நாச்சியார் திருமொழி-2

நாச்சியார் திருமொழி – இரண்டாம் திருமொழி
சிறு வீடுகளைச் சிதைக்காதே கண்ணா

(1)
நாராயணா !
ஞானியர் ஆயிரம் பெயர்களால் உன்னை ஆராதிக்கின்றனர்
சக்ரவர்த்தித் திருமகனே !
எங்கள் மாமியான யசோதையின் மகன் நீ
இந்த உறவு முறை கொண்டு
நீ தொல்லை தந்தால்
நாங்கள் தப்பவா முடியும் ?
மன்மதன் வரும் காலமென்று
பங்குனி மாதத்திலே
அவன் வரும் வழியை அலங்கரித்தோம்
தீம்புகளைச் செய்பவனாய்
திருமகளின் திருமார்பில் உள்ளவனே !
எங்கள் சிறு வீடுகளைச் சிதைக்காதே.

(2)
இன்றைக்கெல்லாம்
முதுகு வலியெடுக்க
நாங்கள் நிலையாக இருந்து வடித்த
இச்சிறு வீட்டை
உன் கண்களை அகல விரித்து
நன்றாகப் பார்த்து
எங்கள் ஆசையைத் தணிப்பாய் கண்ணா !
பிரளய காலத்திலே
ஆலிலை மேல் துயின்ற
எம் ஆதி பிரானே !
எக்காலத்திலும் உனக்கு
எங்கள் மேல் இரக்கமே இல்லை
இது நாங்கள் செய்த பாவமே போலும்.

(3)
ஆழமிகு கடலிலே கண்வளர்ந்து
மிடுக்கான ஆண்சிங்கமாய்
மதங்கொண்ட யானையின்
துயர் போக்கியவனே !
துயர் தீர்க்கும் உன்மேல்
ஆசைப்படும் எங்களை
கடைக்கண்ணால் நோக்கி வருத்தாதே !
நாங்களெல்லாம்
வண்டலின் பொடி மணலை
வளைக்கரத்தால் புடைத்து மிகவும் நொந்தோம்.
தெளிந்த அலைகள் மிகு
திருப்பாற்கடலில் பள்ளிகொண்டவனே
எங்கள் சிறு வீடுகளைச் சிதைக்காதே !

(4)
கருமேக வண்ணா !
உன் பேச்சும் செய்கையும்
எங்களைப் பித்தேற்றி
புத்தி தடுமாற வைக்கிறது
இதற்கெல்லாம் காரணம்
மாய மந்திரம் புரியும் உன் முகமோ !
அது என்ன மாய மந்திரப் பொடியோ !
இச்சிறுமியர் அற்பமானவரென
நீ சொல்வாயோ என அஞ்சி
உன் மனம் புண்படப் பேசமாட்டோம்
செந்தாமரைக் கண்ணா !
எங்கள் சிறு வீடுகளைச் சிதைக்காதே !

(5)
கள்ள மாதவா !
கேசவா !
வெள்ளை நுண்மணலால்
பார்க்கும் அனைவரும் வியக்க
நாங்கள் இழைத்த சிறு வீடுகளை
நீ அழித்தாலும்
எங்கள் உள்ளம் உடைந்து
உருகுவோமே தவிர
உன் மேல் கோபப்படோம்
உன் முகத்தில் உள்ளவை
கண்கள்தானே ?

(6)
கடலில் அணைகட்டி
அரக்கர்களை அழித்து
இலங்கையை
யுத்த பூமியாக்கிய வீரனே !
முற்றாத இளம்பிள்ளைகள் நாங்கள்
மார்பகங்கள் கிளர்ந்தெழா எங்களை
நாள்தோறும்
சிற்றில் சிதைப்பதாகச் சொல்லி
நீ செய்யும் செயல்களுக்கெல்லாம்
ஒரு அர்த்தமுண்டு போலும்
காமக்கலையைக் கற்கவில்லை நாங்கள்
புரியவில்லை உன் செயல்களுக்கு அர்த்தம்
துன்புறுத்தாதே எங்களை.

(7)
கடலில் அணை கட்டியவனே !
உன் பேச்சுக்களின் உட்பொருள் உணர்ந்தோரிடம்
நீ பேசினாலல்லவோ மிகவும் இனிமை
அதைவிட்டு
உட்கருத்து உணரா சிறுமிகளை
ஏன் வருத்துகிறாய் ?
நீல வண்ணக் கண்ணா !
உன் மனைவிகள் மேல் ஆணை
எங்கள் சிறு வீடுகளைச் சிதைக்காதே !

(8)
சுடர்கின்ற சக்கரம் ஏந்தியவனே !
கடல் வண்ணா !
வட்ட வாயுடைய பானையிலே மணல்
சிறு முறத்தால் அதைப் புடைத்து
நுண்மணல் எடுத்து
சிறு வீடு கட்டி
நாங்கள் விரும்பி விளையாடும்
அந்த வீடுகளை ஏன் சிதைக்கிறாய் ?
அதனால் உனக்கென்ன பயன் ?
கையால் தொட்டு
காலால் உதைத்து வருத்தாதே.
உள்ளம் கசந்து போனால்
வெல்லம் ருசிக்குமாமோ ! கண்ணா !

(9)
கோவிந்தா !
மண்ணுலகும்
விண்ணுலகும் அளந்தவனே !
எங்கள் முற்றத்திலே நுழைந்து
உன் முகம் காட்டி
புன்முறுவல் பூத்து
எங்கள் சிறு வீடுகளையும்
சிந்தையையும்
அழிப்பாயோ
எங்களை வலிந்து பற்றி
நீ அணைத்தாயேல்
அருகிலிருந்து அதைப் பார்ப்போர்
தூற்றுவாரன்றோ ?

(10)
சீதையின் இதழமுதம் சுவைத்தவனே !
சிற்றிலைச் சிதைக்காதே
என
வீதியிலே விளையாடும்
இடைச் சிறுமிகளின் மென் சொல்லை
உள்ளடக்கி
வேதம் ஓதுவோர்
வைதிகத் தொழில் புரிவோர் வாழ்
வில்லிபுத்தூர் தலைவர் பெரியாழ்வார்
அவரின் திருமகள் ஆண்டாளின்
இத் தமிழ்ப் பாசுரங்களை ஓதுவோர்
குறையேதுமின்றி பரமபதம் அடைவரே.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Advertisements
This entry was posted in Nachiyar Thirumozi and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s