320. விருந்துண்டு பரிசும் பெறுவாய் பாணனே!
பாடியவர் : வீரைவெளியனார்
திணை : வாகை (வாகைப் பூச்சூடி வெற்றி ஆரவாரம் செய்தல்)
துறை : வல்லாண் முல்லை (சீர் சால் வேந்தனின் சிறப்பைக் கூறுதல்)
—–
முன்னைக் கொடியும், முசுண்டைக் கொடியும்
பம்மிப் படர்ந்த பந்தல்
அப்பந்தலின் கீழ்
பலாப்பழம் தொங்கும் நிழலிலே
யானை வேட்டைக்காரன்
ஆழ்ந்து உறங்குகின்றான்.
பிற மான்களைப் பிடிக்கப் பயிற்சி பெற்ற இளமான்
அந்த இளமானை
வேலையற்ற ஓர் ஆண் மான் கலந்து
புணர்ச்சி இன்பத்தில் திளைக்கிறது.
அதைப்பார்க்கிறாள் அவன் மனைவி
தன் கணவனின் உறக்கம் எங்கே கலைந்துவிடுமோ
கலைமான் பிணைமானை விட்டு ஓடிவிடுமோ
என அஞ்சி
வீட்டுக்குள் சிறிதும் ஓசையின்றி
ஒரு புறமாய் ஒதுங்குகிறாள்
இந்நிலையிலே__
மான் தோலின் மேல் காயவைத்த தினையரிசியை
ஆரவாரத்தோடு
கவர்ந்துண்ட காட்டுக்கோழியும் சருகுக்கோழியும்
அவளிடம் பிடிபட்டன.
பாணனே!
சந்தன விறகிலே வாட்டிய
நறுமணமிக்க இறைச்சித் துண்டங்களோடு
ஆரல் மீன் மணம் கமழ
பெருஞ்சுற்றத்துடன் ஒருங்கிருந்து
இனிதே இங்கு உணவருந்தி,
பகை வேந்தர் குறைவின்றி கொடுத்தவை
தன் வேந்தன் தனக்களித்த செல்வம்
இரண்டையும்
நாள்தோறும் தன்னை நாடிவரும் பரிசிலர்க்குக்
குறைவின்றிக் கொடுக்கும்
தகைமைசால் தலைவன் காக்கும் ஊரிலே
தங்கிச் செல்வாய்.
இதன் மூலத்தை இங்கே காணலாம்
Advertisements