யோபுவின் பதில்:
எனது துன்பங்களும் வலியும் அளவிடமுடியாதது. அவற்றை அளக்க முற்பட்டால் கடற்கரையின் மொத்த மணலின் அளவைக் காட்டிலும் அதிகமிருக்கும். இறைவன் என்மீது தன் அம்புகளை எய்திவிட்டான் அவற்றின் விஷம் என் உயிரைக்குடிக்கிறது. இறைவனால் உண்டாகப்போகும் பயங்கரங்கள் என்முன் அணிவகுத்து நிற்கின்றன ஒரு காட்டுக் கழுதை தனக்கு உண்ணப் புல் இருக்குமானால் அமைதியாய் இருக்கும். ஒரு எருது உண்ணத் தீனி இருந்தால் பெரிதாக சத்தமிடாது. உப்பில்லாத உணவை உன்னால் புசிக்க முடியாது. முட்டையின் வெண் பகுதியை மட்டும் உண்டால் அது அவ்வளவாக ருசிக்காது. உங்கள் வார்த்தைகள் என் ஆன்மாவைத்தொடவில்லை. அவை சுவையற்ற மாமிசமாய் இருக்கின்றன. இறைவன் நான் கேட்டதை கொடுக்கப்போவதில்லை. இது ஏன் என்று எனக்குத்தெரியவேண்டும்? எனது பிரார்த்தனைக்கு அவர் செவி சாய்க்கவில்லை. நான் இறக்க விரும்புகிறேன். இறைவன் என்னைக் கொன்று விட்டால் நலமாயிருக்கும். நான் மிகுந்த வலியை அனுபவித்துவிட்டேன்.
ஆனால் எனக்குத்தெரியும் இறைவன் பரிசுத்தமானவர் என்று. நான் எப்பொழுதுமே அவர் சொற்படி நடந்தேன். இதை நான் நன்கு உணர்ந்திருப்பதால் நான் சாகவும் தயார். ஒரு நல்ல வாழ்க்கையை வாழ விரும்புவதற்கு எனக்கு வலிமையில்லை. இந்த வாழ்க்கையை இப்படியே தொடர்ந்தால் என் முடிவுதான் என்ன? நான் எதற்காகப் பொறுமை காக்கவேண்டும்? காரணம் தெரியவில்லை. நான் கல்லைப்போல் உறுதிவாய்ந்தவனில்லை. இறைவன் என் உடம்பை உலோகத்தால் வார்க்கவில்லை. எனக்கு நானே உதவிக்கொள்ளவும் திராணியில்லை. உதவி தேடிப்போக இடமெதுவுமில்லை. .ஆனால் என்பால் அன்பு கொள்ள எனக்கு நண்பர்கள் வேண்டும். எனக்கு உதவக்கூடிய நண்பர்கள் வேண்டும். அப்படி உதவமுடியா நண்பர்கள் கடவுள் கோபமுறுவார் என்னும் பயமில்லாதவர். ஆனால் என் நண்பர்களே! எனக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் நீங்கள் இங்கு இல்லை. நீங்கள் நதிகளைப் போன்றவர்கள். நதிகளில் சில காலம் நீர் இருக்கும் சில காலம் இருக்காது. வசந்த காலத்தில் சூரியனின் வெம்மையால் பனிக்கட்டிகள் உருகி நீர் பெருகும். ஆனால் கோடையில் மழையின்றி சூரியனின் கடும் வெப்பத்தால் நீர் இருக்காது. நீர் தேடி அலையும்போது பயணிகள் தொலைந்து போவர். சரியான பாதையை விட்டு விலகி பாலைவனத்தில் அவர்கள் மரிப்பார்கள்.
தேமாவிலிருந்தும் ஷீபாவிலிருந்தும் வரும் பயணிகள் நீர் தேடி ஏமாற்றமடைந்து துயருற்றனர். இப்பொழுது நீங்களும்கூட எனக்கு உதவவில்லை. பாருங்கள் எனக்கு நேர்ந்த துன்பத்தை. நீங்கள் பயந்துவிட்டீர்கள். பரிசுப்பொருட்கள் வேண்டும் என உங்களை ஒருபோதும் நான் கேட்டதில்லை. அதேபோல் பொருள் கொடுத்து உதவுங்கள் நான் விடுதலை பெறுகிறேன் என்றும் கேட்கவில்லை. என் எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்றும் கேட்கவில்லை. கொடியவர்களிடமிருந்து என்னை விடுவியுங்கள் எனவும் நான் கேட்கவில்லை. சொல்லுங்கள் உண்மையை; பின்னர் நான் பேசவேமாட்டேன். சொல்லுங்கள் நான் தவறு செய்தேனா என்று?
துன்பத்தில் உழலும் நேர்மையான மனிதன் உண்மையைக் கூறும்போது கேட்டுக்கொண்டிருப்பவன் துயரமடைவான். நீங்கள் என்னோடு வாதாடலாம். ஆனால் நீங்கள் சொல்வதற்குப் பொருள் எதுவும் கிடையாது. நான் உங்களோடு பேசுகையில் என்னை நீங்கள் நமபமாட்டீர்கள். எனவே என்னோடு வாதாட முயலவேண்டாம். உங்களுக்குத்தெரியும் இந்த வாழ்க்கையில் இதற்குமேல் எனக்கு எதுவும் கிடைக்காதென்று. திக்கற்ற உங்கள் நண்பனுக்குக் குழி தோண்டுகிறீர்கள். தயவுசெய்து என்னைப் பாருங்கள். உங்களிடம் நான் உண்மைகளைத்தான் கூறுகிறேன். நீங்கள் சொல்வதை மீண்டும் சிந்தித்துப் பாருங்கள். நான் நேர்மை தவறாதவன் என்பதை மக்கள் உணர வேண்டும். நான் சொல்வதெல்லாம் உண்மை. நல்லவை எவை தீயவை எவை என்று நான் நன்கறிவேன்.
தொடரும்……….