பெரிய திருவந்தாதி-8

2655

என் உள்ளத்தில் இருந்து உலவும்
யாரையும் சார்ந்திராத
தன்னிகரில்லா மூர்த்தியே!
கங்கையை அணிந்த
சிவந்த சடையன் சிவன்
உன் திருமேனியின் ஒரு பாகம்
நான்முகனோ
உன் நாபிக்கமலத்தில் உதித்தவன்
இத்தகு பெருமைகள் கொண்டவன் நீ
உன்னைப்பற்றி பேச
எனக்கு இனி என்ன இருக்கிறது?

2656

முதல்வா!
நிகரற்ற மழை மேகமே!
அனைத்துக்கும் முதன்மை
மும்மூர்த்திகளே என்பர் சிலர்
வேறு சிலர்
இவர்களுக்கும் முதலாய்
வேறு சக்தி உள்ளதென்பர்
உன் நாபியிலிருந்து
ஒளி மிகு தாமரை மலர் தோன்றி
பிரமன் வந்தான்
பிரமனிலிருந்து படைப்புகள் வந்தன
இதனால்
‘நீயே முதல்வன்’ என்பது
தெளிவல்லவா?

2657

பூவைப் பூக்களையும்
காயாம்பூக்களையும்
கருநெய்தல் மலர்களையும்
செங்கழுநீர்ப் பூக்களையும் காணும்போதெல்லாம்
அவை
அந்தத் திருமாலின்
திருமேனி வடிவங்களாய்த் தோன்றி
இந்தப் பாவியின்
உயிரும் உடம்பும் பூரிக்கிறதே!

2658

ஒரு நாளும் தவறாமல்
இரந்து பாடும் எனக்கு
அவன் இரங்கி அருளவில்லை
அவன் தன் திருமேனி காட்டவில்லை
குன்றைக் குடையாக்கிப்
பசுக்களைக் காத்த கோபாலன் அவன்
ஓ மனமே!
அவன் அருள் வெள்ளம் பாய முடியா
மேட்டு நிலமா நம் நிலம்?

2659

தீயோர் உடல் கிழிக்கும்
சக்கரமேந்திய பரந்தாமா!
வானமும் பூமியும்
உன்னுள் அடக்கம்
நீயோ
என் செவி வழி புகுந்து
நீங்குதல் இன்றி
என்னுள்ளே அடங்கிவிட்டாய்
யார் பெரியவர்?
நீயா?
நானா?
யார் அறிவார்? சொல்!

2660

உலகளந்த பெருமாளே!
உன்னை நினைத்தாலே
உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கிறது
வெறித்து நோக்கி
என் பாவங்கள் அழியும்படி அருள் புரிந்தாய்
பின்
உன்னை அடைந்து விட்டால்
நீ இருக்கும் உலகமெல்லாம்
நானும் இருப்பேன்
நான் சொல்வது சரிதானா?
நீயே சொல்.

2661

ஆர்ப்பரிக்கும் திருப்பாற்கடலில்
பள்ளிகொண்டுள்ள இறைவா!
சொல்லப்போனால்
உடன் பிறந்தோர்
சுற்றத்தார் என
யாருமில்லை எனக்கு
உற்ற துணைவன் நீதான் எனக்கு
‘நானே உனக்குத் துணை ‘ என சொல்பவர்
உன்னைவிட்டால்
வேறு யாருமில்லை.

2662

நல்ல மனமே!
நண்பர்கள் கூட்டம்
நீண்ட வாழ்நாள்
பெரிய குடும்பம்
பழம்பெரும் குலப்பெருமை
உறவினர்கள்
என
இன்பங்கள் பல தினமும் அடைந்தாலும்
பேரின்பம் தருவதென்னவோ
சாரங்க வில்லிலே
இடையறாது அம்புகள் ஏவி
வீரத்தொழில் புரியும்
ராமனின் பெருமைகளை
எண்ணி எண்ணி
தீரா அமுதாய் அனுபவிப்பதே!

2663

இம்மண்ணுலகில்
மனிதர்
எப்பிறவியில் பிறந்திருந்தால் என்ன?
இழிவான எந்தத் தொழிலைச் செய்தால் என்ன?
சக்கரக்கையன்
பெருமை மிகு மேய்ப்பன் கோபாலன்
அவனுக்கு ஆட்பட்டு விட்டால்
அவர்களின் பிரகாசம்
பரமபத ஒளியையும் மிஞ்சிவிடும்
பழம் பாவங்கள் பற்றிய பயம் ஓடி விடும்
பின்
அவர்களுக்குத்
தேவருலகம் ஒரு பொருட்டாமோ?

2664

பிறப்பு
நோய்
முதுமை
இறப்பு
எல்லாமே போனபின்பு
பேரானந்தமான
வீடு பேற்றை அடையலாம் என்றபோதும்
வேண்டாம் அது எனக்கு.
உலகளந்த பெருமாளின்
பாதங்கள் பணியாமல் கழிக்கின்ற
ஒவ்வொருநாளும்
பொழுதும்
துன்பமே.
வேறு வகையாய் எண்ணமாட்டேன் நான்.

Advertisements
This entry was posted in Nalayira Divya Prabandham and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s