எலிபாஸ் யோபுவிடம் சொல்கிறான்:-
பொறுமையாக இரு.நான் சொல்லப்போவதை நன்கு கேள். எண்ணிப்பார், மக்களுக்கு நீ எப்படி உதவி புரிந்தாய் என்று. அவர்கள் நல்ல வழியில் வாழ உதவினாய். எப்படி உறுதியாய் இருப்பதென்று அவர்களுக்குக் கூறினாய். ஆனால் நடந்தது என்ன? உன்னைத் துன்பங்கள் வாட்டுகின்றன. அதனால் நீ துயருற்று சோர்ந்துவிட்டாய். நீ இறைவனை நேசி. அவன் கட்டளைக்குக் கீழ்ப்படி. உனது துன்பங்கள் அதனால் மறையுமென்று நம்பலாம். பலரும் நல்ல வழியில் வாழ்கின்றனர். அவர்கள் யாரும் இளமையில் இறப்பதில்லை. நல்ல செயல்கள் செய்பவரை இறைவன் கொல்வதில்லை.நான் உணர்ந்ததைக் கூறுகிறேன். தீயசெயல்கள் புரிவதால்தான் மனிதர்கள் துயரடைகிறார்கள். இறைவன் அவர்களை கோபமுற்று அழிக்கிறான். இறைவனின் கோபம் கடும் காற்றைப்போன்றது. இறைவனின் கோபச்சூறாவளியில் தீயவர்கள் அழிகிறார்கள். சிங்கங்களைப்பற்றி எண்ணிப்பார். அவை வீரம் மிகுந்தவை. ஆனால் சிங்கத்தின் பல்லை இறைவன் பிடுங்கிவிட்டால் அதனால் உண்ணமுடியாது. கடைசியில் அது பட்டினியால் வாடி உயிர்துறக்கும். அதன் குட்டிகளோ சிதறுண்டு போகும்.
ஒருநாள் இரவு ஒரு இதமான குரலை நான் கேட்டேன். யாரோ ஒருவர் என்னிடம் ஒரு ரகசியம் சொன்னார். தூங்கிக்கொண்டிருந்த நான் கனவு கண்டு விழித்தேன். பயத்தில் எனக்கு மயிர்க்கூச்செறிந்தது. என்னால் பார்க்கமுடியாத ஏதோ ஒன்று என் முகத்தைத் தாண்டிச்சென்றது. பின் அது என் முன்னால் தோன்றியது. என்னால் அனுமானிக்க முடியாத உருவம் அது. எங்கும் அமைதி. அதன் குரலைக்கேட்டேன் அந்தக்குரல் கூறிய வசனம் இதுதான்: மனிதன் இறைவனைக்காட்டிலும் மேலானவனா? படைத்தவனை விட அவன் தூய்மையானவனா?
இறைவன் நம் எல்லோரையும் படைத்தான். நம் ஒவ்வொரு செயலையும் அவன் அறிவான். அவனுக்குத்தெரியும் யாருமே முழுமையான நல்லவர் இல்லை என்று. அவன் சொன்னான், எனது ஊழியர்களும் தேவதைகளும்கூட தவறு செய்கிறார்கள் என்று. நம் அனைவரையும் இறைவன் மண்ணிலிருந்து தோற்றுவித்தான். நாம் யாவருமே பறக்கும் பூச்சிகளைவிட நொய்மையானவர்கள். துன்பமின்றி வாழ நாம் எண்ணுவதில் அர்த்தமேயில்லை. நம் வாழ்நாள் மிகவும் குறுகியது. விடியலுக்குப் பின் பிறந்த பூச்சிகள் நாள் முடியுமுன்னே இறக்கின்றன. யாருமே மீண்டும் அவைகளைக் காணமுடியாது. இது நித்திய அழிவு. மனிதன் தன் மேன்மை இழந்து ஞானமின்றி இறக்கிறான்.
தொடரும்………….