நாச்சியார் திருமொழி-3

நாச்சியார் திருமொழி – மூன்றாம் திருமொழி
கன்னியர் ஆடைகளை வேண்டுதல்

(1)
பாம்பணைமேல் பள்ளிகொண்டவனே !
கோழி கூவுமுன்னே
ஆழ்ந்து நீராட வந்தோம்
சூரியன் உதித்துவிட்டான்
உன் எண்ணம் பலிக்கவில்லை
எங்கள் ஆடைகள் எங்கே ?
ஆடையின்றி அவதியுற்றோம்
இனி
ஒரு நாளும்
குளத்திற்கு வாரோம்
எனது தோழியும்
நானும்
உன்னைத் தொழுகின்றோம்
ஆடைகளைக் கொடுத்தருள்வாய்.

(2)
ஐயோ !
என்ன நடக்கிறது இங்கே ?
இந்தக் குளத்திற்கு
எவ்வழியாய் வந்தாய் நீ ?
தேன் துளிர்க்கும்
துளசிமாலை அணிந்தவனே !.
மாயனே !
எங்கள் அமுதே !
உன்னோடு இப்போதைக்கு இணைய விதியில்லை
அவசரப்படாதே
நாகத்தின் உச்சிமீது நடன மாடியவனே
குருந்த மரத்தில் கிடக்கும்
எங்கள் ஆடைகளைக் கொடுத்தருள்வாய் !

(3)
வில்லாலே இலங்கையை அழித்தவனே !
என்னே இந்த சிறுபிள்ளைத்தனம்
எங்கள் அன்னையர்
இப்படி எங்களைக் கண்டால்
வீட்டில் சேர்க்கமாட்டார்
இந்த நிர்வாணம்
பொல்லாதது என்று நீ நினைக்கவில்லை
பூக்கள் நிறைந்த
குருந்த மரத்தில் அமர்ந்திருப்பவனே !
நீ விரும்பிய யாவையும் தருகிறோம்
யாரும் காணாதபடி போய்விடுவோம்
எங்கள் பட்டாடைகளைக் கொடுத்தருள்வாய் !

(4)
இலங்கையை அழித்த பிரானே !
பலர் அமிழ்ந்து நீராடும்
இப்பொய்கைக் கரையினிலே
அடக்க நினைப்பினும்
அடங்காமல் பெருகும்
எங்கள் கன்ணீரைப் பார் !
இரக்கமற்றவனே !
நாங்கள் அறிந்துகொண்டோம்
நீ மரமேற வல்லவன் என்று
குருந்த மரத்தின்மேல் கிடக்கும்
எங்கள் ஆடைகளைத் தந்தருள்வாய்.

(5)
கருமை நிறக்கண்ணா !
கெண்டை மீன்களும்
வாளை மீன்களும்
எங்கள் கால்களைக் கடிக்கின்றன.
வேல்தாங்கிய எங்கள் அண்ணன்மார்கள்
உன்னைத் துரத்துவாரேல்
உன் விளையாட்டெல்லாம்
வினையாய் முடியும்
அழகிய எங்கள் சிற்றாடைகளை
அணிந்து கொண்டு
மரத்தில் ஏறாமல்
குருந்த மரத்தின் மேல் கிடக்கும்
(எங்களது) மற்ற ஆடைகளைக் கொடுத்தருள்வாய்.

(6)
அகன்ற தாமரைகள் பூத்த தடாகம்
அதிலே உள்ள தாமரைத்தண்டுகள்
விஷத்தேள் கொட்டினாற்போல்
எங்கள் கால்களைத் துன்புறுத்துகின்றன.
குடங்களைத் தூக்கி உயரே எறிந்து
குடக் கூத்து ஆட வல்லானே !
எங்கள் தலைவனே !
உன் தீம்பான விளையாட்டைவிடுத்து
எங்கள் பட்டாடைகளைத் தந்தருள்வாய்.

(7)
பிரளய காலத்தில்
உலகைக் காத்தவனே !
இனி மேலும் காக்கும் வழி உணர்ந்தவனே !
நீரில் நீண்ட நேரம் நின்று துன்பமுற்றோம்
செய்யத் தகாத செயல்களைச் செய்கிறாய்
ஊரில் சென்று முறையிடலாமென்றாலோ
எங்கள் ஊரும், வீடுகளும், வெகுதூரம்
உன்னிடம் பேரன்பு கொண்டவர்கள் நாங்கள்
ஆனாலும்
உன் லீலைகளுக்கெல்லாம் நாங்கள் உடன்பட
எங்கள் அன்னையர் ஒரு போதும் விரும்பமாட்டார்
ஆடைகளை எட்டும்படித் தந்தருள்வாய் !
பூத்துக் குலுங்கும் குருந்த மரத்திலேறி
தீமைகள் செய்யாதே.

(8)
மாமிமார் மக்களே யல்லோம்
முன்னிரவில் தீம்புகள் செய்து
பின்னிரவில் மலர் போன்ற கண்கள் மூடித்
துயில்பவனே !
இக்குளக்கரையினிலே
உனக்குத் தேவியராவோர் மட்டுமில்லை
எங்கள் அன்னையரும் உள்ளார்கள்.
உனது தீம்பான விளையாட்டு
நல்லதில்லை.
நாங்கள் உண்மையைச் சொல்லுகிறோம்
இடையர்களின் இளங்கொழுந்தே !
எங்கள் ஆடைகளைக் கொடுத்தருள்வாய்.

(9)
கம்சன் விரித்த வலையினின்று
நள்ளிரவிலே தப்பித்து
இளம்பெண்கள் எங்களை
துன்புறுத்தவே பிறவி எடுத்துள்ளாய்
யசோதையோ
நீ அஞ்சும்படி உன்னை அதட்டுவதில்லை
உன்னைத் தீம்பு செய்ய விட்டுவிட்டு
உவப்படைகிறாள் அவள்.
வஞ்சகப் பேய் பூதகியின்
மார்பினிலே பாலுண்ட
வெட்கமற்றவனே !
எங்கள் சேலைகளைத் தந்தருள்வாய்.

(10)
எங்கள் நம்பி
கருமை நிறக்கண்ணன்
ஆயர் சிறுமியரோடு ஆடிய
தீராத விளையாட்டை
தங்க மய மாடங்கள் சூழ்
வில்லிபுத்தூரின் தலைவர் பெரியாழ்வார்
அவரின் திருமகள் ஆண்டாள்
இனிய இசையோடமைத்த
இப்பாட்டுக்கள் பத்தும் கற்கவல்லோர்
பரமபதம் சேர்ந்து
திருமாலோடு கூடி என்றும் வாழ்ந்திருப்பர்.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Advertisements
This entry was posted in Nachiyar Thirumozi and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s