திருப்பாவை (சங்கத்தமிழ் மாலை) எளிய தமிழில்

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் கவிதாயினி ஸ்ரீ ஆண்டாளின் ‘திருப்பாவையும்’ ‘நாச்சியார் திருமொழியும்’ எளிமையும் அழகும் வாய்ந்தவை. ஆண்டாளின் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலம் என்பர். இந்த ஒன்பதாம் நூற்றாண்டுத் தமிழில் ஆண்டாளின் பாசுரங்கள் பாடப்பட்டும் படிக்கப்பட்டும் வருகின்றன. இப்பாசுரங்களின் எளிமையையும் இனிமையையும் அவை காட்டும் பக்தி நெறியையும் தற்காலத்தமிழில் எளிய நடையில் அமைத்துக்கொடுக்கவேண்டும் என்று தோன்றியது. இப்பாசுரங்களின் உட்கருத்தை உரைகளின் துணையின்றி உணர இயலாது.

“ஆண்டாள் ஸ்ரீ வில்லிப்புத்தூரை ஆயர் பாடியாக்கி தன்னை ஆயர் சிறுமியாகப் பாவித்துக்கொண்டு அவர்கள் வெள்ளையுள்ளத்துடன் பேசும் மொழியினைத் தானும் ஏற்றுக்கொண்டு பேசலானாள்” என பெரியவாச்சான் பிள்ளை கூறுகிறார். இந்தப் பாவனைதான் இப்பாசுரங்களின் மொழியழகுக்கும் எளிமைக்கும் காரணம்.

தற்காலத் தமிழில் திருப்பாவைப் பாசுரங்கள் அனைவரும் அனுபவிக்கும் விதத்தில் எளிமையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

474
சிறந்த அணிகலன்கள் புனைந்த
சீர்மிகு ஆயர் பாடிச்சிறுமியரே!
மாதமோ மார்கழி
பெளர்ணமி நிலா
வாருங்கள் நீராட
கூரான வேல் கொண்டு
போராடிப்பகையழிக்கும்
நந்தகோபனின் குமரன் கண்ணன் –
அவன் யசோதையின் இளஞ்சிங்கம்
மேக வண்ணமும்
சிவந்த கண்களும்
கதிரும் மதியும் போன்ற முகமுடைய நாராயணன்
நமக்கு அருள் தருவான்
அதனால்
உலகோர் நம்மைப் புகழ்வார்கள்.
475
உலகத்தீரே!
பாவை நோன்புக்கான
நடைமுறைகள் கேளீர்!
பாற்கடலில் பள்ளிகொண்ட
பரமனைப் புகழ்ந்து பாடி
நெய் உண்ணாமல்
பால் அருந்தாமல்
விடியலில் நீராடி
கண்ணுக்கு மை தீட்டாமல்
கூந்தலில் மலர் சூட்டாமல்
செய்யத்தகாதவற்றைச் செய்யாமல்
புறங்கூறாமல்
முடிந்தவரை
தானதருமம் செய்து
நம்வாழ்வு பயனுற
உள்ள நிறைவுடன்
நோன்பிருப்போம்.
476
உயர்ந்து உலகளந்த உத்தமன்
திருமாலின் பேர்பாடி
பாவை நோன்பிருந்து
நீராட –
நாடெல்லாம் (தீங்கு ஏதுமின்றி)
மாதம் மும்மாரி பொழியும்
நெற்பயிர்கள் செழித்து உயரும்
இப்பயிர்களிடையே
கயல்மீன்கள் துள்ளும்
குவளைமலர்களில்
புள்ளிகள் கொண்ட
வண்டுகள் உறங்கும்
பெரும்பசுக்களின்
புடைத்த காம்புகளைத் தீண்ட
நிறையும் பால்குடங்கள்
மார்கழி நீராட
இத்தனைச் செல்வங்களும்
நீங்காமல் நிலைத்திருக்கும்
பாவையரே!

477
மழைக்கடவுளே!
பெருங்கடலில் சிறிதும் ஒளிக்காமல்
நீர்முகந்து
இடியுடன் மேலேறி,
ஊழித்தலைவன் போல்
உடல் கறுத்து,
பரந்த தோள்களை உடைய
பத்மநாபன் கையில் உள்ள
சக்கரம் போல் மின்னி,
வலம்புரிச்சங்கு போல்
சீராக ஒலியெழுப்பி,
சாரங்க வில்லின்
அம்பு மழையாய்
உலகம் அனைத்தும் வாழ
நாங்களும் மார்கழி நீராடக்
கொட்டு கொட்டென்று
கொட்டு மழையே.

478
மாயக்கண்ணனை,
வடமதுரைத் தோன்றலை,
தூயநீர் நிரம்பி ஓடும்
யமுனையில் விளையாடியவனை,
ஆயர்குல அழகிய விளக்கை,
தாய் யசோதையின் வயிற்றைக்
குளிரச்செய்த
தாமோதரனை,
தூய்மையான உள்ளத்தால்
தூய மலர்தூவித் தொழ,
அவன் பேர் பாட,
மனதினால் சிந்திக்க,
நாம் செய்த பாவங்கள்
வரவிருக்கும் தீவினைகள்
நெருப்பிலிட்ட பஞ்சாய்ப்
பொசுங்கி மறையும்
பாவையரே!

479
குழந்தை போன்றவளே!
எழுந்திரு
(கூட்டுப்) பறவைகளின் ஒலியினைக்கேள்
பறவையரசன் கருடனின் சந்நிதியிலிருந்து எழும்
வெண்சங்கின் பேரொலி
உன் காதில் விழவில்லையா?
பூதனையின் மார்பில்
பாலென்ற நஞ்சுண்டு அவள் உயிரை உறிஞ்சியவனை,
சக்கர வடிவ அரக்கனைக்
காலால் உதைத்து மாய்த்தவனை,
பாற்கடலில் பாம்பின் மேல்
துயில்கின்ற பரம்பொருளை,
‘ஹரி’ ‘ஹரி’ யென்று
முனிவர்களும்
யோகிகளும்
உச்சரிக்கும் பேரரவம்
உன் உள்ளத்துள் ஊடுருவி
குளிர்ச்சியைத் தரவில்லையா?

480
எங்கள் தலைவியே!
அழகியே!
கரிக் குருவிகளின்
கீசு கீசென்ற ஒலி
உன் காதில் விழவில்லையா?
தூக்கப் பேய் பிடித்தவளே!
வாசமிகு கூந்தலுடன்
ஆய்ச்சியர்
அச்சுத்தாலியும்
ஆமைத்தாலியும்
குலுங்கி ஒலியெழுப்ப,
மத்தினால் தயிர்கடையும்
பெருத்த ஓசை
உன் காதில் விழவில்லையா?
நாராயணா,
கண்ணா,
கேசவா,
என நாங்கள் பாடுவதை
கேட்டும் கேளாமல் இருக்கிறாயே!
எழுந்து கதவைத்திற.
481
மகிழ்ச்சி மிகு பாவையே!
கிழக்கு வெளுத்து விட்டது
எருமைகள்
பனிப்புல் மேய்கின்றன,
நம் பெண்கள்
நீராடச் செல்கிறார்கள்,
அவர்களைக் காக்க வைத்தோம்
நீயும் வா
குதிரை வடிவ அரக்கனைக் கொன்றவனை,
மல்லர்களை மாய்த்தவனை,
தேவாதி தேவனை,
நாம் தொழுதெழுந்தால்
வாருங்கள் என்றழைத்து
வேண்டும் அருள் தருவான்.

482
மணிமாளிகையில்
நாற்புறமும் விளக்குகள்
ஒளி உமிழ, அகில் புகை கமழ
பாங்கான படுக்கையில் தூங்கும்
மாமன் மகளே!
மாயன்
மாதவன்
வைகுந்தன் பேர்பாடி,
வாசலில் வந்து நிற்கிறோம் –
மணிக்கதவைத்திற
தாயே!
அவளை எழுப்பமாட்டீரா?
உன் மகள் ஊமையா?
அல்லது செவிடா?
சோம்பலால் வந்த உறக்கமா?
அல்லது
மந்திரத்தால் விளைந்த
மாயப்பெருந்துயிலா?

483
தனியே நோன்பிருந்து
சுகம் பெறுகின்ற பெண்ணே!
வாயிற்கதவைத்தான் நீ திறக்கவில்லை
வாயையுமா திறக்கமாட்டாய்?
துளசி மாலை அணிந்த
நாராயணன் –
அவன் புகழ்பாட
அருள்புரிவான் புண்ணியன்.
முன்பொருநாள்
யமனுக்கு இரையான கும்பகர்ணன் தன் பெருந்தூக்கத்தை
உனக்கு விட்டுச்சென்று விட்டானோ?
சோர்வும் சோம்பலும் நீக்கு
குழுவின் ஒப்பற்ற அணிகலனே
தூக்கம் தெளிந்து
கதவைத்திறவாய்.

484
இளமையான கறவைப் பசுக்கள் பல கறந்து
பகைவர்களை நாடி
அவர்தம் திறனழிக்கும்
குற்றமற்ற வீரர்குடியாம்
ஆயர்குடிப் பொற்கொடியே!
புற்றிலுள்ள நாகத்தின் படம்போன்ற
மறைவிடம் கொண்டவளே,
கான மயிலே,
எழுந்து வா
தோழியரெல்லாம்
உன் வீட்டு முற்றத்தில்
முகில் வண்ணன் பேர் பாடுகிறோம்
நீயோ அசையவும் இல்லை
பேசவும் இல்லை
நீ
அவனுக்கேற்றவள் தான்
அதற்காக
நீ இப்படித்தூங்கலாமா
இந்த உறக்கம் உனக்கு ஆகாது
உடன் எழுந்து வா.

485
கன்றைப் பிரிந்த எருமை
கன்றை எண்ணி வருந்தி அழைத்திட
அதன் காம்பின் வழி
பால் பெருகும்,
பெருகிய பால் வெள்ளம் சேறாகும் இல்லத்துப்
பெருஞ்செல்வனின்
தங்கையே!
உன் வாசலிலே நின்றுகொண்டு
மார்கழிப் பனி தலையில் விழ
அன்றொரு நாள் சினம் மிகுந்து
தென்னிலங்கைக் கோமானைக்
கொன்றொழித்த
மனத்துக்கினிய இராமனை
நாங்கள் பாடுகிறோம்
ஆனாலும் நீ பேசவில்லை
இதென்ன பேய்த்தூக்கம்
சுற்றமனைத்தும் அறியும்
உன் உறக்கம்.
இனியாவது எழுந்திரு.

486
மலரின் வண்டு போன்ற
அழகிய கண்களை
உடையவளே!
கொக்கு வடிவில் வந்த அசுரனின்
வாய் பிளந்து கொன்ற கண்ணன்,
பொல்லா அரக்கன்
இராவணனின் தலைகளைக் கிள்ளி எறிந்த
இராமன் புகழ் பாடி
தோழியர் எல்லாரும்
நோன்பிடம் சென்றுவிட்டார்
வெள்ளி முளைத்து
வியாழன் மறைந்தது
பறவைகள் பறந்து
ஒலி செய்கின்றன
உடல் குளிரக்குளிர
அமிழ்ந்து அமிழ்ந்து
நீராட வேண்டாமா?
நல்ல நாளில்
இன்னுமா படுக்கை?
உன் உள்ளத்தின்
கள்ளம் தவிர்த்து
எங்களுடன் வா
பாவையே!

487
விடியலில் எங்களை
எழுப்புகிறேன் என்றாயே
அதை மறந்து
உறங்குகிறாய்
வெட்கமில்லையா உனக்கு
எழுந்திரு
உன் வீட்டுப் புழக்கடைக் குளத்திலே
செந்தாமரைப் பூக்கள்
மலரத்தொடங்கி
ஆம்பல் மலர்கள்
கூம்புகின்றன
காவியுடையணிந்த
வெண்பல் துறவிகள்
சங்கு ஊதப் போகிறார்கள்
சங்கோடு, சக்கரம் ஏந்தும்
பெரிய கைகளையுடைய
தாமரைக்கண்ணனைப்
பாடலாம்
வா.

488
பாவையர்: என்னம்மா
சின்னக்கிளியே!
இன்னுமா தூங்குகிறாய்?

பாவை: பெண்களே
ஏன் சிலுசிலுக்கிறீர்கள்
இதோ வருகிறேன்

பாவையர்: உன் வாய்வீச்சை
யாமறிவோம்

பாவை: நீங்கள்தான்
வாய்வீச்சில் வல்லவர்கள்
போகட்டும்
குற்றம் எனதுதான்

பாவையர்: சரி
விரைவாக வா
உனக்கென்ன தனிப்பாதை,

பாவை: எல்லோரும் வந்தனரோ?

பாவையர்: எல்லோரும் வந்தனர்
வேண்டுமானால்
எண்ணிக்கொள்!
வலிய யானையைக் கொன்றவனை
பகைவர்களின் பகையை அழிப்பவனை
மாயக்கண்ணனைப்
பாடுவோம் வா.

489
தலைவனாய் நின்றுகாக்கும்
நந்தகோபனின்
அரண்மனைக் காவலரே!
கொடிபறக்கும்
தோரணவாயிலைக்
காப்பவரே!
மணிக்கதவின் தாழ் திறவீர்.
நாங்களெல்லாம்
ஆயர்சிறுமிகள்
நோன்புப் பறை தருவேன் என
நேற்றே சொன்னான்
மாயன் மணிவண்ணன்
தூய உள்ளத்துடன்
பள்ளி எழுச்சி பாடி
அவனைத் துயிலெழுப்ப
வந்துள்ளோம்
மறுக்காமல்
நிலைக்கதவைத்
திறந்திடுவீர்.

Advertisements
This entry was posted in Thiruppavai and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s