பொய்கையாழ்வார்

முதலாழ்வார்கள் மூவரில் முதல்வர் பொய்கையாழ்வார். இவர் அவதரித்தது காஞ்சிபுரத்தில். இவரது காலம் ஆறாம் நூற்றாண்டு. பொய்கையாழ்வாரின் நூறு பாசுரங்கள் “முதல் திருவந்தாதி” என அழைக்கப்படுகிறது. இவை வெண்பாக்களால் ஆன அந்தாதி அமைப்புடையவை. முதல் திருவந்தாதி ஞானத்தைச் சொல்கிறது. இவரை வைணவத்தின் விடிவெள்ளி என்றும் கவிஞர் போரேறு என்றும் கூறுவார்கள். முதல் திருவந்தாதியிலிருந்து பத்து பாசுரங்கள் எளிய தமிழில்……..

2082

இந்த உலகம் ஓர் அகல்
சூழ்ந்துள்ள கடலே நெய்
எரிகின்ற சூரியனே சுடர் விளக்கு
இந்த விளக்கின் வெளிச்சத்திலே–
துன்பக்கடல் வற்ற வேண்டி
சுடர் விடும் சக்கரத்தைக் கையில் கொண்ட
திருமாலின் திருவடிகளிலே
இப்பாமாலையைச் சூட்டுகிறேன்.

2111

மனத்தைத்தெளிய வைத்து
எம்பெருமானிடம் செலுத்தி
ஞானத்தெளிவு பெற்றவர் மனமோ
தாயை நாடும் கன்றுபோல்
குளிர்ந்த துளசி மாலையணிந்த
திருமாலின் திருவடிகளையே விரும்பி
தானே சென்று
தேடி அடையும்.

2125

அடியார்கள் எந்த உருவத்தை விரும்புகிறார்களோ
அதுவே அவன் உருவம்
அடியார்கள் விரும்பிச்சூட்டிய பெயர் எதுவோ
அதுவே அவன் பெயர்
அடியார்கள் எவ்விதமாகச்சிந்தித்து
இடைவிடாமல் அவனை தியானிப்பரோ
அவ்வண்ணமே ஆகி விடுவான்
சக்கரமேந்திய அந்தத்திருமால்.

2128

மதங்கொண்ட யானைகள் போல் அலையும்
ஐம்புலன்களையும் அடக்கி
கண்டவிடமெல்லாம் திரிய விடாமல்
செவ்வனே நிறுத்தினால்
கூர்மையாகும் ஞானம்
கூர்மையடைந்த ஞானத்தால்
இறைவனை உள்ளபடி உணர வல்லார்
அன்றொருநாள்
யானை கஜேந்திரனைக் காத்தவனின்
திருவடிகள் கண்டு அனுபவிப்பர்.

2140

போக்குவதற்கரிய பழைய வினைகள்,
அவ்வினைகளால் வரும்
மனத்துயரம்,
உடல் நலிவு,
மேலும் செய்கின்ற பாவங்கள்
இவையெல்லாம் நீங்க
முன்பொருநாள்
மெல்லிடையாள் சீதையை
இலங்கையிலே சிறை வைத்த இராவணனை
தன் வில்லேந்தி வதம் செய்த
சக்கரவர்த்தித் திருமகனைச்
சரணடைவாய்.

 2145

எனது ஆத்மா ஆண்டவனுக்குச்சொந்தம்
அவனுக்குச் சொந்தமானதை நான் விரும்பேன்
பக்தி இல்லாதாரோடு நட்பு கொள்ளேன்
பக்தர்களோடுதான் உரையாடுவேன்
திருமாலே என் தெய்வம்
வேறு தெய்வங்களைத் தொழமாட்டேன்
இப்படியெல்லாம் நான் இருக்கிறேன்
என
அகங்காரத்தால்
வியப்பெய்தேன்
இனி
பாவம் எவ்விதம் வரும் என்மேல்.

2148

நதிகள் போவதெல்லாம்
பொங்கும் கடலை நோக்கி
அழகுமிகு தாமரை மலர்வதோ
வானில் கதிரவனை நோக்கி
உயிர்கள் செல்வதெல்லாம்
யம தருமனை நோக்கி
ஞானமோ
பூமகள் கணவன்
திருமால் ஒருவனையே நோக்கும்.

2151

சொல்லும் சக்தி உள்ள போதே
திருமாலைத் தொழுவீர்.
அழிவதே இயல்பாய்க் கொண்ட
உடம்பு இருக்கும்வரை
திருமாலைத் தொழுவீர்.
மலர் மாலைகளால்,
யாகங்களால்,
சடங்குகளால்,
மந்திரங்களால்
பெருமானைத் தொழுவீர்!
அவன் பெயரைச்சொல்லி வணங்குங்கள்
நன்மை பெறுவீர்!

2152

பெருமானிடம் ஆழ்ந்த நெஞ்சமே!
நோய்,
கிழத்தனம்
எல்லாம் தொலைந்து
நற்கதி அடைந்தாலும்,
யுகங்கள் நான்கிலும் நிலைத்திருந்து
உலகமெல்லாம் ஆண்டாலும்,
சக்கரத்தைக் கையிலுடைய
பெருமான்பால் கொண்ட அன்பை மட்டும்
விட்டுவிடாதே!
நெஞ்சே
உன்னை வணங்குகிறேன்.

2180

என் இனிய நெஞ்சே!
உத்தமன் நம்மைக்காப்பதற்கு இருக்கின்றான்
அவன் என்றும் உள்ளவன்
அடியார்கள் உள்ளத்தில்
நீங்காமல் இருப்பவன்
பாற்கடலில் கண்ணுறங்குபவனும்
வேங்கடத்தில் நிற்பவனும்
உன் உள்ளத்திலேயே உள்ளான்
இதனை அறிவாய் நெஞ்சே!

Advertisements
This entry was posted in Nalayira Divya Prabandham and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s