யோபுவின் கதை – அதிகாரம் 19

யோபுவின் பதில்:

நீங்கள் எதுவரையில் என் ஆன்மாவை நோகச்செய்து வார்த்தைகளால் என்னைக் கிழித்துப்போடுவீர்? பலமுறை என்மீது பழி சுமத்தி என்னை வேற்றாளாக்கிப் பார்க்க உங்களுக்கு வெட்கமாகயில்லையா? நான் தவறு செய்தேன் என்றால் அத்தவறு என்னுடையதாகவே இருந்துவிட்டுப்போகட்டும். நீங்கள் என்னை விரோதியாகப் பாவித்து என்னைக் கடிந்துகொள்ள வேண்டுமென நினைத்தால் தேவன்தான் என் நிலையிலிருந்து என்னைத் தூக்கியெறிந்து தன வலைக்குள் சிக்கவைத்தார் என்று தெரிந்துகொள்ளுங்கள் .

இதோ! எனக்கு நேர்ந்த கொடுமையைப் பாருங்கள் என்று கதறுகிறேன். கேட்பார் யாருமில்லை. நியாயம் கேட்டுக் கூக்குரலிடுகிறேன். நியாயம் கிடைக்கவில்லை. எனது பாதையை வேலியிட்டு அடைத்ததுமன்றி வழிகளை இருளில் மூழ்கடித்துவிட்டார். எனது நற்பெயரை மங்கச்செய்து என்னிடமிருந்த அனைத்தையும் பறித்துவிட்டார். என் வாழ்வின் அனைத்துத் திசைகளையும் அழித்துவிட்டார். நான் ஒழிந்து போனேன். என் நம்பிக்கைச்செடியை வேரோடு பிடுங்கிவிட்டார். என்னை அவரது எதிரிகளில் ஒருவனாகக் கருதி என்மேல் கடும் சினம் கொண்டுள்ளார். அவரது படைகள் எனக்கெதிராக ஒன்றாகத்திரண்டு என் கூடாரத்தைச் சுற்றி வளைக்கின்றன. எனது சகோதரர்களை என்னை விட்டு தூர விலக்கி எனக்கு அறிமுகமானவர்களையெல்லாம் அன்னியப்படுத்திவிட்டார், எனது சுற்றத்தாரும், நன்கறிந்த நண்பர்களும் என்னை மறந்தனர். என் வீட்டிலுள்ள நபர்களும்,எனது வேலைக்காரிகளும் என்னை அன்னியனாகப் பார்க்கின்றனர். நான் எனது வேலையாளைக் கூப்பிட்டேன். அவன் பதிலே பேசவில்லை. எனவே நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று.

என் மனைவிக்கு எனது மூச்சு விநோதமாயிருக்கிறது. என் குழந்தைகளுக்காக நான் பரிதவிக்கிறேன். சிறு குழந்தைகள் என்னை அலட்சியம் செய்கின்றன. அவர்கள் எனக்கு எதிராகப் பேசுகின்றனர். எனது நெருங்கிய நண்பர்கள் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். நான் நேசித்தவர்களெல்லாம் எனக்கு விரோதிகளாகிவிட்டார்கள். எனது எலும்புகள் தோலோடும் சதையோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. பற்களை மூடக் கொஞ்சம் தோல் மட்டும் மிஞ்சியது.

தேவன் தன் திருக்கரங்களால் என்னைத் தீண்டிவிட்டார். எனவே நண்பர்களே! என்னிடம் இரக்கம் காட்டுங்கள். அவரைப்போலவே நீங்களும் என்னைத் துன்பத்துக்குள்ளாக்குகிறீர். எனது உடல் உருக்குலைந்துபோனபின்பு கூட உங்களுக்குத் திருப்தி ஏற்படவில்லையா? ஓ! நான் இப்போது பேசும் வார்த்தைகள் ஒரு நூலாக எழுதப்பட்டால் நலமாயிருக்கும். அவை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்படி ஒரு கல்வெட்டாக இருந்தால் மேலும் நல்லது.

எனக்குத்தெரியும். எனது மீட்பர் இருக்கிறார் என்று. அவர் இறுதிநாளிலே இப்பூமியின் மேல் தோன்றுவார் என்பதையும் நான் அறிவேன். என் தோலெல்லாம் அழுகிப் போனபின்னாலும் கூட என் சதையினிலே நான் தேவனைக் காண்பேன். வேறொருவர் கண்களால் அல்ல. என் கண்களாலேயே அவரைக் காண்பேன். அவரைத் தரிசிக்கும் ஆவல் மேலீட்டினால் என் உடலெல்லாம் சோர்ந்து போகிறது.

இத்துயரத்தின் மூல வேரை என்னிடம் நீங்கள் கண்டுபிடித்தபின்னால் நாம் ஏன் இவனைத் துன்பப்படுத்தவேண்டும் என்பதை உணர்வீர்கள். உங்களுக்கு என்ன நேரும் என்பதை எண்ணி நீங்கள் அஞ்சவேண்டும். நீங்கள் நல்லவரா கெட்டவரா என்று தேவன் முடிவு செய்வார். நீங்கள் கெட்டவர் என்கிற முடிவுக்குக்கூட தேவன் வரக்கூடும். அப்படியானால் அவர் உங்களை நிச்சயம் தண்டிப்பார்.

தொடரும் …………….

Advertisements
This entry was posted in The Book of Job and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s