திருமழிசையாழ்வார்

சென்னையை அடுத்துள்ள திருமழிசை என்னும் ஊரில் அவதரித்தவர் திருமழிசையாழ்வார்.

இவரது காலம் 7ம் நூற்றாண்டின் பிற்பகுதி.முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரின் சீடர். பேயாழ்வார் இவருக்குப் பக்திசாரர் என்று பெயர் சூட்டியுள்ளார். இவர் திருச்சந்தவிருத்தம் மற்றும் நான்முகன் திருவந்தாதி ஆகிய இரு பிரபந்தங்களை இயற்றியுள்ளார். திருச்சந்தவிருத்தம் ஓசை நயம் கொண்ட 120 கலி விருத்தப்பாக்களைக் கொண்டது. நான்முகன் திருவந்தாதி 96 வெண்பாக்களால் ஆனது. இது நான்காம் திருவந்தாதி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் திருவந்தாதி இப்பிரபந்தத்தின் முதல் வார்த்தையான “நான்முகன்” என்பதையொட்டி பெயரிடப்பட்டுள்ளது. இவ்விரு பிரபந்தங்களிலிருந்தும் பத்துப்பத்துப் பாசுரங்கள் இங்கே எளிய தமிழ் நடையில்………..

திருச்சந்தவிருத்தம்

752.

எம்பெருமானே!
நிலத்தின் ஐந்து குணங்களும் நீ
நீரின் நான்கு குணங்களும் நீ
நெருப்பின் மூன்று குணங்களும் நீ
காற்றின் இரண்டு குணங்களும் நீ
வானத்தின் ஓர் குணமும் நீ
வேறு வேறு தன்மை கொண்ட
அனைத்தும் நீயே!
முற்றிலும் உன்னை அறியும்
ஆற்றல் கொண்டோர் யாரோ!

761.

எம்பெருமானே!
கடலிலே கிளர்நதெழும் அலைகள்
கடலிலே அடங்குவது போலே
பிரபஞ்சத்தில்
உயிருள்ளது
உயிரில்லாதது
அனைத்துமே
உன்னில் பிறந்து
உனக்குள்ளே இறந்து
உன்னுள்ளே அடங்கும் தன்மை
உன்னிடமே உள்ளது.

762.

வேதங்களின் தொடர்ச்சி நீ
வேதங்கள் சொல்லும் பொருளும் நீ
வேதங்களால் அறியமுடியாமல்
வெளிப்படும்
பரஞ்சோதியும் நீ
வேதங்களால் உலகை நீ படைக்க
உன்னிலிருந்து தோன்றிய பிரம்மாவும் நீ
வெறும் சொற்களால் உன் குணங்களைச்
சுருங்கச் சொல்லவல்லவர் யாரோ?

777.

உலகம் பெருக
ஆணோடு பெண்ணுமானாய்
இரண்டுமற்ற அலியுமானாய்
இவர்களிலே
நல்லவர்க்குத் துணையுமானாய்
சுவையும்
ஓசையும்
தொடுகையும் ஆனாய்
எல்லாமுமானாய்
பசுக்களைக்காக்கும் இடையனானாய்
பொய்யானாய்
மெய்யுமானாய்
பூமியைப்பேணும் வாமனனுமானாய்
மறைந்து சென்ற கள்வனே!

780.

நாதனே!
ஞானமூர்த்தியே!
மேம்பட்ட பொருளிலெல்லாம்
மேம்பட்டவனே!
திருமகளைத் திருமார்பில் தாங்கி
இன்பமுறுகின்றாய்
கடல் நீர்ப்படுக்கையில்
பள்ளி கொண்டுள்ளாய்
இப்படியெல்லாம்
அடியார்களைக் காப்பதோடல்லாமல்
அற்ப மனிதப்பிறவியிலும் வந்து பிறக்கின்றாய்
நீ அருள் புரியும் விதம் இதுதான்
என
யாரால் அளவிடமுடியும்?

815.

எம்பெருமான்
திருவூரகத்திலே நிற்பதையும்
திருப்பாடகத்திலே இருப்பதையும்
திருவெஃகாவிலே துயில்வதையும்
கண்ணாரக்கண்டபோதெல்லாம்
நான் பிறந்ததாக நினைக்கவில்லை.
எனக்கு ஞானம் பிறந்தது
ஞானம் பிறந்தபின் அவரை நான் மறக்கவேயில்லை
என் மனத்திலேயே
எப்போதும்
நிற்கின்றார்
இருக்கின்றார்
துயில்கின்றார்.

826.

மனதை ஒரு முகப்படுத்தி
பலன் கருதா நல்தவத்தினைக்
காலங்கள் தோறும் செய்து
அவனது குணங்களை எண்ணி எண்ணி
தூய உள்ளத்துடன்
தியான நிலை அடைந்தால்
வானவர் தலைவனாம்
எங்கள் செந்தாமரைக்கண்ணனைக் காணலாம்
அன்றி
மற்றவர் அவனைக்காண இயலாது

827.

அற்ப இன்பங்களின் வழிகளை
அரக்கு முத்திரையால் அடைப்பதுபோல்
அடைத்தால்தான்
இறைவனை அடையும்
நல்ல வழிகள் திறந்திடும்
ஞானவிளக்கேற்றி
எலும்பு தெரியும்படி உணவைக்குறைத்து
உள்ளே கனிந்து
மனமுருகி
அதனால் வெளிப்படும் அன்பினாலன்றி
சக்கரபாணியை
யார் காண வல்லார்?

841.

பெருமானே!
நான்கு குலங்களுக்குள்
ஒன்றிலும் நான் பிறக்கவில்லை
நன்மை தரும்
நல் வேதங்கள் நான்கினையும்
ஓதவில்லை
புலன்கள் ஐந்தையும்
வென்றேனில்லை
இது இழிநிலைதான்
ஆனாலும்
புனிதனே
ஒளிரும் உன் பாதங்கள் தவிர
வேறு பற்று ஏதுமில்லை எனக்கு.

868.

பயம்,நோய்,துன்பம்
ஆபத்துகள் நிறைந்த கிழப்பருவம்
பல்வேறு பிறப்புகள்
இவையெல்லாம் அனுபவிக்கும்
நெஞ்சத்தையும்
இதற்கெல்லாம் ஆதாரமான உடலையும்
நீக்கச்செய்து
நம்மைப்பரமபதம் சேர்ப்பான் பரந்தாமன்
அவன்
அடியாரை ஒருபோதும் கைவிடான்
எல்லையில்லாப்புகழ் உடையான்
முதலும் முடிவும் அவனுக்கில்லை
நஞ்சுமிழும்
நாகத்தின் படுக்கையிலே கிடப்பான்
வேதங்கள் புகழும் கீதன்.

நான்முகன் திருவந்தாதி

(நான்காம் திருமொழி)

2383.

ஆராய்ந்து பார்க்கையிலே
திருமால் ஒருவனே தேவன்
யாரும் அறியார் அவன் பெருமை
எப்படி ஆராய்ந்தாலும்
இதுதான் முடிவு
என்ன தவம் செய்தாலும்
முடிவிலே
அருள் கிடைக்கச்
சக்கரத்தைக் கையிலேந்திய
அந்தத் திருமாலே காரணம்.

2388.

நாராயணனே!
இன்று கிடைத்தாலும் சரி
நாளை கிடைத்தாலும் சரி
இன்னும் சிறிது நாட்களானாலும் சரி
இறுதியில்
உன் அருள் என்னவோ
எனக்குத்தான்.
நாராயணா
நீயின்றி நானில்லை
நானின்றி நீயுமில்லை.

2394.

மோட்சத்தைப்பெறும் வழி
இன்னதென அறியாமல்
உடலை வருத்தியும்
எலும்புக்கூடாய் தேய்ந்தும்
நெடுங்காலம் தவம் புரிந்தும்
உயிர் தரிக்க உண்டும்
உழல்பவரே!
மோட்சம் தருபவன் நாராயணனே
வேதங்கள் போற்றும்
முழுமுதற்கடவுள் அவன்
வானவர்க்கு இனியவன் அவன்.

2404.

நப்பின்னைக்காக
காளைகளை அடக்கிய பகவான்
பக்திப்பயிர் செழிக்க
அடியார்கள் நெஞ்சங்களை
அவனே உழுகின்றான்
அந்தப்பழைய நிலத்திலே
அடியார்கள் உழைப்புக்கு வேலையில்லை
திரண்டெழுந்த கார்மேகம்
அந்தத்திருமாலின் வடிவம்
அந்த வடிவத்தை
நீர் முகந்து எழுந்த மேகம்
எதிர் நின்று காட்டிடுமே!

2418.

வானம்
நெருப்பு
காற்று
பெருங்கடல்கள்
பெரிய மலைகள்
சஞ்சரிக்கும் சூரியன்
குளிர் நிலவு
அலைகின்ற முகிலினங்கள்
எட்டுத்திசைகள்
இவையெல்லாம் சூழ்ந்த
அண்டத்தைப்டைத்தவன்
அந்தத் திருமால்!

2421.

மலைகளைப்பாடுகையில்
வேங்கடமலையையும் பாடினேன்
அதனால்
மோட்சம் உறுதி என்றிருந்தேன்
சொன்ன சொல் சிறியதே
கிடைத்ததோ பெரும் பேறு
பெருமகிழ்ச்சி அடைகின்றேன்
வேதங்களின் வலையிலே அகப்பட்டு
நிலை பெயராமல் நிற்கின்ற
அந்தத் திருமகள் நாயகனின் திருவடிகளில்
அகப்பட்டு நிற்கின்றேன்.

2431.

காவிரிக்கரையில் கண் வளர்பவன்
பாற்கடலில் படுத்துறங்கும் பரந்தாமன்
‘என்னில் சரண் புகுவாய்’
எனும்
அவன் தத்துவப் பேருரை
என் நெஞ்சிலே நிலைத்துளது
இனி
மரண பயமில்லை எனக்கு
தீண்டாது என்னைக்கொடிய பாவங்கள்
நெருங்காது என்னைத் தீயவைகள்.

2452.

துவாரகையில்
இடையர் குலத்துதித்த மாயவன்
கண்ணன்
தொலைவில் இருப்பவனும் அவன்
அருகில் இருப்பவனும் அவன்
சிறு பிள்ளையும் அவனே
பெரியவனும் அவனே
அன்று
அவன்
போரின் துவக்கத்திலே உரைத்த
கீதையைக் கல்லாதார்
உலகத்தில்
தத்துவ உணர்வில்லாப் பேதைகளே.

2476.

பெருமாளின் அடிமையாகி தொண்டு செய்தேன்
அதனால்
மீண்டேன் பிறப்புத்துன்பத்திலிருந்து
வானவர்க்கும் கிட்டாத பக்தியாலே
நிரம்பியது என் உள்ளம்
கர்ம வினையாலே பிறப்பெடுத்த
இப்பூமி வேண்டாம்
சுவர்க்கமும் வேண்டாம்
அனைத்துக்கும் மேலான
பரமபதம் சேர
பக்தி கொண்டேன்.

2477.

எம்பெருமானே!
தெரிந்து கொண்டேன்
சிவனுக்கும் பிரம்மாவுக்கும் தெய்வம் நீ என்று
தெரிந்துகொண்டேன்
உலகங்கள் தோன்றக் காரணம் நீ என்று
இதற்கு முன் தெரிந்துகொண்டதெல்லாம்
உன்னைப்பற்றித்தான்
இனி தெரிந்துகொள்ளப்போவதும்
உன்னையே
உலகங்களைக்காக்கும்
உன்னதச்செயல் புரியும்
நாராயணன் நீ
என
நன்கறிந்தேன் நான்.

திருமழிசைப்பிரான் திருவடிகளே சரணம்.

Advertisements
This entry was posted in Nalayira Divya Prabandham and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s