பெரிய திருவந்தாதி-1

பெரிய திருவந்தாதி எண்பத்தேழு நேரிசை வெண்பாக்களைக் கொண்ட கவிதை. இதில் நம்மாழ்வார் தம் நெஞ்சோடு பேசுகிறார். மனதின் முழு ஒத்துழைப்பு இருந்தால்தான் ஒருவன் ஆன்ம சாதனையிலும் பக்தியிலும் சிறந்து விளங்க முடியும். எனவே நம்மாழ்வார் பெரிய திருவந்தாதியில் நெஞ்சமே நெஞ்சமே என பல பாசுரங்களில் மனதை விளித்து பரந்தாமனின் பாத கமலங்களைப் பற்ற விழைகின்றார். “வகை வகையான ரசனைக்கும் உள்ளம் கனியும் கருத்துகளுக்கும் இந்தப் பெரியதிருவந்தாதி ஆழ்வாரின் பேரிலக்கியமான ‘திருவாய்மொழிக்கு’ ஒரு முன்னோடி, ஒரு முன்னோட்டம் என்று அமரர் பேராசிரியர் அ.சீனிவாசராகவன் கூறுகிறார். அவர் மேலும் கூறுகிறார்:-

நம்மாழ்வாரை அனுபவிக்க மூலப்பாடல்களைப் பாடிச்சுவைக்க வேண்டும். இவர் பாடல்களில் ஆளும் தமிழ் மொழி தென் பாண்டி நாட்டுப்பழகு தமிழும் செந்தமிழும் கலந்த மொழியாகும். இதிலே உள்ளத்து உண்மை உணர்ச்சி பளிச்சென்று தெரிகிறது. அதிலே ஆழமும் தெளிவும் உண்டு.

பெரிய திருவந்தாதி அதர்வணவேத சாரமாகப்பாடப்பட்டது என்கிறார்கள். பாப விமோசனத்துக்கான பல பாசுரங்கள் இத்திருவந்தாதியில் உள்ளதே இதற்கு சான்று எனலாம் .

இனி பெரியதிருவந்தாதி எளிய தமிழில் ……………

2585

எம்பெருமானைப்பாட
ஊக்கமும்
முயற்சியும் கொண்டு
முந்துகின்ற மனமே!
தனியாகப்போகாதே
என்னோடு கூடிச்செயல்படுவாய்.
காயாம்பூ நிறத்தானின் பெருமைகளை
நாமிருவரும் ஒன்றாக
அன்புடன் சொல்வோம் .
நாவினால் அவன் புகழ் பாட
பொருத்தமான வார்த்தைகளால்
பாமாலை தொடுப்போம்.

2586

திருமாலே!
அற்பர்களாகிய நாங்கள்
உன்னைப்புகழ்ந்தால்
அது உன்னைப்பழித்ததற்குச்சமம்
அதனால்
புகழாதிருந்தால்
பழித்தவர்களாக மாட்டோம்
உன்னை மனத்தால் நினைக்கலாமென்றால்
அதற்கும் தகுதியில்லை
உன்னை நினைப்பதே இகழ்வதாகும்
நெஞ்சால் நினைக்காவிடில்
உன்னை இகழ்ந்தவராகமாட்டோம்
செந்தாமரைக்கண்ணா!
உன்மீது கொண்ட மோகமே
இந்த முரண்களுக்குக்காரணம்
கோபப்படாதே நீ.

2587.

இறைவா!
எது நல்லது
எது தீயது
நானறியேன்
எவை நல்லவை
எவை தீயவை
என
நானறிந்தாலும்
என் செயல்கள் எல்லாம்
என் வசமில்லை
இந்நிலையிலே
என்னால்
என்ன செய்யமுடியும் பரந்தாமா!

2588

கண்ணன்
கரிய நிறம்
கடல் போன்ற கம்பீரம்
ஒளி வடிவம்
அவன் அன்புக்கு நான் அடிமை
ஆதலால்
என்னிலும் புகழ் மிகுந்தவர் யார்?
தீர யோசிக்கும் வேளையிலே
அவனுக்கு
அன்பனாகும் நல்வாய்ப்பை நானடைந்தேன்
என்னைவிடப்பெருமை கொண்டோர்
வேறு யார்?

2589

மாயவனே!
பெற்ற தாய் போல் பிரியமானவன் நீ
தந்தையைப்போல் காப்பவனும் நீ
ஞானத்தைத்தருபவனும் நீ
எண்ணிப்பார்க்கிறேன்
எனக்கு நீ காட்டிய வழிகளின் அற்புதத்தை
பூதனையின் மார்பிலே
பாலென்ற நஞ்சுண்டு
அவள் உயிரை உறிஞ்சியவனே!
எனது இயக்கமெல்லாம்
நீ காட்டும் வழியில்தான்.

2590

கண்ணா!
எனக்கு நன்மை தரும் வழிகள் காட்டி
ஒதுங்கி விடுவாயோ?
அல்லது
உன் கரிய மாந்தளிர் மேனியைக்காட்டுவாயா?
ஆரம்ப நாள் முதலாய்
அறியாமையில் உழல்கின்றேன்
என்ன செய்யப்போகிறாய் என்னை?
உன் செயல் எதுவாயினும்
நான் என்றுமே உன் அடிமை
மாற்று வழி செல்லேன்.

2591.

பெருமானே!
சிவந்த மேனி கொண்ட தாமரையாள்
திருமகளைத்
திருமார்பில் கொண்டவனே
ஊழிப்பெருவெள்ளத்திலே மூழ்கிய
பூமியைக்காத்தவனே
என் மனம்
உமது திருவடிகள் சேர்ந்து
உங்கள் வசமாகிவிட்டது
ஆனால்
நான் செய்த பாவங்களோ
என்னை
உம்மிடம் நெருங்கவிடவில்லையே
என் செய்வேன்.

2592

வாயாரப்புகழத்தக்க பண்பாளரே!
பூமியை அளந்தவரே!
உன் நுண்ணுருவம் காணமுடியாப் பாவி நான்
உன்னை நெருங்கும் வழி
அறியோம் நாம்
என்றாலும்
உன் மீது அன்பு பெருகுகிறதே!
பெருகும் இந்த அன்பின்
ஊற்று எதுவென்று
நீதான் சொல்லவேண்டும்.

2593

மனமே!
நான் உன் அடிமை
என
வாய் வலிக்கக்கூறியும்
பயனேதுமில்லை
அவர் நம்மைப்பொருட்படுத்தவேயில்லை
இனி
நமக்கு எதுவும் நடக்கட்டும்
ஆனால்
நெஞ்சே!
நீ மட்டும் அவரைப்பற்றி
எதையாவது சிந்தித்துக்கொண்டேயிரு.

2594

எட்டு வசுக்கள்
பதினோரு ருத்திரர்கள்
பன்னிரு சூரியர்கள்
அசுவினி தேவர் இருவர்
இவர்கள்
எப்போதும் இறைவனைத்தொழும்
முப்பத்துமூவர்
இவர்களுக்கு முன் நாம் யார்?
திருமாலை வணங்க ஏற்றவரோ?
அந்தோ!
நல்ல மனமே
குற்றம் மிக உடையவர் நாம்.

Advertisements
This entry was posted in Nalayira Divya Prabandham and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s