பேயாழ்வார்

பேயாழ்வார் முதலாழ்வார்களில் மூன்றாமவர். இவரது காலம் ஆறாம் நூற்றாண்டு. இவர் பிறந்தது சென்னையிலுள்ள மயிலாப்பூரில். பேயாழ்வாரின் நூறு பாசுரங்கள் மூன்றாம் திருவந்தாதி எனப்படும். இவர் பக்தியும் வைராக்கியமும் நிறைந்தவராக இருந்தார். இத்திருவந்தாதி ஞானத்தாலும் பக்தியாலும் கிடைத்த இறைக்காட்சியைச் சொல்கிறது. பேயாழ்வார் தமிழ்த்தலைவன் என்று போற்றப்படுபவர்.

மூன்றாம் திருவந்தாதியிலிருந்து பத்து பாசுரங்கள் எளிய தமிழில்….

2282

இன்று
கடல் வண்ணன் எம்பெருமானிடம்
திருமகளைக்கண்டேன்
பொன்மேனி கண்டேன்
அங்கே
ஒளி வீசி வரும் இளஞ்சூரியனின்
அழகிய நிறத்தைக் கண்டேன்
போரில் பொன் போல் நெருப்புமிழும்
சக்கராயுதத்தைக் கண்டேன்
அவன் கையிலுள்ள
வலம்புரிச் சங்கையும் கண்டேன்.

2292

நன்றாக ஓதப்படும்
நான்கு வேதங்களில் இருக்கின்றான்
தேனினுமினியதாய்
பொங்கிப்பெருகும்
அருவி போன்ற அழகன்
சங்குகளும் அலைகளும் கொண்ட பாற்கடல்
அங்கே
பாம்புப்படுக்கையிலே
பள்ளிகொண்டுள்ளான்
வேதியர்கள் ஓதி உணர்த்துகின்ற
சாத்திரங்களால் போற்றப்படுபவன்
இத்தகைய பெருமைகளுடைய பகவானை
நுண்ணறிவு கொண்டோரே அறிவர்.

2295

வேதங்கள் நான்கால் போற்றப்படுபவன்
வேங்கடமலையில் உறைபவன்
வானவர் சிரம் பணியும்
பாதங்கள் கொண்டவன்
அந்தப் பாதங்களைப்பணிந்து
அவனிடமே நெஞ்சம் நிலைத்து நிற்க—-
மங்கையர் தோள் மறந்து
வேத்சாத்திரங்களிலே
மனம் செலுத்தல் வேண்டும்.

2297

அழகிய இதழ்கள் கொண்ட தாமரையில் வாழும்
திருமகள் வீற்றிருக்கும் திருமார்பன்
கடலிலே
வந்து வந்து மோதுகிற
வெள்ளை அலைகள் ஒதுக்கும்
செம்பவளங்களும்
வெண்முத்துக்களும்
அந்திநேர அலங்கார தீபங்களாய் ஒளிரும்
திருவல்லிக்கேணியிலே
அருள் புரியும் பார்த்தசாரதியே
என் இறைவன்.

2319

எல்லா உயிர்களிலும் உறைபவன் இறைவன்
தவசிகளின் உருவமும் அவனே
தாரகைகளும் அவனே
ஒளி வீசும் நெருப்பும்
உயர்ந்த மலைகளும்
எட்டுத்திசைகளும்
விண்ணில் விளங்கும்
சந்திரனும்
சூரியனும் அவனே
இவன்
தனக்குவமை இல்லாதான்.

2321

எம்பெருமான் இருக்கின்றான்
என்றுணர்ந்த நல்ல மனமே!
வானம் ஒடுங்கும்படி
உயர்ந்து நிற்கும் சிகரங்களும்
கொட்டும் அருவிகளும் கொண்ட
வேங்கடமலையிலே
குடிகொண்டவன் அவன்
பூமி முழுதும் ஒடுங்க
மண் அளந்த அந்த உத்தமன்
அடியார்கள் உள்ளத்தில் என்றும் இருப்பவன்
நெஞ்சே நீ அறிவாய்!

2337

திருமாலின் மேனி நிறம்
வெண்மையா
சிவப்பா
பச்சையா
அல்லது
கருப்பா?
மானிடராகிய நாம்
அவன் நிறம் அறியோம்
எண்ணிப்பார்த்தால்
ஞானம் நிரம்பிய நாமகள் கூட
இந்தப் பூமகள் கணவன் பொலிவை
நன்கு புகழ வல்லவள் அல்லள்.

2344

ஒரு பக்கம் தாழ்ந்த சடை
மறு பக்கம் நீண்ட முடி
ஒருபுறம் ஒளிரும் மழு
மறுபுறம் சக்கரப்படை
சுற்றிய நாகம் ஒரு புறம்
பொன் அரைஞாண் மறுபுறம்
நாற்புறமும் அருவிகள் பாயும்
வேங்கடமலையிலே
இரு வடிவங்களும்
ஒரே வடிவாய்ப்பொருந்தி விளங்குதல்
என்ன ஆச்சரியம்!

2350

மலையைப்பற்றிப் பேச நேர்ந்தால்
என் மகள்
வேங்கடமலையையே பாடுகின்றாள்
சிறந்த துளசியைச் சூடிக்கொள்வதே
கற்பெனக்கருதி
தன கருங்கூந்தலில் சூடுகின்றாள்
மல்லர்களை மாய்த்த நீண்ட தோள்கள்
அந்தத் திருமால் பள்ளிகொண்ட
பாற்கடலில் நீராட
அனுதினமும்
விடியலிலே புறப்பட்டுப்போகின்றாள்.

2369

அப்படிச் செய்தால் நல்லதா?
இப்படிச் செய்தால் தீமையோ?
என்றெல்லாம் குழம்பவேண்டாம்
தேன் துளிர்க்கும்
குளிர்ந்த துளசி மாலை சூடிய
எல்லோருக்கும் பொதுவான எம்பெருமானின்
பொற்பாதங்களைத் தொழுவீர்
அதனால்
உங்கள் பாவங்கள் எல்லாம்
உடனே வேரோடு அழிந்துவிடும்.

Advertisements
This entry was posted in Nalayira Divya Prabandham and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s