திருப்பாணாழ்வார்

பன்னிரு ஆழ்வார்களில் திருப்பாணாழ்வார் சோழநாட்டின் தலைநகராயிருந்த உறையூரில் அவதாரம் செய்தவர். இவர் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச்சேர்ந்தவராக இருக்கக்கூடும். கீழ்க்குடி எனக்கருதப்பட்ட பாணர் குலத்தில் பிறந்ததனால் தன் கால்களால் திருவரங்கத்தை தீண்டலாகாது என காவிரியின் தென்கரையிலிருந்து கொண்டே யாழ் மீட்டி பெருமாளைப்பாடியும் வணங்கியும் வந்தார். இறைவனின் சந்நிதானத்தில் சாதி பேதங்களுக்கு இடமில்லையாதலால் அரங்கன் கருவறையிலேயே திருப்பாணாழ்வாருக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்தார். அரங்கனைக் கருவறையிலேயே தரிசிக்கும் பேறு பெற்ற ஆழ்வார் “அமலன் ஆதி பிரான்” எனத்தொடங்கும் பத்துப்பாசுரங்களில் அவனது பேரழகை வருணித்தார். இந்தப்பத்துப்பாசுரங்களும் நாலாயிரத்திவ்யப்பிரபந்தத்தின் முதலாயிரத்தில் உள்ளன.
அவற்றின் எளிய தமிழ் வடிவம் இங்கே
அமலன் ஆதிபிரான்
1.
அப்பழுக்கற்றவன்
உலகமனைத்துக்கும் காரணமானவன்
எனக்கு உதவி செய்பவன்
கீழ்க்குடியில் பிறந்த என்னைத்
தன அடியார்கள் அறியும்படி செய்த ஒளி மிக்கவன்
வானவர் தலைவன்
மணம் பரப்பும் சோலைகள் நிறைந்த
வேங்கட மலை வாசன்
நான் கேட்காமலேயே
என்னை ஆட்கொண்ட பேரொளி அவன்
அடியார்களின் குற்றங்களை மன்னிக்கும்
குற்றமற்ற எம்பெருமான்
பரமபதத்திலே நிலை கொண்டவன்
நீண்ட மதில்களை உடைய திருவரங்கத்திலே
கண் வளரும் தலைவன்
அவன் திருவடித்தாமரைகள்
தானே வந்து
என் கண்களுக்குள் புகுந்து நிற்கின்றனவே !
2.
உவகை பொங்கும் உள்ளத்தான்
உலகையே அளந்தவன்
அண்டங்களை முட்டும் பெரிய திருமுடி உடையவன்
அன்று எதிர்த்து வந்த அரக்கர்களின் உயிர் மாய்த்த
அம்புகளை உடைய இராமபிரான்
மணம் கமழ் சோலைகள் சூழ் திருவரங்கத்திலே
கண் வளர்ந்து அருளுகின்ற எம்பெருமான்
அவன் இடையில் அணிந்திருக்கும் சிவந்த ஆடையின் மேல்
சென்றது என் சிந்தனையே!
3.
மந்திகள் கிளைக்குக் கிளை தாவியபடியிருக்கும் திருமலையிலே
பெருமாளை வானவர்கள் மலர்களால் ஆராதிப்பர்
பாம்பணை மேல் பள்ளிகொண்ட பரமன்
அவன் இடையில் அணிந்திருக்கும் சிவந்த ஆடை
அதற்கு மேலே பிரமனைப்படைத்த நாபிக்கமலம்
இவற்றிலெல்லாம்
என் உள்ளத்திலுள்ள நல்லுயிர் தோய்ந்ததுவே!
4.
நாற் சதுர வடிவில்
மதில்களால் சூழப்பட்ட இலங்கை
அதன் மன்னன் இராவணன்
போரில் அவனைத்தோற்கடித்து
அவன் தலைகள் பத்தையும் உதிரச்செய்த
கூரிய அம்பை எய்தவன்
குளிர்ந்த கடல் போல் வடிவுடையவன்
வண்டுகள் இன்னிசை பாட
அதற்கேற்ப
வண்ண மயில்கள் ஆடும் திருவரங்கம்
அங்கே பள்ளி கொண்டிருக்கும் ரங்கன்
அவன் திருவயிற்றிலே அணிந்திருக்கும் ஒட்டியாணம்
என் நெஞ்சோடு ஒன்றி உலாவருகின்றதே!
5.
என் பழைய பாவங்களின் பெருஞ்சுமையை இறக்கி
அவற்றின் தொடர்பையும் துண்டித்து
என்னைத்தன்பால் அன்புடையவனாக ஆக்கி வைத்தா ன்
அது மட்டுமா?
என் உள்ளத்திலும் புகுந்து விட்டான்
இதற்கு நான் கடுந்தவம் செய்தேனா என்ன?
எனக்குத்தெரியவில்லையே?
பிராட்டி குடியிருக்கும்
திருவரங்கனின் மாலையணிந்த மார்பு
என்னை ஆட்கொண்டதே!
6.
பிறைச்சந்திரனைச்சடையில் சூடிய சிவன்
அவன் ஒருமுறை பிச்சை எடுத்துத்திரிந்தான்
அந்த சிவனின் துயர் களைந்தவன் எம்பெருமான்
அழகிய சிறகுகள் கொண்ட வண்டுகள் வாழும்
சோலைகள் சூழ் திருவரங்கத்திலே பொருந்தியவன் ரங்கன்
இந்த உலகம்
அதிலுள்ள மக்கள்
வெளி
பூமி
ஏழு மலைகள் என
அனைத்தையும் விழுங்கியது அவன் கழுத்து
அத்திருக்கழுத்து என்னை நற்கதிக்குச் செலுத்தியதே!
7.
அரங்கன் தன் கரங்களிலே
சுழியை உடைய சங்கையும்
அனல் உமிழும் சக்கரத்தையும்
ஏந்தி நிற்கின்றான்
பெரிய மலை போல் அவன் மேனி
துளசி மணம் கமழும் அவன் திருமுடி
அவன் என் தெய்வம்
அரங்கத்திலே பள்ளி கொண்டு
பாம்பணைமேல் சாய்ந்துள்ளான்
அந்த மாலவனின் பவளவாய்
என் மனதைத் தன் பக்கமாய்க் கவர்ந்துகொண்டதே!
8.
இரணியன் பெரிய உருவினன்
பிரகலாதனைக்கொல்ல வந்த அவனைக்
கிழித்துப்போட்டார் பெருமாள்
தேவர்களாலே
அணுகவும் முடியாத
உணர்ந்து மகிழவும் இயலாத அரியவர்
அந்த ஆதிபிரான்
அனைத்துக்கும் முழுமுதற்காரணம்
அந்த அழகிய மணவாளன்
அவனது முகத்தில்
கறுத்த நிறத்திலே
அகன்று
ஒளி வீசி
செவ்வரி படர்ந்து
காதளவும் நீண்ட அந்தக் கண்கள்
என்னைப்பித்தனாக்கி விட்டனவே!
9.
பெரிய ஆலமரத்தின் சிறியதோர் இலையிலே
பாலகனாய்ப்பள்ளிகொண்டு
ஏழு உலகங்களையும்
தன் திரு வயிற்றில் வைத்துப்போற்றினவன்
திருவரங்கத்தில்
பாம்பணை மேல் பள்ளிகொண்டவன்
அவனது அழகிய மணிமாலையும்
முத்து மாலையும்
எல்லையில்லாப்பேரெழில் கொண்ட நீலமேனியும்
ஐயோ!
என் நெஞ்சத்தைக்கொள்ளை கொண்டதே!
10.
மேகவண்ணன்
ஆயர் குலத்தில் உதித்து
வெண்ணெய் உண்டவாயன்
என் உள்ளம் கவர்ந்தவன்
வானவர் தலைவன்
பூமியை அலங்கரிக்கும் திருவரங்கத்தில்
கண் வளரும் எம்பெருமான்
அந்த அழகிய மணவாளணைக்கண்ட என் கண்கள்
வேறொன்றையும் காணாவே!
Advertisements
This entry was posted in Nalayira Divya Prabandham and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s