பெரிய திருவந்தாதி-7

2645

வாமனனாய்ப்
பரந்தாமன்
உலகளந்த அந்நாளில்
வானவர்கள் ஒன்றுகூடி
வேதவிதிமுறையாய்
சிவந்த அவன் திருப்பாதங்களில்
தெளித்த
மகரந்தம் சிந்தும்
மலர்களின் அழகுக்கு
விரிந்த வானமெங்கும் பூத்திருக்கும்
விண்மீன்கள் தோற்றுவிடும்.

2646

வானமென்னும்
அழிவில்லா வான்குடைக்குக் கம்பிகள்
இந்த விண்மீன்கள்
சந்திரனோ
குடைக்காம்பின் நுனியிலுள்ள
வெள்ளி வட்டம்.
வான்குடைக்கு
நீலக்காம்பாய் நிமிர்ந்து
உலகளந்தான்
இனி அவன்
நம் பிணிக்கெல்லாம்
பெரு மருந்தாவான்.

2647

கடலுக்கு மேலே
வானில் பரவுகிற நீருண்ட மேகத்தைக்
காற்று கலைக்கிறது
கலைத்து ஓய்ந்தபின்னே
கார்மேகம் மழையாய் மாறி
கடலில் மீண்டும் கலக்கிறது
அதுபோலே
சக்கரமுடைய திருமால்
ராமனாய் அவதரித்து
தீய அரக்கி
சூர்ப்பணகையின்
மூக்கையும்
பருத்த காதுகளையும்
அறுத்தெறிந்தார்
பின்
ராவணனை வதம் செய்து
பாற்கடலில் பள்ளி கொண்டார்.

2648

இராமனாய்ப் பிறந்து
சுக்ரீவன் ஐயம் தீர்க்க
ஏழு மரங்களை
ஒற்றை அம்பால் துளைத்தவனும்
கண்ணனாய்ப் பிறந்து
கொக்கு வடிவ பகாசுரனின்
வாயைக்கிழித்து வதம் செய்தவனும்
திருமாலே என்றுணர்ந்து
உறுதி கொண்ட நெஞ்சினராய்
அவனைப் போற்றுவாராகில்
அவர்களைத்
தேவர்கள்
முப்பொழுதும் கைகூப்பித் தொழுவார்கள்.

2649

மனமே! வாராய்!
உடனிருந்தே வாட்டும்
கடுந்துயரங்களை
விரட்டியடிப்பான் அந்தப் பரமன்
மலை போலும் கம்பீர ஆதி கடவுள் அவன்
அந்தக் கேசவனை
நாராயணனை
மாதவனை
எப்பொழுதும் பாமாலை சூட்டித் தொழுவாய்.

2650

ஓ மனமே!
பரந்தாமனுக்கு அணிகலன்
சக்கரம்
அவனுக்கு ஆயுதமும் அதுவே.
நீண்ட நெடுங்காலமாய்த் துயரிழைத்த
இராவணனை
இலங்கை சென்று
இன்னுயிர் போக்கினான்
அந்த மாயவன்
தொடர்ந்து மணம் பரப்பும்
குளிர்ந்த துளசி மாலையணிந்த
வேத முதல்வனை
நன்கறிந்து பக்தி செய்
நான் உனக்கு சொல்வது இதுவே.

2651

பரமபதம் வேண்டினால்
அருள்வான்
அந்தப் பரந்தாமன்
அன்றி
மண்ணுலகை ஆள வேண்டினால்
அதையும் அருள்வான்
அந்த அருளாளன்
பேதை நெஞ்சே!
இந்த இரண்டும் தரவல்ல
இறைவனை அறிந்து
அவனைத் துதிக்கக் கற்றுக்கொள்.

2652

மன்னன் மாபலியை வெல்ல
திரிவிக்ரமனாய் உயர்ந்தவன்
கரிய நிறத்தவன்
என்னுள்ளத்தே குடி புகுந்து
நெஞ்சக்கோயில் விட்டு நீங்காமல்
நிலைகொண்டுள்ளான்.
அந்தப் பரமனுக்கு
திருவேங்கடமலை
ஆர்ப்பரிக்கும் பாற்கடல்
வைகுண்டம்
வானுலகமெல்லாம்
அற்பமாகப்போய்விட்டன
ஐயோ பாவம்!
நான் என்ன தவம் செய்தேன்?

2653

மேன்மை மிகு திருமாலின்
குணக் கடலை
உள்ளத்தில் தேக்கி
அவனையே சிந்தித்திருக்கின்றேன்.
அதனாலே
கொடிய பாவங்கள்
என்னை அணுக இயலாமல் திணறி
கண்கள் சிவப்பேறி
முகம் வாடிவிட்டன
இனி
என்னை நெருக்கித் துன்புறுத்த
யாரால் முடியும்?

2654

அந்தப் பரந்தாமன்
கட்டித்தங்க பொன்முடி அணிந்தவன்
ஆயிரம் திருப்பேர் கொண்டவன்
ஒளி உமிழும் சக்கரப் படையை உடையவன்
அவனை​​
துயர் தீர்க்கும்
தாயும் தந்தையுமாய்ப்
போற்றுகின்றேன்
இனி எனக்கு
எது நேர்ந்தால் என்ன?

Advertisements
This entry was posted in Nalayira Divya Prabandham and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s