திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் 

திருமங்கையாழ்வார் தமிழ் நாட்டிலுள்ள திருக்குறையலூரில் பிறந்தவர். இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு. படைத் தளபதியாக இருந்து வைணவத்தைத் தழுவியவர். பன்னிரண்டு ஆழ்வார்களில் இவர்தான் கடைசி. எண்பதுக்கும் மேலான திவ்யதேசங்களுக்குச் சென்று விஷ்ணுவைப் பாடியுள்ளார். முக்திக்கு வழி பக்தி என்ற கொள்கை கொண்டவர்.

இவர் பாடியது ஆறு பிரபந்தங்கள்

பெரிய திருமொழி

திருநெடுந்தாண்டகம்

திருக்குறுந்தாண் டகம்

திருவெழுகூற்றிருக்கை

சிறிய திருமடல்

பெரிய  திருமடல்

 

இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் பனுவல் என்று கூறப்படுகின்றன. இந்த ஆறு பிரபந்தங்களுள் சிகரமாக விளங்குவது திருநெடுந்தாண்டகம். இவர் திருவரங்கத்தில் இருந்தபோது இதனை அருளியுள்ளார். தாண்டகம் என்பது மலை ஏறுவதற்கு உதவியாக இருக்கும் ஒரு ஊன்றுகோல். மனித ஆன்மாவின் கடைத்தேற்றத்துக்கு கடவுள் ஒருவர் தான் ஊன்றுகோல் என்பதை இப்பாசுரங்கள் விளக்குகின்றன . திருநெடுந்தாண்டகம்  முப்பது பாசுரங்கள் கொண்டது. அவற்றின் எளிய தமிழ் வடிவம்.

திருநெடுந்தாண் டகம் 

(ஆழ்வார் தன் நிலையிலிருந்து சொல்வது)

2052
கண்ணால் காணும் உலகம்
உலகிலுள்ள பொருள்கள்
எல்லாமே மின்னலைப் போல் நிலையற்றவை
நான்கு வேதங்களும் தந்து
இருளை அகற்றும் விளக்கொளி போல்
அறிவின்மை அகற்றி
தன்னைக் காட் டினான்
மலைமுகட்டின் சந்திரன் போல்
ஆனந்தம் தரும் ஞானம் தந்தான்
ஆத்மாவை அறியச் செய்தான்
துன்பம் நோய் கிழத்தனம் இல்லாத
ஆத்மாவுக்குத் தலைவன்  அவன்
தேகம் மறைந்த பின்னே
அடியவர்க்கு மோட்சமளிக்க
நெஞ்சிலும் நினையான்
எப்போதும் சிந்திக்க உரியவன்
பொன்னின் தன்மையன்
மணியின் இயல்புடையோன்
வடிவிலே ஒளிமயம்
நிலம் நீர் தீ விசும்பு காற்று
என
பஞ்சபூதங்களில் உறைபவன்
நல்லவர்க்கு
நீர்போல் எளியவன்
கெட்டவரை
நெருப்பு போல் நெருங்க விடான்
ஒளி   அளிக்கும் பரஞ்சோதி அவன்
என் உடலில் நிற்பவன்
என் தெய்வம்
இப்பெருமானின் தளிர் போன்ற திருவடிகள்
என் தலைக்கு அலங்காரம்.
2053
அழகிய உருவங்களிலே
மும்மூர்த்திகளே முதல்வர்கள்
இவர்களின் உருவினை
தனித்தனியாய் ஆராய்ந்தால்
பிரமனின் வடிவம்
பொன் போன்றது
சிவனின் வடிவமோ
சிவந்த நெருப்பு
மாலவன் வடிவமோ
பெருங்கடல்
சேர்ந்திருக்கும் மும்மூர்த்திகளை ஆராய்ந்தால்
கடினமான நிலம்
நீர்
நெருப்பு
காற்றையெல்லாம் படைத்து
பாகுபாடுகள் பல கொண்ட உலகைப்படைத்து
அவை அனை த்திலும் கலந்து நிற்கும் பரஞ்ஜோதி  ஒருவனே
அவன்
காளமேக வடிவான
என் தெய்வம் திருமாலே.
2054
வடிவத்திலே கரிய நிறம் அவன் இயல்பு
பெரிய ஆமை வடிவிலே
கடலில் அமுதமெடுத்த கிருத யுகத்தில்
அவனது நிறம்
சங்கு போல் வெண்மை
திரேதா யுகத்தில்
அவனது நிறம்
சிவப்பு
கலியுகத்தில்
நீலம்
ஒவ்வொரு யுகத்திலும்
அவனைத் துதிப்பதல்லாமல்
அவன் வடிவும் நிறமும்
இன்னதென அறிய இயலுமோ
நீலமான திருமேனியும்
சிவந்த கண்களும் உடைய எம்பெருமான்
அவனை யார்தான் காணவல்லார்
சொல் நெஞ்சே.
2055
என் விருப்பத்திற்கு  இணங்கி நடக்கும் நெஞ்சே!
எம்பெருமான்
இந்திரனுக்கும் பிரம்மாவுக்கும்  முதல்வன்
பெரிய பூமி, காற்று,  தீ, நீர், ஆகாயம்
என
பஞ்ச பூதங்களையும் படைத்தவன்
கருத்துக்களை தெளிவாக விளக்கும்
தமிழ் வேதம்  அவன்
வடமொழி வேதங்களாகவும் விளங்குபவன்
நான்கு திசைகளிலுள்ள பொருள்களிலும்
சந்திர சூரியர்களிலும் உறைபவன்
அனைத்திலும் உறைபவன் அவன்
தேவர்களும் அறியமுடியா தூயவன்
அந்தணர்க்கு செல்வம் வேதம்
அந்த வேத முடிவின் ரகசியப்பொருள் அவன்
அப்பெருமானை
திருமந்திரத்தால் எப்போதும் அனுபவிக்க விரும்புவீரேல்
பரமபதத்திலே என்றென்றும் வாழலாமே.

 

2056
எம்பெருமான்
உலகை அளக்கையிலே
ஒரு திருவடி அழகாக அடி எடுத்து வைத்த போது
அது
புனலை ஊடுருவி நின்றது
இன்னொரு திருவடியோ
மன்னன் மாவலியின் நினைவையும் தாண்டி
அண்டச்சுவருக்கு அப்பால் போக
அகண்டவானத்தை ஊடுருவிச்சென்றது
பின்பு
குளிர்ந்த சந்திரமண்டலம்
சூரிய மண்டலம்
நட்சத்திர மண்டலமெல்லாம் கடந்து
பிரமனின் உலகம் வரை படர்ந்தது
உலகங்களை அளந்த இந்த பெருமானின்
மலர் போன்ற திருவடிகளை
வணங்கினேனே.
2057
கேட்பவர்கள்
‘போதும்’ ‘போதும்’ எனச் சொல்லும்படி கொடுக்கின்ற
நீண்ட திருக்கைகள் அவனுக்கு
வானவர் தலைவன்
அழகிய சிறகுகள் கொண்ட கருடனுக்கு
ஒப்பற்ற பாகன்
தீங்கிழைக்கும் அரக்கரை
எக்காலத்தும் தணியாக் கோபத்திலே
இரக்கமின்றி அழிப்பவன்
பூமியெல்லாம் பரந்து
பெருகி வரும் பெண்ணையாறு
மூங்கில்களை  இழுத்துவரும்
மூங்கில்கள் உதிர்க்கும் முத்துக்களோ
வயல்களைச் சேரும்
உழவர்கள் அவைகளைக் களையென ஒதுக்குவர்
ஒதுக்கிய முத்துக்கள் வயல்களில் பரவும்
பொன் போன்ற நெல் விளையும் திருக்கோவலூரில்
நாற்புறமும் நீர்நிலைகள்
அவ்வூரை வணங்குவோம் வா நெஞ்சே!

 

2058
எம்பெருமான்
திண்மையான மலைபோன்ற தோள்களுடன்
கூரிய மழுவை ஏந்தி
அரசர்களை  அழித்தது
பரசுராம அவதாரத்திலே
அரக்கரை அழித்து
உலகை நெடுங்காலம் ஆண்டது
ராமாவதாரத்திலே
கடலில் மறைந்த மலையை
தன்  ஒப்பற்ற வேலால் அழித்த முருகனை வென்றது
கிருஷ்ணாவதாரத்திலே
இந்த பெருமான் எழுந்தருளியிருக்கும் ஊர்
திருக்கோவலூர்
காவல் மிகுந்தது இந்த ஊர்
காப்பவளோ அறிவிற்சிறந்த துர்க்கை
காவல் தொழிலை விடாதவள்
இந்த ஊரில்
மணம் மிக்க சோலைகள் உண்டு
நீண்ட தெருக்கள் உண்டு
ஊரைச் சுற்றிலும் தாமரைத் தடாகங்கள் உண்டு
இது வீர  மிகு அரசன் மலையமான் தொழுத ஊர்
இத் திருக்கோவலூரை
வணங்குவோம்  வா நெஞ்சே!
2059
திருநீரகத்தில் உறைபவனே!
திருவேங்கடமலை உச்சியிலே நின்று அருளியவா!
நிலாத்திங்கள் துண்டம் எனும் ஊரில் உள்ளவனே !
அழகுமிகு காஞ்சியிலே நின்றவனே!
அழகிய நீர்த்துறையின் கரையினிலே
திருவெஃகாவில் கண் வளர்பவனே!
உன்னைச் சிந்திப்பவரின் சிந்தையில்
கோயில் கொண்டவனே!
உலகமெல்லாம் துதிக்க
திருக்காரகத்தில் உறைபவனே!
திருக்கார்வனத்தில் வாழ்பவனே!
அடியார்க்கு மேனி காட்டாத  கள்வனே!
அழகு மிகு காவிரியின் தென்கரையில்
திருப்பேர் நகரில் பொருந்தியவா!
என் நெஞ்சில் நீங்காத பெருமானே!
உன் திருவடிகள் காண விழைகின்றேன்.
2060
கப்பல்களில்
மதிப்பு மிகு இரத்தினங்கள் கொண்டுவரும்
கடல்மல்லையில் வாழ்பவனே!
மதில்கள் சூழ் காஞ்சியில் உறைபவனே!
திருப்பேர் நகரத்தானே!
தேன் தளும்பும் கொன்றை மாலை சூடி
பார்வதியை இடப்பக்கம் கொண்ட சிவனை
வலப்பக்கத்தில் உடையவனே!
திருப்பாற்கடலில் கண் வளர்பவனே!
உலகத்தார்க்கு அருள் வழங்கும் மேன்மை படைத்தவனே!
குளிர்ச்சிமிகு திருமலையின் உச்சியில் நின்றவனே!
பவள மேனியனே!
எங்கே நீ?
எம்பெருமானே
உன்னைக்காணும் ஆவலாலே தேடித்தேடி நான் அலைகின்றேன் .
2061
உலகமெல்லாம் துதிக்கும் தெற்குத்திருமலையாம்
திருமாலிருஞ்சோலையிலே நின்றருள்பவனே!
வடக்கே வேங்கடமலையில் அருளியவா!
மேற்கே திருவரங்கத்தில் கண்வளர்பவனே!
கிழக்கே திருக்கண்ணபுரத்தில்
மத யானை போன்றிருப்பவனே!
எல்லாக்காலங்களிலும் வானவர் கண்டு களிக்கும்படி
முன் நிற்பவனே!
அவதாரக்காலத்துக்குப் பின் பிறந்தோர் வணங்கும் வகையிலே
ஒளி  மயமாய்
திருமூழிக்களத்தில்  இருப்பவனே!
உலக முதல்வா!
பொன் போன்றவனே!
உலகங்கள் ஏழும் காக்கும் புகழுடையாய்!
இகழத்தக்க வாய்மொழி கொண்ட தொண்டன் நான்
‘என் ஆனாய்’ ‘என் ஆனாய்’
எனச் சொல்வதல்லால்
வேறு என் சொல்வேன் ஏழையேன்  !

 

(தலைவியின் தாய் நிலையில் ஆழ்வார் சொல்வது)

2062
இவள்
பட்டை உடுத்திக்கொள்கிறாள்
மோகத்தில் வாய் பிதற்றுகிறாள்
விளையாட்டு பொம்மையை விரும்புவதில்லை
சோகத்தால் கண்களில் நீர் தளும்புகிறது
தூங்குவதேயில்லை
நொடிப்பொழுதேனும்
என் மடியில் தங்குவதில்லை
என் பெருமானின் திருவரங்கம்
எங்கே என்கிறாள்?
தேனைக்குடித்த களைப்பால் விக்கி
ரீங்கரிக்கும் வண்டுகள் படிந்த கூந்தல் இவளுக்கு
அழகிய மான் போன்ற இந்தப்பெண்ணுக்கு
இந்நிலைமை வர
யார் காரணமெனக் கூறடி குறத்தி?
“கடல் வண்ணம் கொண்ட பெருமாள்தான்”
என்கிறாள் குறத்தி.
தோழி!
காப்பவனே காரணமானால்
இதனைப் போக்கவல்லார்  யார்?
2063
இவள் அனலிலிட்ட  மெழுகுபோல் நெஞ்சுருகி
கண்களில் நீர் சோர நிற்கின்றாள்
துவளுகின்றாள்
பெருமூச்சு விடுகின்றாள்
உண்பதேயில்லை
உறங்குவதுமில்லை
நஞ்சை உமிழும் ஆதிசேஷன் மீது
அறிதுயில் புரிகின்ற நம்பீ! என்கிறாள்
மணம் மிக்க மலர்களும் வயல்களும் சூழ்
திருவாலியில் உள்ள ஆண்மகனே! என்கிறாள்
அழகிய சிறகுடைய கருடாழ்வாரின் வருகையை நோக்கி
ஆடுகின்றாள்
பாடுகின்றாள்
தன் தோழியிடம்
என் உயிர்த்தோழியே!
உலகின் அணிகலன் திருவரங்கம் போய்
பெரிய பெருமாளை அனுபவிக்கக்கூடுமோ?
எனக் கேட்கிறாள்.
என் கைக்கு அடங்கா இப்பெண்ணைப் பெற்ற நான்
பரந்த இப்பூவுலகில்
பெரும் பழியைச்சுமக்கின்றேன்
இது நான் செய்த பாவமே!
2064
இந்திரன் பெய்வித்த கல் மழையை
ஒரு மலையால் தடுத்தவனே,
அழகுமிகு காஞ்சியிலே
திருஊரகத்தில் உறைபவனே,
வில்லை முறித்து
மெல்லியலாள்   சீதையை மணந்தவனே,
திருவெஃகாவில் பள்ளி கொண்ட வேந்தே,
முன்பொருகாலத்திலே
கண்ணனாய்த் தோன்றி
மல்லர்களை மாய்த்தவனே,
குதிரை வடிவ அரக்கன் கேசியைக்
கிழித்தொழித்த திருக்கரங்கள் உடையவனே,
(என்றெல்லாம்  சொல், என தலைவி தன்  கிளியிடம் கூறுகின்றாள்)
கிளியும் அவ்வாறே
பெருமானின் திருநாமங்களைச்சொல்கிறது.
அதனைக்கேட்க முடியாமல்
இவளுக்கு கண்ணீர் பெருகி
மார்பகங்கள் நனைந்து
துவண்டு போகின்றாள்.
2065
உதிக்கின்ற இளஞ்சூரியன் போன்றவன்
திருக்குறுங்குடியிலே மழைமேகமாய் இருக்கின்றான்
அழிவில்லா மூவுலகும் கடந்து
பரமபதத்திலே
முதல்வனாய் உள்ளவன்
அளவிடமுடியா குணவான்
அமுதக்கடல் போல் இனியவன்
திருவரங்கத்தில் கண் வளரும் தூயவன்
அந்தணரின் சிந்தையில் என்றும் நிறைந்தவன்
திருத்தண்காவில் தீபப் ப்ரகாசன்
மரகதப்பச்சைபோல் வடிவு கொண்டவன்
திருவெஃகாவில் கண் வளரும் திருமகள் கொழுநன்
என்றெல்லாம்
பெருமாளின் திருநாமங்கள் சொல்கிறது தலைவியின் கிளி.
இதனைக்கேட்ட தலைவி
அழகிய கிளிப்பிள்ளாய்!
“உன்னை வளர்த்ததன் பயனை நான் பெற்றேன்”
‘வா இங்கே’
என அழைத்து
கிளியைக்கைகூப்பி  வணங்கினாள்.
2066
உயர்ந்த கல் மதில்கள் சூழ் காஞ்சி
அக் காஞ்சியில் வாழ்கின்ற களிறு போன்றவனே!
திருப்பாற்கடலின் மேல் கிடந்து
கனி போல் இனிப்பவனே !
திருவழுந்தூரைச்சுற்றிலும்
பூந்தாதுக்கள் நிரம்பிய மலர்கள் கொண்ட பொய்கைகள்
நீர் நிலைகள்
அத் திருவழுந்தூரில் நின்று
அருள் புரிந்து
உள்ளம் மகிழ்ந்திருக்கும்  சுவாமியே!
என்றெல்லாம் சொல்லி
நாதம் நீண்டு ஒலிக்கும் வீணையைத்
தன்  மார்பகங்களில் தாங்கி
தூய புன்னகையால்
பல் வரிசை சற்றே தெரிய சிரித்து
மென் விரல்கள் சிவக்க வீணை மீட்டி
என் பெண் பிள்ளை
மென் கிளி போல் பாடுகின்றாள்.
2067
கன்றுகள் மேய்த்து மனமகிழும் கண்ணா!
இளையோனே!
மணமிகுந்த சோலைகள் சூழ்
திருக்கண் ணபுரத்திலே
இன்பம் தரும் கனிபோல் இருப்பவனே!
நாற்சந்தியிலே குடக் கூத்தாடி மகிழ்ந்தவனே!
வடவேங்கடமலையில் உறையும் மைந்தா!
அசுரரை வென்று வேரோடு அழித்த வேந்தனே!
பரந்து விரிந்த சோலைகள் சூழ் திருநறையூரிலே
நின்றருளும் நிமலா!
நெருங்கிய முடியும்,
கரு நிறமும் கொண்ட மேனியனே!
என் துணைவனே!
என்றெல்லாம்  கூறி
இணையான தன் மார்பகங்களிலே
கண்ணீர் வழியத் தளர்கின்றாள் இவள்.
2068
பொங்கிப்பூரித்த இவளது மென்மார்பகங்கள்
பொலிவிழந்தன
சண்டையிடும் இரு கெண்டைகள் போன்ற விழிகளிலே
கண்ணீர் அரும்புகிறது
நான் இருக்கும் இடத்தைவிட்டு
சடக்கென வெளியில் வந்து நிற்கிறாள்
சிவந்த கால்கள் கொண்ட அறிவில்லா ஆண்  புறாக்கள்
அப்புறாக்கள்
தம் பெட்டைகளுடன்கொஞ்சும் சிறு குரல் கேட்டு
உடல் உருகி
தன்  தலைவனை எண்ணி
குளிர் தென்றல் வீசும் திருத்தண்காவையும்
திருக்குடந்தையையும்
வாயாரப்பாடுகிறாள்.
திருக்கோவலூரையும்  பாடி ஆடுகிறாள்
இவளது  சத்தத்தைக்கேட்ட நான்
பெண்ணே!
இப்படி வாய் விட்டுக் கூப்பிடுதல்
நம் குலப்பெருமைக்குத் தகுமோ எனக்கேட்டேன்
ஆனால் அவளோ
திருநறையூரையும் பாட ஆரம்பித்து விட்டாள்
2069
இவளைப்பெற்றதனால்
நான் பாவம் செய்துவிட்டேன்
என் வயிற்றில் பிறந்த அழகிய இந்தப்பெண்
என் பேச்சைக் கேட்கமாட்டேன் என்கிறாள்
அவன் திருமேனி மேகவண்ணம்
கண்களும், வாயும்,
திருக்கைகளும், திருவடிகள் இரண்டும்
தாமரை  மலரின் நிறம்
நிலமகளுக்கு வசப்பட்டவர் அவர்
செந்தாமரையில் வீற்றிருக்கும்
திருமகள் மேல் மாறாக்காதல் அவருக்கு என்கிறாள்
எம்பெருமான் இருக்கும் திருவரங்கம் செல்ல
எது வழி என்று கேட்கிறாள்
நீர்போல் நிறம் கொண்ட எம்பெருமான் உறையும்
திருநீர்மலைக்கே போவேன் என்கிறாள்
இதுதான்
அடக்கமழிந்த பெண்களின் நிலை போலும்!
2070
முற்றும் வளராத அழகான மார்பகங்கள் இவளுக்கு
திருமகள் எம்பெருமானின் அழகான மார்பிலே
உறைதல் தெரிந்திருந்தும்
ஒப்பில்லா என் பெண்
அடக்கமிழந்து அவனையே நாடுகின்றாள்
பெருமூச்சு விடுகின்றாள்
தோழியிடம்
தோழீ !
அரங்கமாநகர் சென்று ஆடுவோமா என்கிறாள்.
பெற்ற தாயான என் வார்த்தையைச்
சிறிதேனும் கேட்டாளில்லை
திருப்பேர் நகரையும்
திருக்குடந்தை நகரையும் பாடி
பொற்றாமரைக்குளத்திலே நீராடப்போகின்றாள்
 என் தோழியரே!
உங்கள் பெண்களின்
நிலையும் இதுதானோ?
2071
தேர் வீரன்
வாளேந்திய  இராவணன்
அவன் செல்வமெல்லாம் அழியும்படித்
தென்னிலங்கையைத தீக்கிரையாக்கினவன்  எம்பெருமான்
போரையே தொழிலாய்க்கொண்ட
ஆயிரந்தோள் வாணாசுரனை  மாய்த்து
அலையெறியும் கடற்கோட்டையைக் கடந்து வென்றவன்
பூமிக்குத்தலைவன்
பூமியைக்குத்தி,
பிரளயத்திலே தன்  வயிற்றில் வைத்துப் பின்
வெளிப்படுத்தி,
அளந்து,
அதனை  ஆண்ட பேராளன்
இப்பெருமானின் திருநாமங்களை
ஓயாதுசொல்லும் இப்பெண்
இவ்வுலகிலேயே பெரும் பாக்கியசாலி
வேறு என்ன சொல்வது?

(தலைவி தன் நிலையைத்தானே சொல்வது )

2072
நறுமணம் வீசும் கருத்த முடிக்கற்றை
பிடரியிலே அலை பாய
காதுகளில் அணிந்த மகரகுண்டலங்கள்
இரு புறமும் ஒளிர்ந்து அசைந்தாட
எய்தலையே தொழிலாய்க்கொண்ட  வில்லுடன்
தலைவர் தன் இளையானோடு
இங்கு வந்தார்
என் முன்னே நின்றார்
அவரது திருக்கரங்கள் தாமரை நிறம்
அவர் திருவாயும்
திருவடிகளும் கூட
தாமரை  நிறமே
தோழீ!
இவரின் இந்தப்பேரெழிலைப்பார்த்தும் கூட
நான் அவரைத்
தேவரென அஞ்சி ஏமாந்தேன்.
2073
சிறந்த நைவள ராகத்தை ஆராய்ந்து பாடினார்
பின்னர்
சிறிதே வெட்கம் கொண்டு என்னைப்பார்த்தார்
நயமான சொற்களால் மீண்டும் பாடினார்
அவ்வளவே
என் மனமும் கண்களும்
என்னை விட்டோடி
அவரின் திருவடிகளில் தஞ்சம் புகுந்தன
பின்
என் கை வளையல்களைக்காணவில்லை
ஆடையையும் காணோம்
ஆனால்
மகர குண்டலங்கள் இரண்டினையும்
தோள்கள் நான்கினையும் கண்டேன்
பின்னர் அவரிடம்
தங்களின் இருப்பிடம் எவ்வளவு தூரமெனக்கேட்டேன்
அதற்கு அவர்
அழகிய திருவாலி இதோ இங்கே
எனக் காட்டி நின்றார்.
2074
உட்புகுந்து படரும் மன நோய்க்கு ஆளாக்கி
ஒளி  மிக்க என் கை வளையல்களையும்
என் சிவந்த நிறத்தையும்
எடுத்துச்சென்றார்
அவ்வாறு  செல்கையிலே—–
தெளிந்து ஊறும்
இளந்தென்னையின் கள்ளைக்குடித்துக்
கெண்டைகள் துள்ளும்
திருவரங்கம் நம் ஊர் என்றார்
தேன் சொரியும் துளசி மாலை சூடிய அவனை
நான் கனவிலே காண்பேன்
கனவிலே அவனிடம் ——
கருடன் மேல் பயணிக்கும் கள்வனே
இனி
நீ என்னைப்பிரிந்து செல்லாதே என்பேன்
அப்படி நான் சொன்னாலும்
எனக்கு மிஞ்சுவது என்னமோ வருத்தம்தான். .
2075
பிரளய காலத்தில்
உலகங்களை  உண்ட பெரிய வாயை உடையவர்
இங்கு வந்து நின்றார்
ஓசை மிகு பெருங்கடலில் ஆழ்ந்து
நீரைப்பருகிய பெருத்த வயிற்றையுடைய காளமேகம்
அந்தக்காளமேக வண்ணம் கொண்டவர் இவர்
பக்தர்களும் பாகவதர்களும் சூழ்ந்திருக்க
ஒரு கையில் சங்கும்
மறு கையில் சக்கரமும் ஏந்தி
சண்டையிடும் இரு கெண்டைகள் போன்ற
என் கண்களிலே கண்ணீர் அரும்ப
பிரிவின் தாபத்தைத் தந்துவிட்டு
நீர் வளமிக்க திருவரங்கம்  தம் ஊர் எனக்கூறிச்
சென்று விட்டார்
என் கைகளில் சங்கு வளைகள் கழன்று போயின
என்ன பாவம் செய்தேனோ?
2076
மின்னல் போல் அவர்  திருமேனி
பெருத்த தோள்கள்
கம்சனின் யனையைக்கொன்ற கைகள்
மற்றும்
அவரது திருக்கண்களும்
திருவாயும் கண்டேன்
வளர்ந்த இடத்தைக்காட்டிலும்   சிறப்பு மிகுந்து
நறுமணம் கொண்ட
திருத்துழாய்  மாலையின் கீழே
தாழ்ந்து விளங்கும் மகர குண்டலங்களை
எனக்குக்காட்டி
என் அழகு
என் அடக்கம்
என் நெஞ்சம்
என் கை வளைகள்
எல்லாம் கொள்ளை கொண்டார்
அவர் என்னைத் தன்  அடிமையாக்கிவிட்டு
பொன்னிறமாய் மலர்ந்துள்ள
சுர  புன்னைச்சோலை
அச்சோலையூடே  உள்ள
நீர் வளமிக்க திருவரங்கம் தம் ஊர்
எனச் சொல்லிப்போய்விட்டாரே.         
2077
சோலையெங்கும் தேன் வெள்ளம்
அங்கே
மலர்ந்துள்ள பூக்களிலே தேன் குடித்துத்
துணையுடன் மகிழ்நதிருக்கும்
மேனியெல்லாம் புள்ளி கொண்ட
ஆறுகால் சிறுவண்டே!
உன்னை வணங்குகின்றேன்
பசுக்கூட்டங்களை விரும்பி மேய்த்தவன்,
வானவர் தலைவன்,
அழகிய திருவழுந்தூரிலே உறைபவன்
அவனிடம்
நீ இன்றே போய்
அஞ்சாமல் அவன் எதிர் நின்று
‘ஒரு பெண் நின்பால் ஆசை கொண்டாள்’ என்று
கொஞ்சம் சொல்லிப்பாரேன்.
2078
துணையுடன் சேர்ந்ததால்
மதிமயங்கி நிற்கும்
செங்கால் நாரையே!
இன்றே திருக்கண்ணபுரம் போ
அங்கு சென்று
என் மீது காதல் கொண்டவரும்
எனது துணைவருமான
செந்தாமரைக்கண்ணனிடம்
என் பெருங்காதலை உரைத்திடுவாய்
அப்படி நீ சொல்வாயாயின்—-
அந்த இன்பத்துக்கு ஈடே இல்லை
அதற்காக நான்
இந்தப் பசுஞசோலையையெல்லாம் உனதாக்கி
வயல்களிலே மீன்களை  நீ உண்ணத்தருவேன்
பின்னர் நீ
உன் துணையோடு இங்கு வந்து
மகிழ்வோடு
பரந்த இப்பூமியிலே பேரின்பம் பெறலாமே.
2079
தோழீ!
தென் இலங்கைக்கோட்டையைச் சிதறடித்து
அரக்கன் இராவணனை அழித்தவரை,
மூவுலகும் அளந்தவரை,
பாரதப்போரிலே
மன்னர்கள் யாவரும் மாள
ஒரு தேரைச்செலுத்தியவரை,
மலை போன்ற உருவங்கொண்ட
பெரிய யானை போன்றவரை,
என்ன செய்யப்போகிறேன் தெரியுமா?
பொன் பூத்த என் மார்பகத்தில் இறுக்கிக்கொண்டு
அவரைப் போகவிடமாட்டேன்
என் பிரிவுத்துயரெல்லாம் அவர் எதிரே காட்டி
என் அங்கமெல்லாம் என்னிடம் மீண்டு வர
எப்பொழுதும் அவரையே நினைத்திருப்பேன் நானே.
 (ஆழ்வார் தமக்கு வேறு போக்கிடம் இல்லாமையை சொல்வது )
2080
அன்று
ஆயர் குலமகள் நப்பின்னையின் நாயகன்
பாற்கடல் கடைந்த மாதவன்
அக்கடலிலே அணை கட்டிய அண்ணல்
குன்றா வலிமை கொண்ட இராவணனைக்
கொடும் வில்லெடுத்து
அம்பால்  துளைத்து வீழ்த்தி
குலம் அழித்த வெற்றி வீரன்
குன்றைக் குடையாய்ப்பிடித்த தோள்கள் கொண்டவன்
குளங்கள் நிறைந்த திருவிண்ணகரிலே
எப்பொழுதும் உறைபவன்
குளிர்ந்த குடந்தையில் பள்ளி கொண்ட பெருமான்
இத்தகு பெருமை மிகு பெருமானை
நாய் போலும் தாழ்ந்த நான்
நினைத்திருந்தேனே!
2081
முனிவர்களும் தேவர்களும் வணங்க
அன்னமாய்ப் பிறப்பெடுத்து
அரிய வேதங்களை வெளியிட்ட
எம்பெருமான் குறித்து
மணிமாடங்கள் நிறைந்த
திருமங்கை நகர் மன்னரும்
சிறந்த வேற்படையையுடையவரும்
எதிரிகளை வென்றவருமான
திருமங்கையாழ்வார்
மின்னலோடு தவழ்ந்து வரும் மேகவண்ணனே,
வானவர் தலைவனே
அருள் செய்வாய் எனப்பாடிய
தமிழ் நூலான  இப்பாமாலையை  ஓத வல்லார்
பழவினை நீங்கிப் பயனுறுவாரே!

(திருநெடுந்தாண்டகம்  முற்றிற்று )

                  ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
Advertisements
This entry was posted in Nalayira Divya Prabandham and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s