நாச்சியார் திருமொழி-14

நாச்சியார் திருமொழி – பதினான்காம் திருமொழி
பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்

(1)
கண்ணன்
காவலேதுமின்றி மனம் போனபடியெல்லாம்
தீம்பு செய்து திரியும் கறுத்த காளை
பலராமனின் ஒப்பற்ற தம்பி
செருக்குடன் ஓசையெழுப்பி விளையாடி வருவதைப் பார்த்தீரோ ?
தான் மிகவும் விரும்பும் பசுக்களை
இனிமையாகப் பேர் சொல்லி மடக்கி
நீர் அருந்த வைத்து
அப்பசுக்களை மேயவைத்து விளையாடும் அவனைப்
பிருந்தாவனத்திலே கண்டோமே.

(2)
நான் வருந்த
என்னைப் பிரிந்துபோய்
ஆயர்பாடியைக் கவர்ந்து
அங்கே மகிழ்ந்திருப்பான்
மேனியிலே வெண்ணையின் முடை நாற்றம் வீசும்
இளங்காளை போன்ற
கோவர்த்தனனைப் பார்த்தீரோ !
மின்னலும் மேகமும் கலந்தது போன்ற தன் மேனியிலே
வனமாலை மினுங்க
தோழரோடு விளையாடும் அவனை
பிருந்தாவனத்தில் கண்டோமே.

(3)
காதலின் உருவாய்ப் பிறந்த நம்பி
அன்பே செய்யும் மணவாளன்
பொருந்தாப் பொய்கள் பல கூறும் கண்ணனை
இங்கே வரக் கண்டீர்களா ?
மேலே காயும் வெயில் படாமல்
கருடனின் சிறகுக் குடையின் கீழ்
காட்சி தரும் கண்ணனை
பிருந்தாவனத்தில் கண்டோமே.

(4)
கார்மேகத்திலே குளிர்ந்து மலர்ந்த தாமரையாய்த் தோன்றும்
கண்களென்னும் நெடும் பாசக் கயிற்றாலே
என்னை இழுத்து விளையாடும்
ஈசன் கண்ணனைக் கண்டீரோ ?
முகபடாம் அணிந்த ஒளிமிக்க பெரிய யானைக் கன்றுபோலே
முத்துச் சட்டை போர்த்தி
வேர்வை அரும்ப விளையாடும் கண்ணனை
பிருந்தாவனத்தில் கண்டோமே !

(5)
மாதவன்
நீல மணிபோல் எனக்கு இனியவன்
வலையில் தப்பிப்பிழைத்த பன்றிபோல் செருக்குற்று
தனது எதையுமே யாருக்கும் தராமல்
எவருக்கும் எட்டாத கண்ணனைக் கண்டீரோ ?
அவனது பீதாம்பரம் தாழ்ந்து விளங்க
பருத்துக் கறுத்த மேகக் கன்றுபோல்
வீதி கொள்ளாமல் காட்சிதரும்
அப்பெருமானை
பிருந்தாவனத்தில் கண்டோமே !

(6)
இரக்கத்தின் அரிச்சுவடி அறியான்
குறும்புகள் செய்திருப்பான்
தன் கையில் ஏந்தும் சாரங்க வில்லையொத்த
புருவங்களுடைய அழகன்
அன்பில்லாமையாலே பொருத்தமற்றவன்
அப்பெருமானைக் கண்டீரோ ?
கரிய நிறம் அவன் மேனி
ஒளியில் செம்மைபெற்றது அவன் முகம்
மலையின்மேல் விரிகின்ற உதயசூரியனாய் ஒளிரும் அவனைப்
பிருந்தாவனத்தில் கண்டோமே !

(7)
உள்ளும் புறமும் ஒன்றாய்ப் பொருந்திய நம்பி
உடல் போலே உள்ளமும் கறுத்தவன்
பிரியேன் என்றவாக்கைப் பொய்யாக்கிய
கருத்துப் பெருத்த மேகம் போன்றவனைக் கண்டீரோ ?
விண்மீன்கள் நிறை வானம் போல்
பெருங்கூட்டமாய்
தோழன்மார் நடுவிலே வரும் கண்ணனைப்
பிருந்தாவனத்தில் கண்டோமே !

(8)
வெண்சங்கு ஏந்தியவன்
பீதாம்பரம் தரித்தவன்
கருணாமூர்த்தி கண்ணன்
அந்த சக்கரதாரியைக் கண்டீரோ ?
தேனுண்ட வண்டுகள் எங்கும் நிறைந்தாற்போல்
மணமிக்க பூங்குழல்கள்
அவன் பெரும் தோள்களிலே விளையாட
அவனை
பிருந்தாவனத்தில் கண்டோமே !

(9)
உலகங்களைப் படைப்பாய் என
பிரமனைப் படைத்து
குளிர்ந்த பெரிய தாமரையைக் கொண்ட நாபியிலே
வீட்டைப் படைத்து விளையாடும்
விமலன் கண்ணனைக் கண்டீரோ ?
அசுரன் தேனுகனும்
குவலயா பீட யானையும்
கொக்கு வடிவ அசுரன் பகாசுரனும்
உடனே மடியும்படி வேட்டையாடிய பெருமானை
பிருந்தாவனத்தில் கண்டோமே !

(10)
பருத்த கால்களையுடைய யானை கஜேந்திரன்
அவனுக்கு அருள்பாலித்த திருமாலை
இப்புவியிலே பிருந்தாவனமதில் கண்டமை பற்றி
பெரியாழ்வார் திருமகள் கோதை பாடிய
பாசுரங்கள் இவையெல்லாம்
மருந்தெனக்கொண்டு
சிந்தையில் வைத்து வாழ்வார்கள் எல்லோரும்
எம்பெருமானின் பெருமைமிகு திருவடிகளின் கீழ்
பிரியாமல் என்றும் இருப்பரே.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Advertisements
This entry was posted in Nachiyar Thirumozi and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s