பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார் முதலாழ்வார்களில் இரண்டாமவர். இவரது காலம் ஆறாம் நூற்றாண்டு. இவர் தோன்றியது மாமல்லபுரத்தில். இவரது நூறு பாசுரங்கள் ‘இரண்டாந்திருவந்தாதி’ எனப்படும். இத்திருவந்தாதி வெண்பாக்களால் ஆனது. இதிலுள்ள பாசுரங்களில் பக்தி மேலோங்கியிருக்கும். பூதத்தாழ்வார் பெருந்தமிழன் என்று போற்றப்படுபவர்.

இரண்டாம் திருவந்தாதியிலிருந்து பத்து பாசுரங்கள் எளிய தமிழில்…..

2182

ஞானத் தமிழ் புரிந்த நான்
அன்பே அகலாய்
ஆர்வமே நெய்யாய்
அவன் நினைவின் இனிமையில் உருகும்
மனமே திரியாய்
என் ஆன்மா கரைந்துருக
நாராயணனுக்கு
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன்.

2183

இறைவனை ஞானத்தால் நன்குணர்ந்து
அன்பின் எல்லையிலே நின்று
நாராயணனின் நாமங்களைக் கூறினால்
வானத்துக்கு அணி செய்யும்
அமரர் போல் ஆக்கிடுவான்
அப்பெருமான்.

2187

இறைவனின் சிறப்பறிந்து
ஐம்புலன்களும் அடக்கி
தூய மலர்கள் கொண்டு
பெரும் பக்தி கொண்ட மனத்துடனே
அவனுக்கும் நமக்குமுள்ள
உறவினை நன்கறிந்து
அவன் நாமங்களை
இடைவிடாமல் ஓதும்
பக்திப் பெருந்தவத்தோர்
கருங்கடல் வண்ணனின் காலடிகள்
காண்பரே!

2197

நாமெல்லாம் அவன் அடிமை
இந்த உண்மையை உணர்தல் வேண்டும்
அடிமையென்னும் உண்மையை
உணராமற்போனாலும்
அத்திருமாலை மனத்தில் கொள்ள
உள்ளத்தைத் திருத்த வேண்டும்
மழை நீர் வந்து தேங்க
காட்டின் மேட்டு நிலம் திருத்தி
ஏரியை நாம் வெட்டலாம்
ஆனால்—
மழை பெய்விப்பவன்
அந்த மாலவன் அன்றோ!

2202

மனிதர்கள் இருக்கிறார்கள்

சிந்திக்க அவர்களுக்கு உள்ளமும் உள்ளது
மலர் தூவி வணங்க
நீர்நிலைகளிலெல்லாம்
தாமரை பூத்துக்கிடக்கிறது
இறைவனைப்போற்றிப்புகழ
நேரமும் இருக்கிறது
வாமனமூர்த்தியின்
அழகுமிகு பாதங்கள் பணிய
பொருத்தமான தலையும் உள்ளது
எந்தக்குறையுமின்றி
எல்லாம் இருந்தும்
இந்த மனிதர்கள்
கொடிய நரகம் சேர்வது
ஆச்சரியமே!

2220

அறிவில் குறைந்தவரே !
உத்தமன் பேர் பாடுங்கள்
அதுவே வேதத்தின் பொருள்
வேதத்தின் பொருளறிந்து
வேதம் ஓதுவீராயின்
அதுவும் நன்றே
பொருளறிந்து ஓத இயலவில்லையா?
வருந்தாதீர்
மாதவன் பேர் சொல்லுங்கள்
அதுவே வேதத்தின் சுருக்கம்.

2241

பரந்தாமா!
உனக்கேது உருவம்
உன் உருவம் ஒளி உருவம்
உலகத்தோர் சொல்கிறார்கள்
உனக்கு உருவம் ஒன்றே என்று
அனைத்துக்கும் ஆதி நீ
அந்த ஆதி உருவை அறிவோரே
நீதியால் நிலைத்து நின்று
பூமியைக்காக்க வல்லார்.

2255

எம்பெருமானே!
என் எல்லாப்பிறவிகளிலும்
இடைவிடாமல்
தொடர்ந்து தவம் புரிந்தேன் நான்
அத்தவத்தின்
பயனைப்பெற்றவனும் நானே!
செம்மொழித் தமிழால்
சிறந்த சொல் மாலைகளை
உன் பாதங்களில் சமர்ப்பித்தேன்
அதனால்
பெருந்தமிழன் ஆனேன்
உனக்குப்
பெரிதும் நல்லவனும் ஆனேன்

2256

மதநீர் பெருகும் ஆண் யானை ஒன்று
தன் பெண் யானை முன் நின்று
இரண்டே கணுக்கள் கொண்ட
இள மூங்கில் வளைத்தெடுத்து
அருகிலிருந்த தேனிலே அதைத் தோய்த்து
தன் துதிக்கையிலே தாங்கி
பெண் யானை முன் நீட்டும்
காட்சி கொண்ட வேங்கடமலை.
இதுவன்றோ
மேகவண்ணன் உறையும் மலை

2262

இரவே இல்லாத பகல் கண்டேன்
என்றும் மறையாத ஆதவன்
நாராயணனைக் கண்டேன்
கனவில்
அவனை மீண்டும் நன்றாகப்பார்த்தேன்
அவன் மேனியில் விளங்கும்
சக்கரத்தையும்
ஒளிரும் பாதங்களையும்
விண்ணில் விளங்கும்
அவன் ஜோதி வடிவையும் கண்டேன்!

Advertisements
This entry was posted in Nalayira Divya Prabandham and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s