குலசேகராழ்வார் 

குலசேகராழ்வார் சேர நாட்டை ஆண்ட மன்னர். திருமாலிடம் கொண்ட பக்தியினால் அரச பதவியைத் துறந்து அடியார் கூட்டத்தோடு கலந்து பரமன் புகழ் பாடியவர். இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு.

நாலாயிரத் திவ்யப்பிரபந்தத்தில் இவரது பங்களிப்பு பெருமாள் திருமொழி. இது 105 பாசுரங்கள் கொண்டது. இராமாவதாரத்தையும் கிருஷ்ணாவதாரத்தையும் சிறப்பிக்கும் பாடல்கள் இவை. இவற்றில் ஐந்தாம் திருமொழியில் வித்துவக்கோட்டுப் பெருமானை வேண்டிப்பாடும் வித்துவக் கோட்டுப்பாசுரங்கள் பிரபந்தத்தின் சிறந்த பகுதிகளில் ஒன்று. இந்த வித்துவக்கோடு கேரளத்தில் பட்டாம்பியிலிருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ள உய்ய வந்த பெருமாள் கோவில் என்கிறார்கள். வித்துவக்கோட்டுப்பெருமானைப் பாடும் பத்துப்பாசுரங்களிலும் இவர் எடுத்தாளும்  உவமைகள் மிக அழகானவை.

இனி வித்துவக்கோட்டுப்பாசுரங்களின்  எளிய தமிழ் வடிவம்:

பெருமாள் திருமொழியில்  ஐந்தாம் திருமொழி

வித்துவக்கோட் டுப் பெருமானை வேண்டுதல்.

688.

மண ம் பரப்பும் மலர்ச்சோலைகள் சூழ்

வித்துவக்கோட்டுப்பெருமானே!

பெற்ற தாய் அரிதாக வரும் பெருங்கோபத்திலே

வெறுத்துத்தள்ளிய பின்னாலும்

குழந்தையோ

தாயின் கருணை வேண்டித்தான் அழுகிறது

அதுபோல்

இறைவா

நீ தந்த துயரத்தை

நீ நீக்காவிட்டாலும்

உன்னையல்லால் வேறு கதியேது எனக்கு.

689.

விண்ணைத்தொடும்  மதில்கள் சூழ்

வித்துவக்கோட்டுப் பெருமானே!

பார்ப்பவர்கள்   இகழும்படி

கணவனானவன் வெறுக்கத்தக்க செயல்களைச் செய்திடினும்

குலமகள் என்னவோ

அவனையே தான் நினைத்திருப்பாள்

மாற்றானை நினையாள்

அதுபோலே

என்னை அடிமை கொண்டவன் நீ

என் குறைகளைக் களைந்து

நீ

என்னை ஏற்று அருளாவிடினும்

ஒலிக்கின்ற வீரக்கழல் கொண்ட

உன் திருவடிகளையே சரண் புகுவேன்.

690.

மீன்களெல்லாம் ஆசையோடு நோக்கும்

பரந்த வயல்கள் சூழ்

விததுவக்கோட்டில் எழுந்தருளியுள்ள பெருமானே !

மக்களைக் காக்க வேண்டியவன்

மாலையணிந்த மன்னவன்

அவன்

துன்பங்கள் இழைத்த  போதிலும்

அவனது நல்லாட்சியை  எதிர்பார்த்திருக்கும்

குடிமக்கள் போல்

என்னை நீ அருள் கொண்டு நோக்கி

அருளாயாயினும்

உன்னையே சரணைடைவேன்  நான்.

691.

வித்துவக்கோட்டுப்  பெருமானே!

நோயுற்ற உடம்பின் பகுதியை

கத்தியால் அறுத்தும்

தீயால் சுட்டும்

நோயைத்தீர்ப்பான்  மருத்துவன்

ஆனாலும்

அவன்பால் நீங்காத அன்பு கொள்வான் நோயாளி

இறைவா!

நீ உன் மாயத்தால் (விளையாட்டுப் போல்)

எனக்கு மீளாத்துயர் தந்தாலும்

உன் அடியாராக ஆவதற்கு

நான்

உன் கருணையை வேண்டி நிற்பேன்.

692.

கம்சனின் யானை  குவலயா பீடம்

கொடிய சிவந்த கண்கள் அதற்கு

அந்த யானையைக் கொன்றவனே!

வித்துவக்கோட்டுப் பெருமானே!

அலையெறியும் கடலிலே

பாய்மரக்கப்பலில் ஒரு பெரிய பறவை

கரையைத் தேடி

நான்கு திசைகளிலும் பறந்தது

கரையை எங்குமே காணோம்

மீண்டும் வந்தது கப்பலின் உச்சிக்கு

அதுபோலே

உன் திருவடிகள் தான் என் புகலிடம்

வேறு எங்கு செல்வேன் நான்.

693.

சிவந்த நெருப்பின் வெம்மைக்கு

செங்கமலம் மலராது

வானத்துச் சூரியனின் ஒளியில்தான் மலரும் அது

வித்துவக்கோட்டுப் பெருமானே!

என் கொடுந்துயரங்களை

நீ  தீர்க்காது போனாலும்

உன் எல்லையில்லாச் சிறப்புக்கன்றி

வேறு  எதற்குமே

என் மனம் குழைந்து உருகாது.

694.

எவ்வளவு காலம் வானம் பொய்த்தாலும்

வாடிய பயிர்களெல்லாம்

வானில் தோன்றும் கருமேகங்களையே பார்த்திருக்கும்

அதுபோலே

வித்துவக்கோட்டுப் பெருமானே!

நான் பட வேண்டிய துன்பங்களை

நீ போக்காது போனாலும்

அடியேனின் மனம்

உன்னிடமே நிலைத்திருக்கும்.

695.

மேக வண்ணனே!

வித்துவக்கோட்டுப் பெருமானே!

பெருக்கெடுத்துப் பாய்கின்ற ஆறுகள் யாவும்

பரந்து ஓடி….

கடைசியிலே ஆழ்கடலில் சேர்வதுபோல்

என் நெஞ்சில் நிறைந்தவையோ

உன் சீர்மிகு குணங்களே தான்

என் உள்ளத்தில்

வேறு எதற்கும் இடமில்லை புண்ணியனே!

696.

மின்னலைப்போல் ஒளிரும்

சக்கராயுதத்தை உடையவனே!

வித்துவக்கோட்டுப் பெருமானே!

பெருஞ்செல்வம் வேண்டான்

உன்னையே வேண்டி நிற்பான்

அவனிடமோ

செல்வம் வந்து சேரும் தானாக

அதுபோலே

உன் மாயத்தால்

என்பால் நீ இரக்கம் காட்டாவிடினும்

உன்னையே வேண்டி நிற்பேன் நான்.

697.

வித்துவக்கோட்டுப் பெருமானே !

நீ என்னை அடிமை கொண்டு

அருளமாட்டாய் ஆயினும்

உன்னையல்லால் வேறு கதியில்லை எனக்கு.

“உன் திருவடிகள் மேல் ஆசை கொண்டேன்”

என

வேலாயுதமும்

சேனையும் உடைய

குலசேகரர் பாடிய

இத்தமிழ்ப்பாசுரங்கள் பத்தினையும் பாடுவோர்

நரகம் புகார்.

Advertisements
This entry was posted in Nalayira Divya Prabandham and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s