திருப்பாவை…தொடர்ச்சி

490
ஆடைகளும்
நீரும் உணவும்
அள்ளிக் கொடுப்பவனே,
எங்கள் தலைவனே
நந்த கோபாலா!
பள்ளியெழுவாய்!
ஆயர் பெண்களின்
கொழுந்தே!
குலவிளக்கே!
எங்கள் இறைவியே!
யசோதா
எழுந்திரு
விண்ணைத்துளைத்து
உலகங்களை அளந்த
தேவர் தலைவனே
கண்ணா!
உறங்காது எழுந்திரு!
செம்பொன் கழலணிந்த
திருவடிகளையுடைய
செல்வனே!
பலதேவா!
தம்பியும் நீயும்
இனியும் உறங்காமல்
எழுந்தருள வேண்டும்.

491
மதநீர் ஒழுகுகின்ற
யானைகளைச்செலுத்தும்
புறமுதுகுகாட்டாத
தோள் வலிமை பெற்ற
நந்தகோபன்
மருமகளே!
நப்பின்னையே!
மணம் வீசும் கூந்தலைக் கொண்டவளே
வந்து
வாயிற்கதவைத்திற;
ஊர்க்கோழிகள்
கூவுகின்றன
குருக்கத்தி மலர்ப்பந்தலில்
குயிலினங்கள் ஓயாமல்
கூவுகின்றன
விரல்களால்
பந்தினைப் பற்றியவளே!
உன் கணவன்
கண்ணன் புகழ்பாட
உன் செந்தாமரைக்கைகளில்
கழலாத வளைகள் ஒலிக்க
நடந்து வந்து
கதவைத்திறப்பாயாக.

492
குத்துவிளக்கு எரிய
தந்தக்கால் கட்டிலிலே
மெத்தென்ற பஞ்சணையில்
கொத்துமலர்சூடிய
நப்பின்னையின் மார்பகத்தில் சாய்ந்துறங்கும்
மலர்மார்பனே!
வாய்திறந்து
ஒருவார்த்தை சொல்வாய்
மையிட்டு விரிந்த
நயனங்களைக் கொண்ட
நப்பின்னையே!
உன் மணாளனை
நீ எத்தனை நேரமானாலும்
துயில் நீங்கி
எழுந்து வரவிட மாட்டாயா?
கணநேரம் கூட
அவன் பிரிவை நீ தாங்கவொண்ணாய்
இது உனக்கு பெருமையுமில்லை
உன் இயல்புக்கு
பொருத்தமுமில்லை.

493
முப்பத்து முக்கோடி தேவர்களுக்குத்
துன்பம் நேர்கையில்
அவர்களுக்கு முன் சென்று
பகை நீக்கி
தேவர்களின் நடுக்கத்தைத் தீர்ப்பவனே!
எழுந்திரு!
நேர்மையானவனே!
பகைவர்களை
அழிப்பவனே!
குறையற்றவனே!
எழுந்திரு!
செப்புக்குடமன்ன
மென் மார்பகங்களும்
சிவந்த வாயும்
சிறுத்த இடையும் கொண்ட
நப்பின்னை நங்காய்!
திருமகளே!
துயில் எழுவாயாக!
விசிறியும்
கண்ணாடியும் தந்து
உன் மணாளனையும்
எங்களுடன் நீராட
அனுப்புவாயாக.

494
கறக்கக் கொணர்ந்த
பாற்குடங்களில்
பால்நிரம்பி வழிய
மேலும் மேலும்
பால் சுரந்து வழியும்
பருத்த பசுக்களின்
அதிபதியாம்
நந்தகோபனின் மகனே!
கண்ணா!
நாங்கள் வந்ததை அறிவாய்!
(வேதங்களால்) அழியா நிலை பெற்றவனே!
பெரியவனே!
உலகோர் காணும்படியான
ஒளிச்சுடரே!
துயில் நீங்கி எழுவாய்
பகைவர்கள்
உன் வலிமை கண்டு
நிலை குலைந்து
உன்னடி பணிந்ததைப்போல் –
நாங்களும்
உன் பெருமைகளைப்பாட
வந்துள்ளோம்.

495
அழகிய பெரிய உலகத்தின் அரசர்கள்
தம் செருக்கழிந்து
கூட்டம் கூட்டமாய்
உன் கட்டிலின் கீழ் உட்கார்ந்துள்ளனர்.
அவர்களைப் போல்
நாங்களும்
நின்னைச் சரணடைந்தோம்
கட்டிலின் கிண்கிணிவாய்
மெள்ள மொட்டவிழும் தாமரை போல்
சிவந்த நின் கண்களால்
எங்களைக் கனிவாய்க்
காணாயோ?
சந்திரசூரியர்
ஒருங்கே உதித்தாற்போல்
உன்னிரு திருக்கண்களால்
எங்களை நீ நோக்க
எமது சாபங்களும்
பாவங்களும் நீங்கி
நாங்கள் நலமுறுவோம்.

496
மழைக்காலம்,
மலைக்குகை,
பேடையோடு கூடி
காலம் மறந்ததூக்கத்திலிருந்த சிங்கம்
உணர்வு பெற்று
கண்களில் தீப்பொறி பறக்க விழித்து,
மணமிக்க பிடரி சிலிர்க்கிறது.
சோம்பல் முறித்து,
நிமிர்ந்து கர்ஜித்து,
புறப்படுகிறது
நீலோத்பல மலரின் நிறத்தவனே
கண்ணா!
குகைவெளிப்பட்ட
சிங்கம்போல்
உன் பள்ளியறையிலிருந்து புறப்பட்டு
மணிமண்டபம் வந்து
சீரிய சிம்மாசனத்திலிருந்து
நாங்கள் உன்னை நாடிவந்தது
ஏன் எனக்கேட்டு
அருள்செய்வாயாக.

497
அன்று
இவ்வுலகம் அளந்தவனே
உன் திருவடிகள் போற்றி!
தென்னிலங்கை சென்று
வென்றவனே
உன் வீரம் போற்ற்¢!
சக்கர அசுரனை அழித்தவனே
உன் புகழ் போற்றி!
கன்றுவடிவ அசுரனைத்
தடியாய்க்கொண்டு
விளாமரமாய் நின்ற
அரக்கனைக் கொன்று
இருவரையும் அழித்த
உன் வீரத்திருவடிகள் போற்றி
கோவர்த்தனக்குன்றைக் குடையாய்ப் பிடித்தவனே
உன் அருட்குணம் போற்றி!
பகைவர்களை அழிக்கும்
உன் கைவேல் போற்றி!
உன் வீரதீரம் பாடி
இன்று வந்துள்ளோம்
இரங்கி
அருள்புரிவாய்.

498
ஓர் ஒப்பற்ற இரவில்
தேவகியின் மகனாய்ப்பிறந்து
அதே இரவில்
யசோதையின் மகனாய்
கம்சனுக்காக
ஒளிந்து வளர்ந்தாய்
நீ வளரப் பொறுக்காத
கம்சனின் வயிற்றில்
பயநெருப்பை வளர்த்த
நெடுமாலே!
உன்னை வேண்டி வந்துள்ளோம்;
நீ பலனைத் தந்தால்
உன் செல்வத்தையும்
வீரத்தையும்
பாடுவோம்
எங்கள் வருத்தமும் தீரும்
மகிழ்ச்சியும் பெருகும்.

499
மயக்கம் தரும் கண்ணா!
மணிவண்ணா!
மார்கழி நீராட
முன்னோர்கள் முறைப்படி –
உலகங்கள் நடுங்க ஒலியெழுப்பும்
உன் பால்வண்ண பாஞ்சசன்னியம் போல்
வெண்சங்குகளும்
பேரொலியெழுப்பும்
பறைகளும்,
பல்லாண்டுபாடுவோரும்,
வேண்டும்.
கோல விளக்கும்,
கொடியும்,
விதானமும் வேண்டும்.
ஆலிலையில்
துயின்றவனே
இவையெல்லாம்
அருள்வாயாக.

500
பகைவரை வெல்லும் கோவிந்தனே!
உன் புகழ்பாடி அருள் பெற்று
சன்மானங்கள் பெறுவோம்
உலகத்தார் அது கண்டு பாராட்டி அவர்களும் பரிசளிப்பர்
கைகளில் வளை அணிவோம்
தோளில் நகையும்
காதுகளில் தோடும், செவிப்பூவும் அணிவோம்
கால்களில்
பாடகச்சிலம்பணிந்து
புத்தாடைகளும் அணிவோம்,
பின்னர்
பால்பொங்கல் பொங்கி
நெய்யில் அதை மறைத்து
முழங்கை வழி நெய்வழிய
கூடி உண்போம்.

501
குறை ஒன்றுமில்லாத கோவிந்தனே!
கறவை மாடுகள் மேய்த்து
கானகத்தில் உணவு உண்போம்
சூது ஏதுமறியா இடைக்குலத்தோர் நாங்கள்
ஆனாலும் என்ன
நீ எங்களில் ஒருவனாகப் பிறந்தது
நாங்கள் அடைந்த பேறு
உன்னோடு எங்கள் தொடர்பு
ஒழிக்க இயலாது
நாங்கள் அறியாப் பெண்டிர்
அன்பினால் உன்னைப் பேர்சொல்லி
அழைத்திருப்போம்
கோபித்துச் சீறாமல்
அருள் செய்வாய்.

502
கோவிந்தா!
அதிகாலையில் உன்னை வணங்கி
பொன்னான உன் திருவடிகள் போற்றி
நாங்கள் கேட்பதெல்லாம் இதுதான் –
இடையர்குலத்தோன்றலே
எங்கள் சிறுதொண்டுகளை
ஏற்று அருள்செய்
எங்களுக்கு எதற்குப் பறை
என்றைக்கும்
ஏழேழ் பிறவிக்கும்
நாங்கள்
உன்னோடு இணைந்தவர்கள்
உன் தொண்டர்கள்
எங்களின்
மற்ற ஆசைகளை
பக்தியாக மாற்றிவிடு.

503
ஆயர் மகளிர்
நிலவு போன்ற முகம் அவர்களுக்கு
அழகிய அணிகலன்களும் அணிந்தவர்
கப்பல்கள் நிறைந்த
திருப்பாற்கடல் கடைந்த
மாதவனைக்
கேசவனைத் தொழுது
அவர்கள் பெற்ற பேறுபற்றிப்
பெரியாழ்வார் பெற்றெடுத்த கோதையவள்
சங்கத்தமிழ்க்கவிதை முப்பதிலும் செப்பியுள்ளாள்.
இம்முப்பதையும்
தப்பாமல் ஓதுபவர்
செங்கண்திருமுகத்துச்
செல்வத்திருமாலின்
திருவருளை
எங்கும் பெற்று இன்புறுவர்.

Advertisements
This entry was posted in Thiruppavai and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s