நாச்சியார் திருமொழி-13

நாச்சியார் திருமொழி – பதிமூன்றாம் திருமொழி
கண்ணன் உகந்த பொருளை வேண்டுதல்

(1)
தாய்மாரே !
கண்ணன் என்னும் கருந்தெய்வம்
அவனோடு பழகிய காட்சிகளை எண்ணி எண்ணி
தாபம் தகிக்கிறது
நீங்களோ என் நிலைமை புரியாமல்
புண்ணில் புளிச்சாறு பிழிந்தாற் போல்
அவனிடமிருந்து என்னைப் பிரிக்க அறிவுரை கூறுகின்றீர்
பெண்ணின் வலியறியாக் கண்ணனின்
இடையிலே அணிந்திருக்கும் பீதாம்பரத்தை
என் வாட்டம் தணிய
என் மேல் வீசுங்கள்.

(2)
பால் பாயும் பருவமுள்ள ஆலிலையில்
கண் வளர்ந்த பெருமான்
அவன்
வலையிலே நான் சிக்கிக் கிடக்கின்றேன்
இந்நிலையில்
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாற்போல்
உங்களுக்குத் தோன்றினபடியெல்லாம் பேசாமல்
இடையனாய் கோலால் பசுக்களை மேய்த்தவன்
திருக்குடந்தையிலே கண் வளர்ந்து
குடக்கூத்தாடிய பெருமான் கண்ணன்
அவனது அழகிய குளிர்ந்த துளசியை
அடர்ந்து மிருதுவாயுள்ள என் கூந்தலில்
சூட்டுங்கள்.

(3)
கம்சனை வீழ்த்தியவன்
வில்போன்ற புருவம் கொண்ட கண்ணன்
அவன் கடைக்கண் எனும் சிறகையுடைய அம்பால்
என் நெஞ்சமெல்லாம் வெந்து நிலைகுலையச் செய்துவிட்டான்
நொந்து போன என்னிடம்
‘அஞ்சேல்’ என ஒரு வார்த்தை சொல்லவில்லை அவன்
அப்பெருமானின் மார்பிலே சூடிய வன மாலையை
என் மார்பிலே
நெஞ்சத்தணல் நீங்கப் புரட்டுங்கள்.

(4)
ஆயர்பாடிப் பெண்களின் நெஞ்சமெல்லாம் கொள்ளை கொண்டு அனுபவிக்கும்
கரிய காளையான கண்ணன்
என்னைத் துன்புறுத்தி அலைக்கழிக்கிறான்
ஆதலாலே
தளர்வுற்று நைந்த எனக்குத்
தேறுதல் சொல்வார் யாருண்டு ?
[ நாங்கள் இருக்கிறோம் என்று தாய்மார்கள் கூறி
‘உனக்கு என்ன வேண்டும்’ எனக் கேட்கிறார்கள் ]
சுவைக்கச் சுவைக்கத் திகட்டாத அமுதம் கண்ணன்
அவன் திருவாயில் அமுதூறும்.
அந்த வாயமுதம் நான் பருகி களைப்பு நீங்கத்
துணைபுரிவீர்.

(5)
அழுதாலும் தொழுதாலும்
காட்சி தரவில்லை கண்ணன்
போகட்டும்
‘அஞ்சாதே’ என ஒரு வார்த்தை கூட அவன் சொல்லவில்லை
என்னைக் கட்டியணைத்துச் சுற்றிச் சுழல்கின்றான்
ஐயோ !
சோலையின் கீழே
பசுக்களின் பின்னே
குழலூதி வருகிறான் கண்ணன்
ஊதி வரும் அவன் குழலின் துளைவாய் வழியும்
குழலமுதம் கொண்டு
என்முகத்திலே குளிரத் தடவுவீர்.

(6)
காலம் கெட்டுப் போய்
வரைமுறைகள் குலைந்து கிடக்கின்றன
இந்நிலையில்
நந்தகோபன் மகன் எனப் பெயர் பெற்ற
இரக்கமற்ற
சுயநலமியான கண்ணன் பிறந்த பின்னால்
வரம்புகள் முற்றும் அழிந்தன
அவனால் நான் அபலையானேன்
துன்பம் மிக அடைந்து
அசைவதற்கும் சக்தியற்றேன்
போக மறுக்கும் உயிர்கொண்ட
என் உடம்பின் மேல்
போக்கிரிக் கண்ணனின் காலடி மண்கொண்டு பூசுவீர்

(7)
கருடனை வெற்றிக்கொடியாகக் கொண்ட
எம்பெருமானின் ஆணையை மீறி
எதுவும் செய்ய இயலா இந்த உலகத்திலே
அவனைப் பெற்ற அன்னை யசோதை
ஒருவருக்கும் பயனின்றி
அவனை கசக்கும் வேம்பாய் வளர்த்துவிட்டாள்
என் மார்பகங்களோ
அவனை விரும்புவது தவிர வேறு எந்த குற்றமும் செய்யவில்லை
அவன் தோளைப் பிரிந்த குறைதீர
அவற்றை குமரனவன் தோளோடு
இறுக்கக் கட்டி வைப்பீர்.

(8)
உள்ளுக்குள் உருகி நைந்து போகும் என்னை
இவள் இருக்கிறாளா அல்லது இல்லையா
எனக்கூட கேட்பதில்லை
என்னைக் கொள்ளை கொண்டவன்
பெண்களிடம் பொல்லாங்கு செய்பவன்
கோவர்த்தனன்
ஒருவேளை நான் அவனைக் கண்டால்
அடைகின்ற பயனேதுமில்லா இம்மார்பகத்தை
வேரோடு பிடுங்கி
அந்தக் கண்ணனின் மார்பிலே வீசி
என் துன்பத்தைப் போக்கிக் கொள்வேன்.

(9)
கிளர்ந்து பருத்த என்மார்பகங்களின் துன்பம் தீர
கோவிந்தனை இப்பிறவியிலே அணைக்காமல்
இனியொரு பிறவியில் செய்யும் தவத்திலே என்ன பெருமை ?
செம்மையான அவன் திருமார்பிலே
என்னை சேர்ப்பானாகில் நன்று
அல்லது
ஒருநாள் என் முகத்தெதிரே உண்மைசொல்லி
‘நீ எனக்கு வேண்டாம் போ’
என விடை கொடுத்தால்
அது மிகவும் நன்று.

(10)
வில்லைத் தோற்கடிக்கும் புருவங்கள்
வில்லிபுத்தூர் தலைவர் பெரியாழ்வாரின் மகள்
வியத்தகு குணசீலி ஆண்டாள்
ஆயர்பாடியிலே குறும்புகள் பல செய்த பெருமான்
ஆயர்பாடியின் அணிவிளக்கு
அவன் மேல் வேட்கை கொண்டு
காதல் கரை புரள அருளிச் செய்தவை இப்பாசுரங்கள்
இவையனைத்தும் ஓதவல்லார்
துன்பக் கடலில் துவளமாட்டார்.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Advertisements
This entry was posted in Nachiyar Thirumozi and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s