திருவெம்பாவை – 1

Shiva_as_the_Lord_of_Dance_LACMA_edit

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் திருவெம்பாவை என்ற தலைப்பில் 20 பாடல்கள் உள்ளன. அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரையில் உள்ள காலத்தை “பிரும்மமுகூர்த்தம்” என்பர். கடவுள் வழிபாட்டுக்கு இது உகந்த நேரம். மாதங்களுள் மார்கழி சிறந்தது. மார்கழி மாதத்தில் மக்கள் அதிகாலை எழுந்து பரமனை வழிபட மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் ‘திருவெம்பாவை’ பாடினார். சொல்லழகும், பொருளழகும் நிறைந்த இந்த 20 பாடல்களை எளிய தமிழில் படித்து இன்புறுவோம்.

——————–

01

ஒளி மிக்க பெரிய கண்களையுடையவளே!
முதலும் முடிவுமற்ற
அறிவுப் பேரொளியைப்
போற்றிப் பாடுகிறோம்
ஆனாலும் நீ உறங்குகிறாய்
உன் காதுகள் என்ன செவிடா?
மகாதேவனை நாங்கள்
வாழ்த்தும் ஒலி
வீதியெல்லாம் கேட்கிறதே
அதைக் கேட்ட ஒருத்தி
எழுந்தாள்
தேம்பினாள்
பரவசமுற்றாள்
மலர்ப் படுக்கையில் புரண்டு
விழுந்து
மயங்கி விட்டாள்
பார்த்தாயா அவள் நிலையை
என்ன சொல்கிறாய் –
உன் நிலைதான் என்ன ?
பாவை போன்ற தோழியே
நாங்கள் சொல்வதை
நன்றாக எண்ணிப்பார்.
02

தோழியர்:

நல்ல நகைகள் அணிந்தவளே!
ஒளி வடிவாகிய பெருமானின் புகழை
இரவு பகலெல்லாம் பேசுவோம்
அப்பொழுதெல்லாம் நீ
உன் அன்பு அவனுக்கே உரியதென்பாய்
ஆனால் இப்போதோ
மலர் மஞ்சம் விரும்புகிறாய்.

தோழி:

சீ..சீ..பெண்களே
பரிகசித்து விளையாட
இதுவா நேரம்
இதுவா இடம்

தோழியர்:

பெண்ணே!
தேவர்களே
தயங்குகிறார்
அவனைப் போற்றும் தகுதி
தங்களுக்கு இல்லையென
ஆனாலும்
ஒளி மயமான சிவலோகன்
தில்லைச்சிற்றம்பலஈசன்
நமக்கருள
காத்திருக்கிறான்
ஏதுமறியோம் அவனைப் பற்றி
அன்பு மட்டுமே அவன் மீது
அவனைப் போற்ற நாம்
வல்லவரோ !
நம் நிலை என்ன ?
சிந்தித்துப்பார் தோழி.

03

தோழியர்:

முத்துப்போன்ற பற்களையுடையவளே
முன்பெல்லாம்
முன்னரே விழித்து வந்து
இறைவனைப் பற்றி
என் தந்தை,
ஆனந்தன்,
அமுதன்
என்றெல்லாம்
இனிக்க இனிக்கப் பேசுவாய்
இப்போதோ
இன்னும் உறங்குகிறாய்
கதவைத் திற!

தோழி:

பெண்களே
நீங்கள் பக்தி மிகுந்தவர்கள்
ஈசனின் மூத்த அடியார்கள்
நான் புதியவள்
என் குற்றம் பொறுத்து
என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்
இதனால் ஏதும்
தீங்கு விளையுமோ?

தோழியர்:

ஏமாற்றப் பார்க்காதே
எங்களுக்குத் தெரியும்
நீ
இறைவன் பால் கொண்டுள்ள
இணக்கம்,
தூய மனம் கொண்டோர்
பாட மாட்டார்களா நம் சிவனை
நாங்கள் வேண்டுவதெல்லாம்
நீ பாடவேண்டும் என்பதே.
சிந்தித்துப்பார் தோழி.
04
தோழியர் :

முத்துப்போல் பல்லழகி
உனக்கு
இன்னுமா விடியவில்லை ?

தோழி:

வண்ணக்கிளிமொழியார்
எல்லாரும் வந்து விட்டார்களா?

தோழியர் :

எண்ணிப்பார்த்து சொல்லுகிறோம்
அது வரை நீ உறங்கி
காலத்தை வீணில் போக்காதே.
தேவர்களுக்கு ஒப்பற்ற
அமிர்தமாயிருப்பவனை
வேதங்கள் போற்றுகின்ற
மேலானபொருளை
கண்ணுக்கு இனிய சிவனைப்
பாடி மனங்குழைவாய்
நீயே வந்து
வந்தவரை எண்ணிக்கொள்
எண்ணிக்கை குறைந்தால்
மீண்டும் நீ உறங்கப்போ

05

திருமாலும் அறியா
பிரம்மனும் அறியா
மலை போல் நெடுமேனியனை
நாம் உணர்வோம் எனப் பொய் பேசும்
தந்திரக்காரியே
கதவைத்திறவாய்
மண்ணவரும்
விண்ணவரும்
இன்ன பிறரும்
அறிய முடியா சிவனை
அவனின் அழகைப் பாடுவோம்
குற்றம் பொறுத்து
சீர் செய்யும் அவன்
சீலமும் பாடுவோம்
சிவனே சிவனே என்று
குரல் கொடுத்தும்
நீ துயில் நீங்கவில்லை
வாசமிகு கூந்தலை உடையவளே
இதுவோ உன் தன்மை
சிந்தித்துப்பார்.

06

மான் விழியாளே!
நேற்று நீ சொன்னாய்
நாளை நானே வருவேன்
வந்து உங்களை எழுப்புவேன் என்று
வார்த்தை தவறிவிட்டாய்
எத்திசையில் போனது உன் சொல்
இன்னமுமா விடியவில்லை?
விண்ணவரும் அறியா
மண்ணவரும் அறியா
இன்ன பிறரும் அறியா
மகாதேவன்
தானே வந்து காப்பாற்றி
எங்களை அடிமை கொண்டான்
அவன் திருவடியை
நாங்கள் பாடி வருகிறோம்
வாய் திறந்து பேசு பெண்ணே
உன் உள்ளம் உருகாதோ?
உனக்கு இது தகுமோ?
எங்களுக்காகவேணும் நீ
அவன் புகழ் பாடு
பாவையே!

07

அம்மா
உன் விளையாட்டுக்களில் இதுவும் ஒன்றோ !
சிவன்
தேவர்களும் நினைத்தற்கரியவன்
ஒப்புயர்வற்றவன்
பெருஞ்சிறப்புகொண்டவன்
அவன்
எழுந்தருளும் வேளையிலே
சங்கொலி முழங்கும்
முழக்கம் கேட்டவுடன்
‘சிவ சிவ’ என்றே வாய் திறப்பாய்
தென்னவா எனும் முன்னே
தீயிலிட்ட மெழுகாவாய்
ஆனால் இப்போதோ
நாங்கள் எல்லாம்
எமக்கினியவனே
எங்கள் மன்னவனே
இன்னமுதானவனே என
தனித்தனியாய்
சொல்கின்றோம்
இவை கேட்டும்
இன்னும் உறங்குகிறாய்
உனக்கு என்ன கல் நெஞ்சா?
உன் உறக்கத்தின் தன்மையென்ன?

08

கோழிகள் கூவுகின்றன
ஏழிசை நாதம் போல்
பறவைகள் பாடுகின்றன
வெண்சங்குகள் முழங்குகின்றன
ஒப்பற்ற பேரொளியும்
உவமையில்லாக் கருணையும் கொள்
மேலாம் பரம்பொருளாம்
சிவனைப் பாடுகிறோம்
தோழி
நீ அதைக் கேட்கவில்லையா?
இப்படியுமா ஒருத்தி
உறங்குவாள் ?
வாய் திறவேன் என்கிறாய்
கருணைக்கடலாம்
இறைவனின்பால்
இவ்வாறுதானா அன்பு கொள்வாய் ?
பேரழிவை வென்றவனை
மாதொரு பாகனைப்
பாடுகிறோம்
தோழி
நீயும் அவன் புகழ் பாடு !

09
பழையவற்றிலெல்லாம்
பழைய மெய்ப்பொருளே
புதியவையில்
புதுமை நலம் தருபவனே
நீ எங்கள் தலைவன்
நாங்கள் உன் அடியார்
உன் அடியவர் திருவடி பணிவோம்
அவர்களுக்கே துணையாவோம்
துணைவியருமாவோம்
அவர் சொன்னவண்ணம்
தொண்டு செய்வோம்
இறைவா
இவ்விதம் அருள்வாயேல்
குறையேது எங்களுக்கு.

10
கீழுலகம் ஏழினுக்கும் கீழாய்
சொல்லிலடங்கா
அவன் திருவடிகள்
அனைத்துக்கும் மேலே
பூக்கள் அணிந்த
அவன் திருமுடி
அவன் உமையொருபாகன்
எனவே
அவன் மேனி ஒன்றன்று
வேதமும்
விண்ணவரும்
மண்ணவரும்
புகழ்ந்தாலும்
சொல்லிலடங்கா
உயிர்த்துணைவன்
தொண்டருள்
இலங்குகிறான்
குற்றமற்ற
சிவன் அவன்
சிவாலயப்
பெண்பிள்ளைகளே
அவனுக்கு
ஊர் இல்லை
பேர் இல்லை
உறவினரும் இல்லை
அயலாருமில்லை
இவனை, இந்த சிவனை
பாடும் வகை என்ன பாவாய் !

Advertisements
This entry was posted in Thiruvembavai and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s