2615.
கொடிய பாவங்கள் தீரும் நல்லவழியை
நாம் அறிந்துகொண்டோம்
கண்ணனாய் அவதரித்து
குடக்கூத்தாடி
அலுத்து
பாற்கடலில் பள்ளி கொண்டான்
அந்தப் பரந்தாமனின்
திருவடி நிழலுமானோம்
திருவடி ரேகையுமானோம்
பாவங்கள் தொடரா வழி இதுவே!
2616.
கயிற்றால் கட்டியதால் தழும்பு
தன் வயிற்றில் தெரியும்
தாமோதரன்
அவன்
தன் அடியார்க்கு அடிமை செய்யவே
ஆசைகொண்டான்
மனமே
அப்பேர்ப்பட்ட அவனுக்குப்
‘பணி புரிவாய்’
எனக்கூறினால் அது மறுக்கிறது
வெகு காலமாய்
அது செய்து வரும் தீவினைக்கு
ஆட்பட்டுத் தாழ்கிறது
இனி
இங்கு
நான் என்ன செய்ய முடியும்?
2617.
நல்லது எதுவுமே செய்யாத அசுரர்கள்
அவர்களைத் தன் சக்கரத்தால்
துண்டு துண்டாக
வெட்டிச்சாய்த்தார் பகவான்
அப்படிப்பட்ட பகவானை
காணிக்கை எதையேனும் கொடுத்து
அடைதல் வேண்டும்
பகுத்தறியும் குணமும்
மகிழ்ச்சியடையும் இயல்பும் நமக்கிருந்தும்
அணுகாமல் இருக்கலாமோ
அந்தப்பரந்தாமனை?
2618.
உன் நிறம்
ஒளிரும் கடலின் நீலம்
ஆதி கடவுள் நீ
என் பழைய பாவங்களைத தொலைக்கும்
நீதியரசன் நீ
திருப்பாற்கடலிலே கண் வளரும்
உன் அழகைக் கேட்டவுடன்
என் கால்கள் தடுமாறுகின்றன
மனமுருகிக் கரைகிறது
எதையும் பார்க்கமுடியாமல்
கண்கள் சுழல்கின்றன.
2619.
அன்று
பெருமான்
நரசிம்மனாய் அவதரித்து
இரணியன்
‘நானே இறைவன்’
என்று சொன்ன சொல் தகர்ந்துபோக
தன அழகிய கைகளால்
அவன் மார்பினைப்பிளந்தார்
இந்தச்செயல்
அவன்
அடியார்களிடம் காட்டும் அன்பின் வெளிப்பாடு
ஆதலாலே
என் நெஞ்சில் நின்றும்
இருந்தும்
கண் வளர்ந்தும்
உலவியும் கூட
மனநிறைவு இல்லை
என் நெஞ்சை விட்டு அகலவேயில்லை அவன்
2620.
நீக்கமற நிறைந்த பரந்தாமனை
அங்கிருப்பவனோ?
இங்கிருப்பவனோ?
எதிரில் உள்ளவனா/
அல்லது
எட்டாத தொலைவில் உள்ளவனா?
என்றெல்லாம் குழம்பவேண்டாம்
எல்லாம் ஒருவனே என உணர்ந்து
அந்தக் கண்ணனுக்கே ஆட்பட்டால்
அவன் எல்லாமும் ஆவான்.
2621.
நல்ல மனமே!
ஆத்மா கடைத்தேற உதவும் அறிவைப்பெறுதல்
அரிதல்லவா?
ஆனால்
உள்ளது நம்மிடம் அந்த அறிவு
ஆதலால்
வண்டுகள் மொய்க்கும்
குளிர்ந்த துளசிமாலையணிந்த
திருமாலைப்
பக்தியுடன் வாழ்த்திப் பாடுவதில்
உறுதியாய் இரு.
2622.
ஆராய்ந்து பார்த்தால் மனமே!
நீ
அவனை நினைக்காமல்
இமைப்பொழுதுகூட
வீணாக்காதே.
இடைச்சி யசோதை கையால்
பரமன் பட்ட பாடுகளை
கேலிப்பொருள்பட பேசியாவது
துளசி மாலையணிந்த
அந்தப் பரந்தாமனின்
பெருமைகளைப் பேசிப்பேசி
உன் பாவங்களைப் போக்கிக்கொள்வாய்.
2623.
நெஞ்சமே!
தழைக்கும் துளசிமாலையணிந்த மார்பன்
அந்த எம்பெருமான்
அவனை அழைத்துப்
புகழ்பாடிப் பணிவதை
அவன் உள்ளமிரங்கும் காலத்தில்
பரமபதம் சென்று செய்ய முயலாமல்
இங்கே அவன் புகழ் பாடி
தவறு செய்து
உழன்று கிடந்தோமோ?
நீயே சொல்வாய் .
2624.
மனமே வா!
பரந்தாமன் புகழ் பாட
ஒப்பற்ற நல்வாய்ப்பு இது
நழுவவிடாதே
பின்வாங்கி
என்னைக்கொடிய நரகத்தில் தள்ளாதே.
தாயைப்போல் வந்த
பேய் பூதனையைப்
பாலோடு அவள் உயிர் கலந்து குடித்தவனைப்
புகழ்வதே
நமக்கு வலிமை தரும்.