நாச்சியார் திருமொழி-5

நாச்சியார் திருமொழி – ஐந்தாம் திருமொழி
குயிலே நீ கூவாய்

(1)
புன்னையும், குருக்கத்தியும்,
கோங்கும், சுரபுன்னை மரங்களும் நிறை சோலையிலே
மரப்பொந்துகளில் வாழும் குயிலே !
உயர்ந்த குணங்கள் எப்போதும் கொண்ட மாதவன்
மாமணி வண்ணன்,
மணிகள் பதித்த மகுட மணிந்த
மிடுக்கு மிக்க அப்பெருமானை
நான் விரும்பினேன்
அதற்காக எனது வளையல்களை
நான் இழப்பது நியாயமா ?
அப்பவளச் செவ்வாயன்
விரைந்து வந்து என்னைச் சேரும்படி
இரவும் பகலும் கூவுவாய் குயிலே !

(2)
தேன் பெருக்கும் செண்பகப் பூக்களிலே
மது அருந்தி
களிப்புடனே இசைபாடும் குயிலே !
சங்கைத் தன் இடக்கையில் ஏந்திய தூயவன்
அவன் திருவுருவம் எனக்குக் காட்டான்
எனது உள்ளம் புகுந்து வருத்தி
நாள்தோறும் என் உயிர்வாட்டி
இந்தக் கூத்தினை ரசிக்கின்றான்
குயிலே !
என் அருகிருந்து
மழலை பேசி
உன் பேடையுடன் களித்திருந்து
என்னை வாட்டாமல்
என் வேங்கடவன் வரக் கூவுவாய்.

(3)
பூக்கள் மலர்ந்திருக்கும் சோலையிலே
புதிய மணம் வீச
அழகிய வண்டின் காமரப் பண் கேட்டு
காதலியுடன் வாழ்கின்ற குயிலே !
மாதலி தேரைச் செலுத்த
மாயாவி இராவணன் மேல்
சரம் சரமாய் அம்பு விட்டு
அறுக்க அறுக்க முளைக்கும்
அவன் தலையைக் கொய்த என் தலைவனை
எத்திக்கிலும் காணேன்
நீலமணி போன்ற மேனி கொண்ட
என்பெருமான் வரும்படிக் கூவுவாய்.

குறிப்பு:
“காமரம்” – ஒரு வகைப் பண்
“மாதலி” – இந்திரசாரதி

(4)
ஓ குயிலே !
என் எலும்புகள் உருகிப் போயின
இணைந்த வேல் போன்ற என் கண்களின் இமைகள்
மூடவே இல்லை
நெடுங்காலமாகவே
பிரிவுத் துயரெனும் பெருங்கடல்தான்
தோணியான வைகுண்டநாதனை
அடையவே முடியாமல்
அத்துயர்க் கடலில் உழல்கின்றேன்
காதலர்ப் பிரிவின் துயர் நீ அறிவாய்தானே
பொன்மேனியனாய்
கருடக் கொடியுடைய புண்ணியன் கண்ணன்
அவன் இங்கே வரும்படிக் கூவுவாய்.

(5)
மெல்ல நடைபயிலும் அன்னங்கள்
நாற்புறமும் பரவி விளையாடும் வில்லிபுத்தூர்
அங்கே எம்பெருமானின் பொன்னடிகளைக் காண ஆசை
அந்த ஆசையினால்
சண்டையிடும் கெண்டைகள் போலிருக்கும்
என் கண்கள் உறங்கவே இல்லை
ஓ குயிலே !
உலகளந்த அந்த பெருமான்
இங்கே வரும்படிக் கூவு.
அப்படி நீ கூவினால்
சுவையான சோறும் பாலும் ஊட்டி வளர்த்த
என் கோலக்கிளியை
உன்னுடன் தோழமை கொள்ளச் செய்வேன்.

(6)
கொத்துக் கொத்தாகப் பூக்கள் மலரும் சோலையிலே
அழகியதோர் இடந்தன்னில் உறங்கும் இளங்குயிலே !
எல்லாத் திசைகளிலும்
தேவர்கள் வணங்கிப் போற்றும்
பார்ப்பவர்கள் புலன்களைக் கொள்ளை கொள்ளும்
எம் பெருமான்
எனக்குக் காட்சி தராமல் முறுக்குகிறான்
அதனாலே
என் முத்துப் போன்ற வெளுத்த சிரிப்பும் சிவந்த உதடுகளும்
மார்பகங்களும் அழகழிந்தன.
நான் உயிர் வாழ்வதே அவனுக்காகத்தான்
அப்பெருமானை இங்கே வரும்படி நீ கூவினால்
காலமெல்லாம் என் தலை உன் காலடிகளில்
இதைத் தவிர வேறு கைம்மாறு நானறியேன்.

(7)
அழகிய குயிலே
அலை பொங்கும் பாற்கடலில்
பள்ளி கொண்ட பெருமானை
அணைக்க ஆசை கொண்டு
என் மார்பகங்கள் பொங்கிப் பூரித்து
குதூகலம் மிகக் கொண்டு
என் உயிரை வாடுகின்றன
குயிலே !
( நிழலில் ) நீ மறைந்திருந்து என்ன பயன் ?
தன் திருக்கைகளிலே
சங்கும்,சக்கரமும்,கதையும் தாங்கிய எம்பெருமான்
இங்கே வரும்படி நீ கூவினால்
உனக்கு மிகுந்த புண்ணியம் உண்டு.

(8)
சுவையான கனிகள் நிறைந்த மாந்தோப்பிலே
சிவந்த தளிர்களைக் கொத்தும் சிறுகுயிலே !
தன் வில்லை வளைத்து இழுக்கும்
பலமிக்க பெரிய கைகளை உடையவன்
நல்ல திறமைசாலி
அன்பே உருவானவன்
நானும் அவனும் ரகசியமாய்ச் செய்துகொண்ட ஒப்பந்தம் ஒன்று உண்டு
அதை நானும் அவனுமே அறிவோம்.
குயிலே !
நீ அவனிடம் விரைந்து செல்
இங்கு வரும்படிக் கூவு
பிறகு பார்
என்னிடம் அவன்படும் பாட்டை !

(9)
ஒளிமிக்க வண்டுகள் இசைபாடும் சோலையிலே
களித்திருக்கும் குயிலெ !
நான் சொல்லப் போவதை
நீ கவனமாகக் கேள்.
பச்சைக்கிளி நிறத்தவன் சீதரன்
அவன் வலையிலே
சிக்கிக் கிடக்கின்றேன்
இந்தச் சோலையிலே
நீ வாழ வேண்டுமெனில்
சங்கும் சக்கரமும் ஏந்திய எம்பெருமான்
இங்கே வரும்படிக் கூவு
அல்லது
நான் இழந்த என் பொன்வளையல்களைக் கொடு
இதில் ஏதாவதொன்றை நீ செய்து தீரத்தான் வேண்டும்.

(10)
அன்று ─
மூவுலகங்களையும் அளந்த
எப்பெருமான் மேல் நான் ஆசை கொள்ள
அவனோ
என்னை வஞ்சித்தான்
அந்த நேரத்திலே
தென்றலும் நிலவும் வேறு உட்புகுந்து
என்னைத் துன்புறுத்துகின்றன
இது என்ன நியாயம் ?
எந்நாளும் இச்சோலையிலே இருந்துகொண்டு
நீயும் என்னை துன்புறுத்தாதே.
இன்று இங்கு
நாராயணன் வரும்படிக் கூவாயேல்
இங்கிருந்து உன்னை நான் துரத்திவிடுவேன்.

(11)
பண்களால் சிறந்த நான்குவேதங்கள் ஓதும் மறையோர்
அம்மறையோர் வாழ்கின்ற வில்லிபுத்தூர் தலைவர் பெரியாழ்வார்
அவர் மகள் ஆண்டாள்
அவளுக்கு வேல்போன்ற கண்கள்
பெண்மையின் நற்குணங்கள்
அவள்
நெடுக வளர்ந்து மூவுலகும் அளந்த
மிடுக்கான பெருமானை விரும்பி
கருங்குயிலை நோக்கி
“கடல்வண்ணனான என் காதலன்
வரும்படிக் கூவுவாய்” எனப் பாடினாள்
இப்பாசுரங்களை ஓதவல்லார்
பல்லாண்டும் பரமனைச் சூழ்ந்திருந்து
“ நமோ நாராயணாய “ என்பர்.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Advertisements
This entry was posted in Nachiyar Thirumozi and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s