நாச்சியார் திருமொழி-6

நாச்சியார் திருமொழி – ஆறாம் திருமொழி
கனவு கண்டேன் தோழீ

(1)
என் ஆருயிர்த் தோழியே !
நற்குண நாயகன்
நம்பி நாராயணன்
ஆயிரம் யானைகள் சூழ
வலம் வரப் போகிறான்
ஆதலினாலே
நகரமெங்கும் பொன்மயமான
பூர்ணகும்பங்களோடு
தோரணமும் கட்டுவதாக
கனவு கண்டேன் நான்.

(2)
தோழீ !
நாளை எனக்குத் திருமணம் என நிச்சயித்து
பாளைகள் கூடிய பாக்கு மரங்களால் அலங்கரிக்கப்பட்ட
மணப்பந்தலின் கீழே
நரசிம்மன்
மாதவன்
கோவிந்தன் எனப் பெயர்கள் கொண்ட
ஒர் வாலிபன் வருவதாகக்
கனவு கண்டேன் நான்.

(3)
இந்திரன் உள்ளிட்ட தேவர் கூட்டம்
இப்பூமிக்கு வந்திருந்து
மணப்பெண்ணாய் என்னைத் தேர்வு செய்து
இருவீட்டாரும்
எல்லாமும் பேசி முடித்த பின்னால்
எனது நாத்தனார் துர்க்கை
எனக்கு மந்திரக்கோடி உடுத்தி
மணமாலை சூட்ட
கனவு கண்டேன் தோழீ.

(4)
தோழீ !
நான்கு திசைகளினின்றும் தீர்த்தம் பெற்று
நன்றாக என்மேல் தெளித்து
வேதம் நன்கறிந்த பல அந்தணர்கள்
உரத்த குரலிலே வாழ்த்துக்கூறி
பல்வகை மலர்கள் புனைந்த மலர்மாலை அணிந்த
புனிதன் கண்ணனோடு என்னை இணைத்து
கையில் கங்கணம் கட்ட
கனவு கண்டேன் நான்.

(5)
தோழீ !
அழகிய இளம்பெண்கள்
கதிரொளி வீசும் விளக்கினையும்
பொற்கலசங்களையும் கையிலேந்தி
எதிர் வர
வடமதுரை மன்னன் கண்ணன்
மணப்பந்தல் எங்கும் அதிரும்படி எழுந்தருளக்
கனவு கண்டேன் நான்.

(6)
தோழீ !
மத்தளங்கள் ஒலிக்கவும்
வரிகள் நிறைந்த சங்குகள் நெடுநேரம் ஊதவும்
முத்து மாலை வரிசைகள் தாழ்ந்த பந்தலின் கீழே
அத்தான் மதுசூதனன்
என்கரங்களைப் பற்றுவதாக
கனவு கண்டேன் நான்.

(7)
தோழீ !
நன்கு கற்றறிந்த மறையோர்
சிறந்த வேத வாக்கியங்களை ஓத
சடங்குகளுக்குரிய மந்திரங்களைக்கொண்டு
அக்கினியைச் சுற்றிப் பசுமையான நாணலைப் பரப்பி
தீயில் சமித்துக்களையிட
சினம் மிக்க பெரிய யானையின் செருக்குடைய கண்ணன்
என் கையைப் பிடித்துக்கொண்டு
தீயினை வலம் வருவதாகக்
கனவு கண்டேன் நான்.

(8)
தோழீ !
இப்பிறவி மட்டுமல்ல
எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
இவனே நமக்குப் புகலிடம்
நம் இறைவன் நாராயணன்
எல்லையில்லா நற்குணங்கள் நிரம்பியவன்
செம்மையான தன் திருக்கரத்தால்
என் கால் பிடித்து அம்மி மிதிக்கவைப்பதாக
கனவு கண்டேன் நான்.

(9)
தோழீ !
அழகிய வில்போன்ற புருவமும்
ஒளிமிக்க முகமும் கொண்ட என் அண்ணன்மார் வந்து
அக்னியை நன்றாக வளர்த்து
அதன் முன்னே என்னை நிறுத்தி
சிங்க முகன் கண்ணபிரான் கையின்மேல்
என்கையை வைத்து
அக்னியில் பொரிகளைத் தூவுவதாகக்
கனவு கண்டேன் நான்.

(10)
தோழீ !
குங்குமக் குழம்பை
உடம்பெல்லாம் பூசி
குளிர்ந்த சந்தனமும் நன்றாகப்பூசி
யானையின் மேல்
கண்ணனோடு
மணஅலங்காரம் செய்யப்பட்ட வீதியிலே
ஊர்வலம் வந்து
நறுமணம் நிறைந்த நீரால்
எங்கள் இருவரையும் மணநீராட்டுவதாக
கனவு கண்டேன் நான்.

(11)
வேயர் குலத்தவரால் போற்றப்படும்
வில்லிபுத்தூர் தலைவர் பெரியாழ்வார்
அவரின் திருமகள் கோதை
கண்ணனைக் கைப்பிடிக்கும் கனவினைப் பாடும்
தூய தமிழ்ப் பாசுரங்களை ஓத வல்லார்
நற்குணங்கள் அமையப்பெற்ற
நல்ல மக்களைப் பெற்று மகிழ்வார்கள்.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Advertisements
This entry was posted in Nachiyar Thirumozi and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s