பெரிய திருவந்தாதி-2

2595.

பரந்தாமா!
நீரில் மூழ்காத பூமி நீ
வானும் நீ
காற்றும் நீ
நெருப்பும் நீ
நீரும் நீயே
ஆணவ இராவணனின்
இன்னுயிர் போக்கி
அவன் வாழாதிருக்க வதம் செய்த
உன் வலிமையே உயர்ந்தது
உன் வீரமே வீரம்!

2596.

நெஞ்சே!
நீ
என்னைவிட்டு அவன் திருவடிகள் சென்றபோதே
ஆழ்த்திவிட்டாய் என்னை துயர்க்கடலில்.
‘போ’ என்று நான் சொல்லியும்
திரும்ப வந்து உழல்கின்றாய்
‘போ’
போய் அவன் திருவடிகளை அடைந்துவிடு
கோபித்து வழக்காடாதே
நான் சொல்லும் நல்லுரையைக்கேள்
முடிவாகச்சொல்கிறேன்
என்னால் முடிந்ததெல்லாம்
அவன் திருவடிகளை
வாழ்த்திப்பாடுவதே.

2597.

இறைவா!
நான் இப்போது வேண்டுவது
நியாயத்துக்குப்புறம்பானதல்ல
இழப்புண்டு என்றாலும்
அடியார்கள் வேண்டினால்
அருள வேண்டும் நீ
அருள் புரிவதால்
நீ
இழக்கப்போவது ஏதுமில்லை
ஏற்றுக்கொள் என்னை அடிமையாக
உன் மேனி ஒளி காட்டி
என் வேண்டுதலை நீ
நிறைவேற்று.

2598.

நெஞ்சே!
கருமை நிறக்கண்ணனின்
அவதாரதத்துவம் அறியாமல்
அரக்கி பூதனை
நச்சுப்பால் கொடுத்தாள் அவனுக்கு.
ஆனால் அழிந்ததோ பூதனை
நீ யார்?
புலன் வழி இன்பம் துய்த்து
ஊனமடைந்திருக்கிறாய்
இதனை உணர்ந்தும்
இறை தரிசனம் பெற இரங்குகிறாய்
இது
தீவினை என்னும் பாம்பின் வாய்க்குள்
கை விடுதல் போலுள்ளது.

2599.

நெஞ்சே!
பெருமான் பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளான்
ஆர்ப்பரிக்கும் கடலின்
அலைக்கரங்கள்
அவன் திருமேனியையும்
பாதங்களையும்வருடுகின்றன
பெருமானோ
செவ்வரியோடிய விழிகளை மூடி
அறிதுயிலில் ஆழ்ந்துள்ளான்
அவன் திருக்குணங்களை நாம் பேசுவதால்
நீங்கும் கொடிய துன்பங்கள்
இதற்கில்லை மறுபேச்சு
இதனை உன் கண் முன்னே கண்டறிவாய்.

2600.

பெருமானே!
சீரோடு பிறந்து
சிறப்பாக வளர்ந்தோம் என்றில்லாமல்
குள்ளனாப்பிறந்து
பூமி தானம் கேட்டாய்
கடல் கொண்ட பூமியை
உன் மார்பிலே தாங்கிப்
பிரளய காலத்தில்
அதை உண்டு,காத்து
பின்னர்
வெளிக்கொணர்ந்தாய்
இந்த பூமி உன் சொந்த பூமி
இதை ஏன் நீ தானமாகக்கேட்டாய்
அதற்காக வாமனனாய் ஏன் அவதரித்தாய்/
இதன் உள்நோக்கம் என்ன?
பெருமானே.

2601.

நாற்புறமும் சூழ்ந்துகொண்டு
இராவணனின் தலைகளைத்
தன் வில்லால்
மலைகள் வீழ்வதுபோல்
வீழ்த்தினார் இராமபிரான்
அன்பர்கள்
அவரைச்சூழ்ந்துகொண்டு வரம் கேட்டால்
கண்ணெதிரே தோன்றாமலே
சீராக வாழவைப்பார்
அருளிய வரம் பற்றி வாய் திறவார்
இப்பேரன்பு வேறு எவர்க்குண்டு?

2602.

தாய் யசோதை
தாம்புக்கயிற்றினால் உன்னைக்கட்டிப்போட்டாள்
அத்தழும்பு மறையுமுன்னே
காளியன் உன்னை இறுகக்கட்டியதால்
இன்னலுற்றாய்
ஆனாலும் நீ வருந்தாமல்
சோர்வின்றி
பல்லுயிர் படைத்தாய் வித்தகனே!
உனது ஆதி வடிவை
யாரறிவார்?
நீயே சொல்.

2603.

திக்குத்தெரியாமல் தவிக்கும் நெஞ்சே!
பெருமானின் பெருமைகள் பேசினால்
பேச்சில் குற்றம் வராது
அவர்
அல்லும் பகலும்
பாண்டவர் ஐவரைப் பாதுகாத்தார்
படைபலம் மிக்க கௌரவர்கள்
பகவானின் பலமின்றி வீழ்ந்தார்கள்
இதைப்புரிந்துகொள் மனமே.
புரிந்துகொண்டு
நீ அவனைக்காண எண்ணில்
தோன்றுவான் உன் முன் அவன்.

2604.

அறிவு மிக்க நல்மனமே
குள்ளனாய் உருவெடுத்து
பகவான்
பூமியைத்தானமாய்ப்பெற்றான்
உடன்
திரிவிக்ரமனாய் வளர்ந்து
உலகெல்லாம் பரவி
அனைத்தையும் தீண்டினான்
அவனே வலிய அனைத்தையும் தீண்டி
அருளினான்
அதனால்
அவன் அருளை
நாமாகப்பெறலாம் எனப் பேசினால்
நாணத்தானே வேண்டும்.

Advertisements
This entry was posted in Nalayira Divya Prabandham and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s