ஓர் இலக்கண வித்தகனின் இறுதி யாத்திரை

ஓர் இலக்கண வித்தகனின் இறுதி யாத்திரை
(ஒரு நாடகத் தனிமொழி)
ராபர்ட் ப்ரௌனிங்

கவிதையைப் பற்றி

நாடகப்பாக்கள் (Dramatic Lyrics) நிரம்பிய “Men and Women” என்ற ராபர்ட் ப்ரௌனிங்கின் (Robert Browning) நூலிலிருந்து எடுக்கப் பெற்ற “A Grammarian’s Funeral” என்பதின் தமிழாக்கமே இந்த நாடகத் தனிமொழி.

“வாழ்க்கையைப் பற்றிய கல்வியைக் கற்பதில் குலையா ஆர்வம் கொண்ட ஒரு இலக்கணப் பேராசிரியன் இறந்துவிடுகிறான். அவருடைய சீடர்கள் அவரை இருள் நிறைந்த மலையடிவாரத்திலிருந்து ஒளி மிகுந்த மலையுச்சிக்கு அடக்கம் செய்வதற்காக இருள் பிரியும் அதிகாலை நேரத்திலே தூக்கிச் செல்கின்றனர். செல்லும் வழியெல்லாம் அவரது சீடர்களில் முதன்மையான ஒருவன் அவருடைய புகழை எடுத்தியம்பிக்கொண்டே செல்கிறான். சவ ஊர்வலத்தை அற ஊர்வலமாக்கிய பெருமை அவனைச் சேர்கிறது.

————————————————————————————————————————————–

நம் இலக்கண வித்தகனின் உயிரற்ற இந்த உடலை அவனுடைய புகழினைப் பாடியவாறு மலை முகட்டிற்கு எடுத்துச் செல்வோம்.

முளையிலே கட்டப்பட்ட மேய்ச்சல் பசு அந்த முளையையே சுற்றிச் சுற்றி வந்து மேய்வது போல வெகு சாதாரண அறிவும் குறுகிய நோக்கமும் கொண்ட இந்தப் பண்ணை வீடுகளையும்,கிராமங்களையும் விடுத்து நாம் மேற்செல்வோம். இவை தாயின் மார்பில் குழந்தை உறங்குவது போல உறங்கட்டும்.

அதோ பாருங்கள்! மலையுச்சியிலிருக்கும் பாறைகளின் மேற்பரப்பில் காலைக் கதிரவனின் ஒளிக்கதிர்கள் படிந்திருப்பதை. அந்த இடமே நம் பேரறிவாளனைப் புதைப்பதற்கேற்ற இடம். கிண்ணியிலே சாம்பிராணிப் புகை குமுறி எழுவதைப் போல அந்த இடத்திலே மனிதனின் தூய சிந்தனை மணம் பரப்பத் துடிதுடிக்கும். ஆடுகளும் கழனிகளும் நிறைந்திருக்கும், படிப்பும் பண்பாடுமற்ற இப்பூமியிலிருந்து விலகி – பண்பாட்டில் உயர்ந்து வானளாவி நிற்கும் மலையுச்சியில் மேகங்கள் சூழ்ந்ததும், கோட்டை போன்றதுமான ஓரிடத்தை நம் பெரு மகனைப் புதைப்பதற்குத் தேர்ந்தெடுப்போம்.

நாம் செல்லும் பாதை இதோ வளைந்து வளைந்து முன்னோக்கிச் செல்கிறது. முன்னெச்சரிக்கையுடன் நாமும் முன்னேறிச் செல்வோம்.

சாதாரண மனித்ர்களாகிய நாம் எவ்வித உயர்வும் பெறாமல் அறியாமையில் கிடந்துழன்று, இந்த இருண்டப் பள்ளத்தாக்கிலே வாழ்ந்து மடிவதைப் போல மடியலாம். ஆனால் நமது பேராசிரியர், காலைச் சூரியனின் கதிர்கள் முதன் முதலில் படரும் மலை முகட்டில் இருக்கவேண்டியவர். அங்கே அறிவும் ஆத்மாவும் மலர்ச்சியுறுகின்றன. நம் பெருமகனை நாம் சுமந்து செல்வதைக் காண்பவர்கள் நம்மால் கவரப்பட்டு நம்மைக் கவனித்தல் வேண்டும். எனவே சாயாத தலையுடன் நெஞ்சு நிமிர்த்தி சீராக நடக்கவும். இச்சவ ஊர்வலத்தை ஓர் அற ஊர்வலமாக்கிக் காட்ட வேண்டும்.

புகழ் மிக்க நமது பேராசிரியர் உயிர் நீத்து அமைதியடைந்து விட்டார். கல்லறையில் காலமெல்லாம் அவரை உறங்க வைக்க நாம் நமது தோள்களிலே அவருடலைச் சுமந்து செல்கிறோம்.

பண்ணை வீடுகளும் கிராமங்களும் இன்னும் துயிலில் ஆழ்ந்துள்ளன. அங்கே இன்னும் விடியவில்லை. ஆனால் அதோ உயர்ந்து நிற்கும்மலைச்சிகரத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இப்பெருமகனோ சொல்லொணா அழகு மிக்க கலைக் கடவுளின் முகக்காந்தியையும், உடல்வனப்பும் ஒருங்கே அமையப்பெற்றவர். யாரும் அறியாமலே இவர் நீண்ட காலம் வாழ்ந்திருந்தார். மனித வாழ்க்கையின் வசந்தமான இளமைப்பருவத்தை இவர் கற்பதிலேயே கழித்து விட்டார். வசந்தம் குளிர் காலம் வரப் போவதைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. அதுபோலவே நம் பேராசிரியரின் மனதில் எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்களும், மூப்பு பற்றிய உணர்வும் தோன்றவேயில்லை. கண்ணிமைப் பொழுதிலே இளமை கழிந்தது. மூப்பின் முத்திரைகள் அவருடலைப் பற்றிக்கொண்டன. “இவ்வுலகில் எனது ஆட்டபாட்டமெல்லாம் ஓய்ந்துவிட்டது. என் பங்கை நான் முடித்து விட்டேன். இப்பொழுது இளைஞர்களாகிய நீங்கள் உங்களுக்கே உரித்தான பாணியில் நான் முடிக்காமல் விட்டுச் செல்லும் பணியை நிறைவேற்றி வைப்பீர்களாக“ என்று நம் உலகத்தவரைப் போல அவர் கூறவில்லை.

அவர் நம் உலகத்தவருள் ஒருவரல்லர். மற்ற மனிதர்கள தன் மீது காட்டிய இரக்கத்தின் பிரதிபலிப்பிலேயே அவர் தனது மூப்பின் அடையாளங்களை முழுதுமுணர்ந்தார். ஆனால் அந்தக் கருணையை அவர் பெருமையுடன் ஒதுக்கிவிட்டுத் தன் கருமமே கண்ணாயினார். வேகமாகக் கழிந்து செல்லும் தன் வாழ்நாளை மனதிலிறுத்தி, பேரார்வத்துடன் தன் சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியையும் கற்பதன் மூலம் பயன்மிக்கதாக ஆக்கப் பெரிதும் முயன்றார். புலவர்களும், மெய்யறிவாளரும் தமது அறிவின் பயன்களையெல்லாம் கொட்டி, மனித வாழ்க்கையைப் பற்றிக் கணித்து வைத்திருக்கும் மதிப்புமிக்க பல நூல்களை நம் வித்தகர் முற்றும் கற்றுணர்ந்தார். இவ்வாறு அவர் தன்னை அறிவுத்துறைக்கே முழுதும் அர்ப்பணித்துக் கொண்டார். பழங்கால அறிவுக் கருவூலங்களை ஒன்று விடாமல் கற்றுத் தேர்ந்தார்.

அபூர்வமான வித்தகராகவும் நாம் அவரைக் கண்டோம், வழுக்கைத்தலை, பஞ்சடைந்த கண்கள், மூப்பினால் வாய்குழறிப் பேசும் பேச்சு – இவற்றினை உடையவராகவும் நாம் அவரைப் பார்த்தோம்.

இந்த நிலையிலுள்ள எந்த மனிதனும் “எப்படி வாழ்வது” என்று ஆராய்வதை விட்டு வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்கியிருபான்.

ஆனால் இந்த மனிதரோவெனில், “பொறுத்திருங்கள்! உண்மையான வாழ்வு பின்னர்தான் வருகிறது. அறிவுநூல் பகர்கின்ற அனைத்துக் கருத்துக்களையும் முழுதுமுணர்ந்து விட்டேன். இன்னும் அவற்றின் விவரணம் எஞ்சியிருக்கிறது. தெரிந்து கொள்ள வேண்டுவன என்னென்ன இருக்கின்றனவோ அவையெல்லாவற்றையும் நான் அறிந்து கொள்ள விரும்புகின்றேன். ‘கடினமான கருத்துக்களையும், சீரிய கருத்துக்களையும் மட்டும் அறிந்து கொண்டால் போதும் என அறியாமல் என்னிடம் பிதற்றாதீர்கள். எளியவற்றையும் சாதாரணமான கருத்துக்களையும் கூட அறிந்து கொள்ள நான் ஆவலுடையவனாயிருக்கிறேன். எல்லாமே எனக்குப் பெருமதிப்பு வாய்ந்தவை தான். _ அறிவுப் படையலிலே ஒரு சிறு துணுக்கைக் கூட விட்டுவைக்க எனக்கு விருப்பமில்லை. இதனால் என் அறிவுத் தாகம் மேலெழும்புமேயொழிய ஒரு நாளும் நான் சோர்ந்து போய்விடமாட்டேன்.” எனக் கூறினார்.

வாழ்க்கையைப் பற்றிய அனைத்து விவகாரங்களையும் கற்ற பின்னர் எத்துணை பிரகாசமான வாழ்க்கையை வாழ அவர் எண்ணியிருந்திருக்கிறார். வாழ்க்கையைப் பற்றி முழுமையாக அறியும் வரையில் அவர் வாழவே விரும்பவில்லை.

ஒரு கட்டடக்கலைஞன் எவ்வாறு தான் கட்டவேண்டிய கட்டடத்தின் முழு உருவை மனதில் பதித்து அதன் பின்னர் தனது வேலையாட்களை சுண்ணங்குழைக்கவும், சாந்து பூசவும் ஏவுகின்றானோ – அதைப்போல, நமது பேராசிரியர் ஒரு கலைஞனுக்கேயுரிய மனப்பாங்குடன் வாழ்க்கையின் பல்வேறு கோணங்களையும் ஆய்ந்தறிந்த பின்னர் அவற்றை வாழ்ந்து பார்க்க திண்ணங்கொண்டார்.

“அங்காடிப் பகுதியை அடைந்துவிட்டோம். இதோ! மக்கள் வாயைப் பிளந்தவாறு சோம்பல் மிக்க ஆவலுடன் நம்மைப் பார்க்கின்றனர். எனவே இதயம் விம்மிப் பொங்குமாறு நாம் ஒன்று சேர்ந்து குரலிசைப்போம்.”

வாழத்தொடங்குமுன் எவ்வாறு வாழவேண்டும் என்று கற்றுணர ஆவல் கொண்ட இப்பெருமகனின் கொள்கை சிறப்புமிக்கதொன்றே. ஆம்! இவர் “கல்லாதது உலகளவு” என்ற பேருண்மையை உணர்ந்த சீரிய பண்பாளர். உயர்ச்சி பொருந்திய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பதற்காக இவர் தன் வாழ்நாள் முழுவதும் அதற்கான அறிவைப் பெறுவதிலேயே கழித்துவிட்டார்.

தான் பெற்ற இந்த அறிவுப் பெட்டகத்தை மறுமையில் பயன்படுத்தி முழுமை நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு நிச்சயம் இறைவன் தன்னை அனுமதிப்பான் என்ற குலையா நம்பிக்கை கொண்டொழுகினார் இவர்.

மற்ற மனிதர்களுக்கு மறுமையில் நம்பிக்கையில்லை. ‘காலச்சக்கரம் வேகமாகச் சுழல்கிறது. நாளை நம்முடையதல்ல; இன்று என்பதுதான் உண்மை. எனவே இப்பொழுது வாழ்ந்திருப்போம். இல்லையெனில் வாழ்க்கையை நாம் இழந்தவராவோம்’ என அவர்கள் அறியாமையால் அரற்றுவார்கள்.

ஆனால் நம் வித்தகனோ, ”காலமென்பது நமது கற்பனையின் ஒரு வெற்றுத் தோற்றம்தான். இம்மையிலே நாகரிகமற்ற மிருகங்கள் வாழ்ந்து போகட்டும். மனிதன் என்றைக்கும் அழியாவரம் பெற்றவன். அவனது உயர்வே அதில்தான் அடங்கியிருக்கிறது.” என அறிவுரை கூறி அதனைத் தானும் கடைப்பிடித்தார்.

எனவே, அவர் தன் கல்வியை மீண்டும் தொடர்ந்து அதிலே ஆழ்ந்து போனார். பிணிகள் அவரைப் பிடுங்கித்தின்றன. சிறுநீரகத்திலே கல்தோன்றி அவரைப் படாதபாடு படுத்தியது. சளிக்காய்ச்சல் ஏற்பட்டு இருமலால் அவர் மிகவும் துன்புற்றார். அவரது கண்கள் பஞ்சடைந்து வெள்ளியதாயின. சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளும்படி அவரது சீடர்கள் அவரை வற்புறுத்தினர். ஓய்வைப் பற்றி எண்ணிப் பார்க்கக் கூட அவர் மறுத்துவிட்டார்.

“இங்கே பாதை மிகக் குறுகலாயும் வளைந்தும் காணப்படுகிறது.
எனவே எச்சரிக்கையோடு இருவர் இருவராகச் செல்வோம்.”

இத்தனை இன்னல்களையும் அவர் இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டார். முன்பைவிடப் பதின்மடங்கு தணிக்கவொண்ணாப் பேரூக்கத்துடன் தனது அறிவைப் பேணி வளர்க்க ஆரம்பித்தார். முதலைக்கேயுரிய தனித்த சக்தியுடனும், வேகத்துடனும் நம் பேராசிரியர் தனக்கெழுந்த தணியாத ஆத்ம தாகத்தையும், அறிவுத் தாகத்தையும் அறிவூற்றுக்களிலே ஊறித் தணித்துக் கொண்டார்.

“நிறைவு பெற்றதொரு வாழ்க்கையை நாம் வாழ வேண்டுமானால் எல்லையற்ற பொறுமை உடையவர்களாயிருத்தல் வேண்டும். நமது செயல்கள் முழுமை பெறும் முன்னே அவசரத்தில் படபடத்து, பலனைத் துய்க்க விரும்பினால் நாம் நிச்சயம் வாழ்க்கைப் பேரத்திலே தோற்றவராகி விடுவோம். எனவே செயல்கள் முற்றுப்பெற்று முழுமை பெறும்வரை அமைதியாயிருத்தல் சாலச் சிறந்தது; கனியிருப்பக் காய் கவர்தல் முறையன்று” என அவர் அறிவின் தலைவாயிலில் நின்றுகொண்டு நமக்கு உபதேசித்தார். “இறைவனிடத்தில் என்னை அர்ப்பணித்துக் கொள்வதென்பது உயர்ந்த ஒளிமயமான ஒரு சிந்தனை. அதை நான் வரவேற்கிறேன். எனது குறிக்கோள் நிறைவுபெற, எனது இவ்வாழ்க்கையில் நான் சிந்திய உழைப்பின் கனி பறிக்க, அந்த உயர்ந்த தியாகத்தை நான் எவ்விதத் தடங்கலுமின்றி ஏற்கிறேன். அதை ஒரு சுமையாகவே நான் கருதவில்லை;” என அவர் தன் இலட்சியத்தில் தீரா ஆர்வம் கொண்டு கூறினார்.

உயிர் எவ்விதம் உடலை வெற்றி கொள்கிறதென்பதை அவர் நமக்குக் காட்டினார். உடலின் துணைகொண்டு அவர் தன் மனதை விரிவுபடுத்தி ஒளி பொருந்தியதாக ஆக்கிக் கொண்டார். இதன் மூலம் அவர் உயிருக்கும் உடலுக்குமுள்ள பரஸ்பர உறவைப் பட்டை தீட்டிக் காட்டினார்.

சிறுமை மலிந்த சிற்றறிவினர் துய்க்கும் சில்லரை இன்பங்களை நாடி அவர் நிற்கவில்லை. அவர் விரும்பியதெல்லாம் வாழ்க்கையின் முடிவிலே, காலத்தின் கடை வாயிலிலே கிடைக்கும் எல்லையற்ற பேரினபத்தைத்தான். “வாழ்ந்தால் முழுமை பெற்ற புகழ் மிகுந்த வாழ்க்கை வாழ வேண்டும். அதுதான் சொர்க்கம். இல்லையெனில் இம்மண்னுலக வாழ்வைத் துச்சமென எண்ணிக் களைதல் வேண்டும். துறக்கம் எனது பெருவெற்றி; உயிர் மூச்சு; இம்மண்ணுலக வாழ்வு மாயங்கள் நிறைந்தது. இதனை நான் வேண்டேன்.” என்று இந்தப் பேரறிவாளர் உணர்ச்சி பொங்கக் கூறினார்.

இறைவனிடத்திலும் மறுமையிலும் அவர் மாறா நம்பிக்கை கொண்டொழுகினார். மயக்கமும், சலசலப்பும் நிரம்பிய இந்தப் பிரபஞ்சத்தைக் காட்டிலும் அவர் மறுமையில் வெகுவாகப் பற்று வைத்தார்.

அற்பமான மனிதனொருவனின் நோக்கம் மிகக் குறுகியதாயிருக்கும். அவன் அதைச் சீக்கிரமே நிறைவேற்றிவிடலாம். ஆனால் அந்நோக்கம் நிறைவேறிய பின் அவனது வாழ்க்கை எவ்வித நம்பிக்கையும், நோக்கமும் இன்றி வீணே கழிகிறது. ஆனால் உயர்ந்த மனித குலத் தோன்றலான நம் பெருமகனாரின் இலக்கோ ஆச்சரியப்படத்தக்க அளவுக்கு உயரத்தில் அமைந்திருந்தது. அந்த இலக்கை அடைவதற்காக அல்லும் பகலும் ஓய்வின்றித் தன் சக்தியைக் கொட்டி அவர் உழைத்தார். ஆனால் அந்தோ! கொடுமை. அவர் இலக்கை அடைய இம்மி இருக்கையில் இழுக்கின்ற விதி சதி செய்துவிட்டது. ஆனால் அந்தத் தோல்வியிலும் கூட அவர் ஒளிப் பிழம்பாகக் காட்சி தருகிறார். பள்ளத்தாக்கிலே நாம் கண்டுவந்த மடமை நிறைந்த மனிதக் கூட்டம் நிறைவு பெறாததொரு உப்புச்சப்பற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அத்தகு வாழ்வு முடிந்தவுடன் மறுமையில் முழுமையான இன்பம் எதையும் அவர்கள் எதிர் பார்க்க முடியாது. ஆனால் மதிமயக்கம் சிறிதுமின்றி, பற்றற்றான் பற்றினைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றிய பாடங்களையே உருப்போட்டு இவ்வுலக வாழ்வை இழந்துவிட்ட நம் வித்தகர் அவன் பாத கமலங்களைத் தரிசிக்கும் பேறு பெற்றவர்.

எனவேதான், காலன் வந்து கழுத்தை நெரிக்கும் அந்தத் துன்பமயமான மரணப் படுக்கையில் கூட அவர் இலக்கணத்தைத் தொடர்ந்து பயின்று கொண்டிருந்தார்.

இறப்பதற்கு வெகு சில மணித் துளிகளுக்கு முன்பு கூட நம் பேராசிரியர், இன்று வரை இலக்கண உலகில் அவிழ்க்க முடியா பெரும்புதிர்களாய் விளங்கிய சில வினாக்களுக்கு விடை பகன்றார். தன்னுயிரே இம்மண்ணுலகை விட்டு மறையப் போகும் இறுதி நிலையில் வார்த்தைகளின் இறுதி நிலைகளாகிய விகுதிகளைப் பற்றி சிறப்பானதொரு விரிவுரை நிகழ்த்தினார்.

நன்று! இறுதியில் நாமும் அவர் துயில்வதற்கேற்ற இடத்தை அடைந்து விட்டோம். இதோ! அந்தச் சிகரம். நீண்ட, வலிய, தங்கள் சிறகுகளை விரித்துக் காற்றினுங்கடிது சென்று விண்ணைத்தொடவல்ல பறவை இனங்களுக்கு மிகவும் பிடித்தமான சிகரமிது.

பள்ளத்தாக்கிலே பாமர மக்கள் கால் நடைகள் வாழ்வது போன்று சாரமற்ற, இழிவான வாழ்க்கையை வாழ்கின்றனர். ஆனால் நமது பண்பாளர் வாழ்க்கையைப் பற்றி அனைத்தையும் தெரிந்துகொண்ட பின்னரே வாழ முடிவு செய்தவர். பள்ளத்தாக்கு மக்களைப் போல இவர் வாழ்வதற்கு விரைவு காட்டவில்லை. ஆதலால் இவரை அங்கே அடக்கம் செய்வது சரியான செயல் அன்று.

இதோ! இதோ! இருக்கிறது அவர் துயிலவேண்டிய இடம். இங்கே எரி நட்சத்திரங்களும், மேகக் கூட்டங்களும், மின்னற்கீற்றுக்களும், வந்துலாவும் விண்மீன்களும் அவருக்குத் துணையிருக்கும். ஆனால் நமக்கு இவரது எண்ண வானிலே மின்னலெனத்தோன்றிய கருத்துக்கள் என்றென்றும் துணையிருப்பன. கடுவேகத்துடன் இங்கு வீசும் சுழல்காற்றே இவரது எல்லையற்ற மகிழ்ச்சி. இரவில் தூங்கும் இன்பனியே இவரது அமைதி.

எல்லா உயர்ந்த முயற்சிகளும், கருத்துக்களுமே உயர்ந்ததொரு சிறப்பான முடிவுக்கு இட்டு செல்பவைதான்.

பிரசித்தி பெற்ற இந்த அமைதி தவழும் இடத்தை இவருக்கு அர்ப்பணிப்போம்.
தன் சாதனைகளால் மட்டுமல்ல; தோல்விகளாலும்கூட இவர் புகழ் மிகுந்தவர். இவரைப் பெருமைப்படுத்தும் வழியைக் கூட இப்பேதைமை நிறைந்த உலகம் அறிந்திருக்கவில்லை.

Advertisements
This entry was posted in Translated poems and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s