நாச்சியார் திருமொழி-1

முன்னுரை

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் ஸ்ரீஆண்டாளின் “ நாச்சியார் திருமொழி “ அளவியல் சந்தத்தில் அமைந்த அற்புதமான பாடல்களைக் கொண்டது. “உலக இலக்கியத்தில் வேறு எந்த மொழியிலும் நாச்சியார் திருமொழி கவிதைகளில் இளம்பெண்ணான ஆண்டாள் காட்டும் உணர்வுகள்,எண்ணங்கள், சொல்லாட்சி, அழகான வரிகள் போல் கவிதைகள் இருப்பதாகத் தெரியவில்லை” என ‘ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்’ என்னும் நூலில் காலஞ்சென்ற சுஜாதா அவர்கள் கூறுகின்றார்.

திருப்பாவையின் முப்பது பாசுரங்களும் நாச்சியார் திருமொழியும் கண்ணன் மேல் ஆண்டாள் கொண்ட காதலையும், ஆற்றாமையாலெழுந்த அவள் உள்ளத்து வேட்கையையும் வெளிப்படுத்துவன. இவ்விரண்டு படைப்புகளும் இறைவன் பால் தெளிவான பக்தி நெறிகொண்ட ஆண்டாளின் காதல் போராட்டத்தையும் கண்ணனின் கல்யாண குணங்களையும் கூறுவன.

நாச்சியார் திருமொழியின் 143 கவிதைகளும் அனைவரும் அனுபவிக்கும்படி எளிய தமிழில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.

நாச்சியார் திருமொழி – ஒன்றாம் திருமொழி
கண்ணனைச் சேர மன்மதனைத் தொழுதல்

(1)
காம தேவனே !
தை மாதம் முழுவதிலும்
நீ வரும் இடத்தை அழகுபடுத்தி
அழகான கோலமிட்டு
மாசி மாத ஆரம்பத்திலே
உன் கால்களை உறுத்தாத பொடி மணல் கொண்டு
நீ வரும் தெருவை அலங்கரித்து
நான் உய்வு பெற வேண்டி
உன்னையும்
உன் தம்பி சாமனையும் தொழுதேன்
கொடிய நெருப்புப் பொறிகள் சிதறும் சக்கரத்தை
தன் திருக்கையில் ஏந்திய வேங்கடவன்
அவனோடு என்னைச் சேர்த்துவிடு.
நான் தனிமையில் சேவை செய்ய அருள்வாயாக.

(2)
காம தேவனே !
நுண்ணிய வெள்ளை மணல் கொண்டு
நீ வரும் பாதையை அலங்கரித்து
விடியுமுன்னே
நீர்த்துறைகளிலே நீராடி
முள்ளில்லா சுள்ளிகளைத் தீயிலிட்டு
முயற்சியுடன் உன்னை நோற்கின்றேன்.
தேனொழுகும் உன் மலரம்புகளைத் தொடுத்து
கடல் வண்ணன் எனும் பெயரை
உன் நெஞ்சில் எழுதி
கொக்கின் வாய் பிளந்த பெருமானிடம்
என்னைக் கொண்டுசேர்ப்பாயா ?

(3)
மன்மதா !
நல்ல ஊமத்தம் பூக்களாலும்
முருக்க மலர்களாலும்
முப்பொழுதும் உன் தாள் பணிந்தும்
பயனேதுமில்லையென
நெஞ்சம் எரிய
உன்னை நான் வையாதபடி
கொத்துக் கொத்தாக
உன் மலரம்புகளைத் தொடுத்து
கோவிந்தா என நெஞ்சமுருகி
வியத்தகு வேங்கடவன் விளக்கினிலே
என்னைச் சேர்த்துவிடு.

(4)
பழையவனே
காமதேவா !
சுவரிலே உன் பெயர்களை வரைந்துள்ளேன்
சுறாமீன் வரையப்பட்ட கொடிகள்
குதிரைகள்
சாமரம் வீசும் பெண்கள்
கரும்பு வில்
இவையெல்லாம் உனக்கே தந்தேன்.
சிறுவயது முதலே
கண்ணனை எண்ணிக் கிளர்ந்த
என் பருத்த மார்பகங்கள்
துவாரகைத் தலைவன் கண்ணனுக்கே எனவேண்டி
உன்னை வணங்கினேன்.
என் மார்பகங்கள் வாடுமுன்னே
அவனுடன் என்னைச் சேர்த்துவிடு.

(5)
சொர்க்கத்தில் வாழும்
வானவரின் அருள் வேண்டி
அந்தணர் செய்யும் யாகத்திலே
வானவர்க்கு அர்ப்பணித்த புனிதமான அவிர்ப்பாகத்தை
காட்டிலே திரியும் ஓர் நரி புகுந்து
தனதாக்கி முகர்வதைப்போல்
தன் திருமேனியிலே
சங்கும் சக்கரமும் கொண்ட
புருஷோத்தமனுக்கென்றே
கிளர்ந்தெழும்
என் பெருத்த மார்பகங்கள்
மானிடர்க்கென்று பேச்சுவரின்
வாழமாட்டேன் மன்மதனே.

(6)
காமதேவா !
அழகிய வடிவினர்
இளையோர்
ஒழுக்கசீலர்கள்
காமக்கலையைக் கசடறக் கற்றவர்
இவர்களையெல்லாம் முன்னிறுத்தி
நீ வரும் பாதையிலே
நாள்தோறும் எதிர் வந்து
பங்குனித் திருநாளில்
உன்னை
நல்ல தெளிவுடனே நோற்கின்றேன்
சூல் கொண்ட மேக வண்ணன்
காயாம் பூ வண்ணன்
காக்கணம் பூ வண்ணன்
செந்தாமரை வண்ணன்
அவன் திருமுகத்தின்
திருக்கண்களாலே
என்னை ஆட்கொண்டு அருளச் செய்வாய்.

(7)
மன்மதா !
பசும்நெல், கரும்பு படைத்து
மேலும் வெல்லக்கட்டி
பச்சரிசி அவல் சேர்த்து சமைத்து
குரல் வளமிக்க காமக்கலை வல்லாரின்
மந்திரத்தால்
உன்னை வணங்குகிறேன்
மூவுலகங்களையும்
தன் திருவடிகளால் அளந்த திரிவிக்கிரமன்
அவன் திருக்கைகளாலே
என்னைத் தீண்டச் செய்து
அந்தத் தீண்டலினால்
ஒளி படைத்த என் வயிறும்
பெருத்த மென்மையான என் மார்பகங்களும்
தரணியிலே நிலைத்த புகழ் பெறச் செய்வாயாக.

(8)
ஒளியும்
மிடுக்கும் கொண்ட
என் தெய்வமே
காமதேவா !
அழுக்குப் படிந்த உடம்போடு
கூந்தலை விரித்துப் போட்டு
உதடுகள் வெளுத்தும்
ஒரே வேளை உண்டும்
நான் நோற்கின்ற நோன்பை
நீ எப்பொழுதும் நினைவில் கொள்வாய்
நான் சொல்வது ஒன்று உண்டு
என் பெண்தன்மை முதன்மை பெறும்படி
அரக்கன் கேசியை அழித்த கேசவ நம்பியின்
“ கால்களைப் பிடிப்பவள் இவள் “ என்கிற
பெரும் பேற்றினை எனக்கு அருள்வாய்.

(9)
முப்பொழுதும்
உன்னை மனத்தாலே வணங்கி
உன் திருவடிகளிலே
தூய மலர் தூவி துதிக்கின்றேன்.
பூமி சூழ் கடல் வண்ணனுக்கு
குற்றமின்றிப் பணிசெய்து
நான் வாழ வேண்டும்
அல்லாமல்
அழுது அழுது
தடுமாறி
‘ அம்மா ‘ என்றழைத்து
நான் திரிவேனாகில்
அந்தப் பாவமெல்லாம் உன்னைத்தான் சேரும்
உன்னை வணங்கிய எனக்கு நீ உதவாவிடில்
உழுது களைத்த ஓர் எருதை
நுகத்தடியால் தள்ளி
தீனியின்றித் தவிக்க விடுவதற்கொப்பாகும் உன் செய்கை.

(10)
கரும்பு வில்லும்
மலரம்புகளும் பூண்ட
காம தேவா !
உன் பாதங்கள் பணிந்தேன்
கம்சனின் மாளிகை வாயிலிலே
யானையின் தந்தங்களை முறித்தவன்
கொக்கு வடிவ அரக்கன் பகாசுரனின்
வாயைக் கிழித்தவன்
அந்த நீல மணி போன்ற வடிவழகனுடன்
என்னைச் சேர்த்துவிடு
மாட மாளிகைகள் சூழ் வில்லிபுத்தூர்
அதன் முதல்வர் விஷ்ணுசித்தனின் மகள் கோதை நான்
என் விருப்பத்தால் வெளிப்பட்ட
இந்தத் தமிழ்ப் பாமாலைகளைப் பாடவல்லார்
பரமபத நாதனின் திருவடிகள் சேர்வரே.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Advertisements
This entry was posted in Nachiyar Thirumozi and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s