகிறான். பாறைகளைக் குடைந்து  விலை மதிப்பில்லாக் கற்களைக் காண்கிறான். ஆறுகளின் ஊற்றுக்கண்களைத்   தோண்டி  அங்கு மறைந்திருப்பதை வெளியில் கொண்டுவருவான். ஆனால் அவனுக்கு ஞானத்தைப் பெறுவது எங்கே என்றும்   ஞானம் பெறும் வழிகள் எவை என்றும் தெரியாது. அதன் மதிப்பை மனிதர் அறியமாட்டார். வாழும் மனிதரிடையே அது காணப்படுவதில்லை. அது பூமிக்கடியிலும் இல்லை, கடலின் ஆழத்துக்கடியிலும் இல்லை. அதைப் பொன்னாலும் வெள்ளியாலும் விலைக்கு வாங்க முடியாது. பொன்னும், கோமேதகக் கற்களும்,நீலமணிக் கற்களும், ஸ்படிகங்களும் அதற்கு ஈடில்லை. பொன்னாலான ஆபரணங்களுக்கு மாற்றாக அதனைப் பெற முடியாது. பவளத்தையும்,முத்துக்களையும் அதனுடன் ஒப்பிடமுடியாது. அதன் மதிப்போ மாணிக்கக் கற்களைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம். எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல. பத்தரைமாற்றுத் தங்கம் கூட அதன் முன்னே மதிப்பிழக்கும்.

பின் எங்கிருந்து பெறுவது ஞானத்தை? அதை அடையும் வழிகள்தான் எவை? ஞானம் மனிதரின் கண்களிலிருந்து ஒளிக்கப்பட்டுள்ளது.  உயரப் பறக்கும் பறவைகளுக்கும் அது தெரிவதில்லை. இறந்தவர்கள் ஒருவேளை அதை உணர்ந்திருக்கலாம். ஆனால் அவர்கள் நமக்கு எப்படி அதைக் கூறமுடியும். ஞானத்தைக் கண்டறியும் பாதை தேவன் ஒருவருக்குத்தான் தெரியும். பூமியின் ஆழத்தில் புதைந்து கிடப்பவைகளையும் வானத்திற்கு மேலே உள்ளவற்றையும் அவர் ஒருவரே அறிவார். காற்றின் வேகம், நீரின் பரப்பு இவற்றையெல்லாம் அவர்தான் தீர்மானிக்கிறார். மழையின் அளவும், இடி மற்றும்  மின்னல்களின் போக்கும் அவர் கட்டுப்பாட்டில்.

இறுதியாக அவர் மனிதனை நோக்கி, இதோ பார்! தேவனுக்கு அஞ்சுவதே மிக உயர்ந்த ஞானம் என்றும், தீயவை அனைத்திலிருந்தும் விலகியிருப்பதே மகத்தான புரிதல் அல்லது பேரறிவு என்றும் சொன்னார்  என யோபு கூறினான்.

தொடரும்………………

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s