பெரிய திருவந்தாதி-6

2635

மனதை ஆட்டிப்படைக்கும்
ஐந்து புலன்களும்
ஐந்து கொடியவர்கள்
இவர்களின் சீற்றத்தைச் சிதைத்து
பரந்தாமன் சந்நிதியில் சேர்த்து
வளமான நிலத்தில் வளர்ந்த
குளிர்ந்த துளசி மாலையணிந்த
அவன்
திருப்பாதங்களைப் பணியச்செய்வதே
அடியார்களுக்கு அழகு!

2636

அன்றொருநாள்
எம்பெருமான்
குள்ள வடிவெடுத்து
பூமிப்பிச்சை கேட்டான்
குழந்தைக் கண்ணனாய்
அரக்கி பூதனை உயிர் குடித்தான்
இப்பெருமைமிகு
நாராயணனைக் காண
ஆவல் கொள்கின்றன என் கண்கள்
அவை
வேறெதையும் பார்க்க விரும்பவில்லை
அவன் புகழ் பாடுவதன்றி
என் வாய் உண்ணவும் விரும்பாது.

2637

செந்தாமரைக் கண்ணா!
ஒன்று சொல்லவேண்டும் உன்னிடம் நான்
உன் அடியார்க்கு நீ
நன்மைகள் பல புரிந்தும்
மன நிறைவு இல்லை உனக்கு.
இன்னும் என்ன செய்யலாம்
என சிந்திக்கிறாய்
உனது இந்தப் பரிவு
அவர்களுக்கு வைகுந்தத்தையே
அளிக்கக்கூடும்
ஆனால் எனக்கோ
உன் புகழில் தோய்ந்து திளைப்பதே
பேரானந்தம்.

2638

பரமாத்மா
பசுங்கன்றாய் வந்த அசுரனை
விளாமரமாய் நின்ற
அசுரன் மீது வீசி
காய்களை உதிர்த்து
இருவரையும் அழித்தார்
அவன் திருப்பாதங்கள் பணிந்தோம்
அதனாலே
நம் கடும் பாவங்கள்
வானத்தில் தஞ்சமடைந்தனவோ?
அலைகள் வீசும் கடலில் கரைந்தனவோ?
வீசுகின்ற காற்றில் கலந்தனவோ ?
நெருப்பில் அழிந்தனவோ ?
காட்டில் மறைந்தனவோ ?
போன இடம் தெரியவில்லையே?

2639

நாற்புறமும் அலைகள் மோதும்
திருப்பாற்கடலிலே
மாணிக்கம் ஒளிரும்
பாம்புப்படுக்கையிலுள்ள எம்பெருமான்
நம் பக்கம் வருவது அரிது
ஆனால்
மனக்கவலை போக்கும்
அப்பெருமானை
மனதில் குடிவைத்து
எப்போதும் காணலாமே!

2640

அனைவருக்கும் அருள் புரிய
இடையர் குலக்கொழுந்தாகத்
தன் வடிவம்
குணமெல்லாம் மாற்றி
உதவிகள் புரிந்திடுவான்
அந்த நந்தகுமாரன்
தகாத வழியிலே செல்லாமல்
காத்திடுவான் பக்தர்களை
தீயவர்க்கு
எட்டாத தூரம் அவன்
நெடிது வளர்ந்து
உலகை அளந்தவன்
மாயங்கள் பல புரிவான்
அவன் காட்டும் வழிகள்
ஒன்றா இரண்டா?
இனி எல்லாம் இனிதே!

2641

மனமே!
எம்பெருமான்
அசுரன் இரணியனை
அடக்கிப் பிடித்துப் போரிட்டு
அவன் மார்பைப் பிளந்தான்
அப்போது
பெருகிய ரத்த வெள்ளம்
சுழித்து ஓடி
பள்ளங்களில் பரவியது.
வழி வழியாய் வந்து
தேங்கிக்கிடக்கும்
என் கொடும்பாவங்கள் அழிந்துபோக
அந்தத் திருமால்
அருள் செய்யமாட்டானா?

2642

பெருமை மிகு பெருமானே
உலகத்துப் பேரொளியே!
பால் போன்ற உன் திருமேனி அழகிலே
பறி கொடுத்தேன் என் மனதை
மாற்றாதே இந்நிலையை.
இனி வரும் காலங்களிலே
பிறவாப் பேறு பெற்று
உன் திருவடிகளில்
குற்றேவல் செய்ய
எனக்கு ஆசையில்லை
நான் விரும்பும் செல்வமெல்லாம்
உனை என்றும் மறவாமை.
2643

அலை வீசும் பெருங்கடலில்
பள்ளிகொண்டுள்ளான் பரந்தாமன்
அவன் திருநாமங்களை
வாய்விட்டுத் துதிக்க எண்ணுகின்றேன்
அவன் பேர் சொல்ல எண்ணும்போதே
என் கொடிய பாவங்கள்
காட்டிலோ
மலையிலோ
தஞ்சம் புகுந்திருக்கவேண்டுமே!
ஆனால்
அவை போய்ச்சேர்ந்ததாகத் தெரியவில்லை
ஒருவேளை
அவை இங்கேயே சுற்றுகின்றனவோ?

2644

என் மனமே!
வேறு எந்த நினைவுமின்றி
இளந்துளசிமாலை அணிந்த
எம்பெருமானை நினைத்திரு
பழைய
கொடிய
நரகத்தில் விழாமல்
காப்பவன் அந்த எம்பெருமான்
அவனை விட்டால் வேறு கதியில்லை
முரண் படாதே
முரண் பட்டால்
ஒழிந்து போ நீ.

Advertisements
This entry was posted in Nalayira Divya Prabandham and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s